(Reading time: 21 - 42 minutes)

சாரதா தன் கணவர் பேசுவதை எல்லாம் கேட்டு கொண்டிருந்தவர், 'ஆமாம் இவர் சொல்லறது நியாயம் தானே.. இந்த பொண்ணு பொறந்தாத்தை கொஞ்சம் கூட புரிஞ்சுக்காத இப்படி பணம் பணம்ன்னு பிடிங்கினா, வேற என்னதான் பண்ணுவார் இந்த மனுஷன்' என நினைத்து கொள்ள, ரஞ்சனியோ அப்பா இப்படி பொறுமையாக தன்னோட நிலையை எடுத்து சொல்வதை கொஞ்சம் கூட லட்சியம் செய்யாமல்,

"என்னப்பா பண்றது?.. அவருக்கு இனிமேல் இன்னொருத்தன் கீழே கையை கட்டிண்டு உத்யோகம் பார்த்து சம்பளம் வாங்கறது பிடிக்கலையாம்.. இந்த வாட்டி கொஞ்சம் பணம் ஏற்பாடு பண்ண பாருங்கப்பா.. அவரோட அப்பா, அம்மா கூட பத்து லட்சம் வரை புரட்டி தரேன்னிருக்கா"

"நல்லது தானேம்மா.. இனி அவாதானே அவா பையனுக்கு செய்யனும்.. நாங்க எங்களாலை முடிஞ்சதை ஏற்கனவே செய்துட்டோம்.. நீ மாப்பிள்ளை கிட்ட எடுத்து சொல்லு.. ஏற்கனவே, இந்த வீட்டு மேலே லோன் இருக்கு.. கல்யாணிக்கு இரண்டு பொண்ணுகளுக்கு பிரசவம், சீர் இதுக்கெல்லாம் செய்ய வாங்கியிருக்கேன்.."

"ஏம்பா, நம்ம மஹதி தான் கை நிறைய சம்பாதிக்கிறாளே?.. அவ பத்து லட்சம் லோன் போட்டு கொடுக்க கூடாதா என்ன.. கூட பிறந்தவளுக்கு இது கூட செய்யலேன்னா எப்படி?" என்று ரஞ்சனி கேட்க,

"சீ.. நீ என்ன ஜென்மம் அக்கா.. எப்படி எப்படி, மஹதி லோன் போட்டு பத்து லட்சம் வாங்கி உன் ஆத்துக்காரருக்கு கொடுக்கனும்.. அவ ஆயுசு முழுக்க லோன் அடைக்கனும்.. உன்னோட ஊதாரி புருஷன் அந்த பணத்தை வாங்கி, புதுசா உருப்படாத பிசினஸ் பண்ணுவான்.. நானும் தெரியாமதான் கேக்கறேன் க்கா, இத்தனை நாளா, பிசின்ஸ்ன்னு உனக்கு நாங்க கொடுத்து நஷ்ட பட்ட பணத்தை சேர்த்திருந்தா கூட , மஹதி அக்காவுக்கு ஜாம் ஜாம்ன்னு இத்தனை நாள்ல கல்யாணமே முடிஞ்சிருக்கும்" என்று ஆத்திரமாக சொல்லியபடி வந்தான் அவளுடைய அருமை தம்பி வசந்த்.

"டேய் உன்னை கூப்பிட்டேனாடா நாட்டாமை பண்ண.. என்னவோ, எங்க போதாத வேளை உங்க கிட்ட கேக்க வேண்டியதா போச்சு.. அதுக்கு என்ன வேணா வாய்க்கு வந்தபடி பேசுவியா.. நீ யே ஒரு தண்ட சோறு?.. என்னவோ கலெக்டருக்கு படிக்கிறேன்னு ஊரை சுத்திண்டு இருக்கே?.. நீ ரொம்ப ஒழுங்கு பாரு.. முதல்ல உருப்படியா ஏதாவது ஒரு உத்யோகத்தை பார்.. நீ எங்காத்துக்காரை பத்தி சொல்ல வந்துட்டே.. பாவம் அவர், உன்னை பற்றி சரியா தெரியாமல், தான் புது பிசினஸ் ஆரம்பிச்சவுடன், உனக்கு கூட எதாவது வேலை போட்டு தரணும்ன்னு சொல்லிண்டிருக்கிறார்?" என்று ரஞ்சனி எகிற,

சமய சந்தர்ப்பம் தெரியாமல் , " ஏம்மா ரஞ்சீ உங்காத்துக்காரர் இந்தவாட்டி என்ன பிசினஸ் பண்ண போறாராம்?" என வெகுளியாக சாரதா கேட்க,

"யார்.. அத்திம்பேரா.. இந்த வாட்டி செருப்பு கடை வைக்க போறாரோ என்னவோ?" நக்கலாக வசந்த் சொல்ல,

ராமமூர்த்தியும், இதெயெல்லாம் காதில் வாங்கியபடியே அப்பொழுது அங்கு வந்த மஹதியும் சிரிக்க,

You might also like - Puthir podum nenjam... A new romantic story...

அவர்களை கண்டு கொள்ளாமல், "டேய் வசந்த்.. உனக்கு எப்படிடா தெரியும், உங்க அத்திம்பேர் இந்த வாட்டி ஷூ மார்ட் வைக்க போறார் என்று.. அவரும் அவருடைய மதுரையில் இருக்கற தம்பியுமா சேர்ந்து ஒரு செருப்பு கடை பெரிய லேவல்லை ஒரு ஷோ ரூம் அம்பத்தூர்ல திறக்கலாம்ன்னு ஐடியா வைச்சுருக்கா.. அதுக்கு தான் என் மாமியாரும், மாமனாரும் பையன்கிட்ட பேச போயிருக்கா.. அவர் ஏற்கனவே ஒரு ஷூ கம்பனியில தான் வேலை பார்க்கிறார்..என் மச்சினருக்கும், முப்பதிரண்டு வயசாரது.. கல்யாணத்துக்கு பார்க்கனும்.. இங்கேயே அவர் அண்ணவோட சேர்ந்து பிசினஸ் பண்ணா, கல்யாணம் ஆனா கூட எல்லோரும் ஒரே ஆத்துலே இருக்கலாமே.. அதான்.. எனக்கு ஒரு ஐடியா இருக்கு.. பார்ப்போம், எல்லாம் கூடி வரும் போது சொல்லறேன்.. அது சரி, டேய் வசந்த், அத்திபேர் சொல்லிட்டாரா.. அவர் கல்லாவில உட்கார்ந்திருந்தா, நீ கூட மாட வரவாளை கவனிச்சிண்டா, உதவியா இருக்கும்.. எங்க மச்சினனுக்கு மார்கெட்டிங், கொள்முதல் அது இதுன்னு சரியா இருக்கும் நம்ம மனுஷா கூட இருந்தா சௌகரியம் தானே..அதோட நீயும் ஏதாவது உத்யோகம் செஞ்சா போல இருக்குமே?.." என்றாள் ரஞ்சனி.

"ஏன் உங்க ஆத்துக்கார் கல்லாவிலே உட்கார்ந்து காலையாட்டிண்டு காசை வாங்கி பத்திரம் பண்ணுவார்.. நான் போற வரவனோட காலை பிடிச்சு செருப்பை மாட்டி சரி பார்க்கனுமா?.. ஏன் டி நீ என் கூட பிறந்தவதானே.. என்ன ஒரு சுயனலம்.. உன்னையெல்லாம் அக்கான்னு சொல்லவே அசிங்கமாயிருக்கு.. சீ.." என முகத்தில் காரி உமிழாத குறையாக திட்ட தொடங்கிய வசந்தை,

"அம்மா , உன் சீமந்த புத்திரனை நாக்கை அடக்க சொல்லு.. அப்புறம் நான் கன்னா பின்னான்னு பேசிடுவேன்" என்று கத்த தொடங்கிய ரஞ்சனியை ,

அவளது மகள் சிந்துஜா அந்த சமயத்தில் வந்து, "ம்மா.. அப்பாவுக்கு பெட் காப்பி வேணுமாம்" என்றவள், தன் பாட்டியிடம் திரும்பி,

"பாட்டி, எனக்கு ஹார்லிக்ஸ் கலந்து தரேயா?" என புடவை தலைப்பை பிடித்தபடி கேட்டாள்.

"வாடி, ராஜாத்தி, இதோ பால் சூடா இருக்கு, உனக்கு ஹார்லிக்ஸ் கலக்கறேன்.. அப்படியே உங்கப்பாவுக்கு காப்பியும் ரெடி பண்ணரேன்" .. "எல்லாரும் போய் அவாஅவா வேலையை பாருங்கோ.. அப்பறம் பேசலாம்" என்ற சாரதா, தன் பேத்தியின் கையை பிடித்தபடி சமையல் மேடைக்கு அருகே சென்றார்.

"அம்மா , இன்னிக்கு காலை என்ன டிபன்?" என ரஞ்சனி கேட்க,

"இட்லிக்கு அரைச்சு வைச்சுருக்கேன்.. கல்யாணியும், மாப்பிள்ளை பசங்களும் வேற வரா.. மொத்தமா செய்ய இட்லி, சாம்பார்தான் ஈஸி.. தோசை மாவும் இருக்கு" என்று இழுத்த சாரதாவை,

"போம்மா.. எப்பப்பாரு, இட்லி, தோசை தானா.. பேசாமல், பூரியும், உருளை கிழங்கு மசாலும் பண்ணு.. முதல்ல காப்பியை கலந்து குடு.. மணி ஏழாக போறது.. பெட் காப்பி குடிக்கலைன்னா அவருக்கு கோபம் வரும்".

காப்பியை அவள் கையில் கொடுத்த சாரதா, "பூரின்னா.. ஒவ்வொருத்தருக்கா பண்ணனும்.. நேரமாகுமே டி.. அத்தோட மத்தியான சமையல் வேற பண்ணனும்.. இன்னிக்கு மஹதிக்கு ஸ்டார் பர்த்டே.. அவளுக்கு பிடிச்சா மாதிரி வடை, பாயசத்தோடு சமைக்கலாம்ன்னு இருந்தேன்.. சாயங்காலமா பக்கத்து பிள்ளையார் கோவிலுக்கு போய் மஹி பேர்லே அர்ச்சனை பண்ணனும்"

"ஓ.. மஹி பர்த்டேவா.. மறந்தே போச்சே.. ஏதாவது வாங்கிண்டு வந்திருப்பேன்..போன வாரமே பர்த்டே டேட் முடிஞ்சுடுத்து இல்லையா.. ஹாப்பி பர்த்டே டி மஹி".. என்ற ரஞ்சனி,

"சரிம்மா.. ஒன்னு பண்ணு.. பேசாமல் இட்லி, சாம்பாரோட, காலையிலேயே வடை பாயசம் செஞ்சிடு.. மத்தியானத்துக்கு,சிம்பிளா, பிசிபேளா பாத், தயிர் சாதம் பண்ணு போதும்.. தொட்டுக் கொள்ள கரு வடாம் பொறிச்சுடு.. ஆனா ஒன்னு என் பசங்க அதெல்லாம் சாப்பிட மாட்டா.. மஹதி நல்லா பிரைட் ரைஸ் பண்ணுவா தானே.. அவ அதை மட்டும் செஞ்சா போதும்.. நான் வேணா வெங்காய தயிர் பச்சடி செய்யறேன்.. அம்மா, இன்னிக்கு நம்ம மஹி பிறந்த நாள்.. என் பசங்களும் பீச்சுக்கு போனம்ன்னு சொல்லிண்டு இருக்கா.. பேசாமா ஒன்னு செய்வோமா?.. கல்யாணியும் குடும்பத்தோட வரா.. எல்லாலோருமா சேர்ந்து பெசன்ட் நகர் அஷ்ட லக்ஷ்மி கோவிலுக்கு போலாம்.. பெருமாளை சேவிச்சா மாதிரியும் ஆச்சு, குழந்தைகளுக்கு பீச்சுக்கு போனா மாதிரியும் ஆச்சு.." என்ற ரஞ்சனியை,

"ரஞ்சீ .. என்னோட காப்பி என்ன ஆச்சு.. எவ்வளவு நேரம் வெயிட் பண்ணரது?.. உன் பிறந்தாத்துக்கு வந்தாலே என்னை கவனிக்கவே மாட்டே" என்று பெட் ரூமிலிருந்து உரக்க குரல் கொடுத்தான் சிவகுமார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.