(Reading time: 17 - 34 minutes)

பிற்காலத்தில் சுஜாதாவின் இந்த ஆசையால் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கவே தர்மசங்கடம் ஏற்படும் என்று தெரிந்திருந்தால் அப்போதே அவள் ஆசைக்கு அணை போட்டிருந்திருப்பர் அனைவரும்...

சுஜதாவின் ஆசைப்படி அவள் குழந்தைக்கு சம்யுக்தா என்று பெயர் சூட்ட அதே ச என்ற எழுத்தில் வர வேண்டும் என்று சங்கவி என்று தங்கள் குழந்தைக்கு பெயர் சூட்டினர் கேசவனும் சாவித்திரியும்....

குழந்தைப் பிறந்த ஒரு வருடம் கழித்து வேலைக்குச் செல்ல நினைத்தாள் சுஜாதா.. தன் குழந்தையை கவனித்துக் கொள்ள தன் மாமியாரை தன்னோடு சென்னைக்கு அழைத்துச் சென்றாள்... ஆனால் அந்த சென்னை சூழ்நிலை அவர்களுக்கு ஒத்து கொள்ளாமல் போனது... பின்னர் அவரை ஊருக்கு அனுப்பி விட்டு குழந்தையை பார்த்து கொள்ள சரியான ஆள் கிடைக்காமல் திண்டாடினர் சுஜாதாவும் மாதவனும்...

பிறகு யுக்தாவை ஊரில் உள்ள கேசவன் சாவித்திரி பொறுப்பில் விட்டுவிட்டு இவர்கள் இங்கே வேலைக்குச் செல்லவும்.... விடுமுறை தினங்களில் சென்று குழந்தையை பார்த்து விட்டு வருவதாகவும் முடிவெடுத்தனர்.

You might also like - Krishna Saki... A family oriented romantic story...

அன்றிலிருந்து சங்கவியும் யுக்தாவும் ஒன்றாக வளர ஆரம்பித்தனர், விளையாட்டு, சண்டை, கோபம், அழுகை, சந்தோஷம் எல்லாவற்றையும் இருவர் மட்டுமே பங்கு போட்டு கொண்டு ஒட்டிப் பிறந்த ரெட்டை குழந்தைகள் போல் சுற்றி திரிந்தனர்.

யுக்தா கேசவனை அப்பா என்றும் சாவித்திரியை சாவிம்மா என்றும் அழைப்பாள், அவர்கள் இருவரை பொறுத்தவரை சங்கவியை விட யுக்தா தான் அவர்களுக்கு செல்ல மகள்... பேத்திகள் இருவருடன் விளையாடிக் கொண்டே பொழுதை கழித்து... ஒரு நாள் கண்களையும் மூடிவிட்டார் தங்கம்.

இப்படி பத்து வயது வரை இரட்டை பிறவி போல் சுற்றி திரிந்துக் கொண்டு இருந்த அந்த இருவரும் பிரிய போகும் நாளும் வந்தது.

மாதவனுக்கு அவர் வேலை செய்த நிறுவனத்தின் மூலம் நியூயார்க் செல்லும் வாய்ப்பு வந்தது...  திருமணத்திற்கு முன்பே இப்படி ஒரு வாய்ப்பை எதிர்பார்த்திருந்த அவர் இப்போது இதை தவறவிட விரும்பவில்லை.

முதலில் நியூயார்க்கிற்கு அவர் சென்றபின் தன் மனைவிக்கும் ஒரு வேலையை தேடிக் கொண்டு பிறகு மனைவி மகளை அழைத்துச் செல்லலாம் என்று முடிவெடுத்தார் மாதவன். அதன்பின் அவர் வெளிநாடு கிளம்பி சென்றார்.

கணவன் வெளிநாட்டில் இருக்க... மகள் கிராமத்தில் இருக்க... தான் மட்டும் இங்கு தனித்திருக்க விரும்பவில்லை சுஜாதா, அதனால் இவர்களும் நியூயார்க் செல்லும் வரை தன் மகளை தன்னோடு வைத்திருக்க முடிவெடுத்தால் அவள்... கேசவனுக்கும் சாவித்திரிக்கும் இது சரியென்று பட்டது.

நியூயார்க் செல்வதற்கு முன் யுக்தா சுஜாதாவோடு இருந்து பழகினால் அங்கு சென்ற பின் அவளுக்கு கஷ்டமாக இருக்காது என்றும் பெற்றவர்களிடம் இருந்து பிள்ளையை பிரித்து இவர்களே வைத்து கொள்ள முடியாது என்றும் அவர்கள் நினைத்ததால் செல்ல மகளாக இருந்தாலும் அவளை பிரிய முடிவெடுத்தனர்.

சுஜாதா, யுக்தாவை தனியாக வைத்துக் கொண்டு சென்னையில் இருக்க வேண்டாம் என்று எல்லோரும் நினைத்ததால் அவள் வளர்மதியின் வீட்டில் தங்கிக் கொள்ள முடிவெடுக்கப்பட்டது.

பெரியவர்களின் பேச்சை கேட்கும் பிள்ளைகள் என்பதால் யுக்தா சென்னையில் இருக்கப் போகிறாள் என்பதை கவியும் யுக்தாவும் ஏற்றுக் கொண்டார்கள் .... ஆனால் யுக்தாவுடன் சுஜாதா மதுரையில் ரயில் ஏறிய பின்பும் அவர்களின் அழுகையின் ஒலி அந்த ரயில் நிலையத்தில் கேட்டுக் கொண்டே இருந்தது.

இத்தனை நாள் ஒன்றாக இருந்த  இருவரால் இப்போது அந்த பிரிவை ஏற்க முடியவில்லை... இருவரும் ஒருவருக்கொருவர் ஏங்க ஆரம்பித்தனர்.

சங்கவிக்கு அவள் அன்னை தந்தை இருவரும் கூட இருந்து என்னன்னவோ சமாதானங்கள் செய்து அவள் ஏக்கத்தை போக்க முயற்சித்தனர்.... ஆனால் யுக்தாவோ எந்த சமாதானத்தையும் ஏற்க தயாராயில்லை...

எப்போதும் அழுது கொண்டே இருப்பாள்... சுஜாதா வீட்டில் இருக்கும் போது அவளுடனே இருப்பாள்.. அவள் வேலைக்குச் செல்லும் சமயங்களில் தனித்து இருப்பாள்... பள்ளியில் யாருடனும் பேசமாட்டாள்... பிருத்வி அவளை அழுமூஞ்சி, உம்மனாமூஞ்சி என்று கிண்டல் செய்வான்... பிரணதி விளையாட அழைப்பாள் இவள் வரவில்லையென்றால் வீட்டு அருகிலுள்ள நண்பர்களுடன் விளையாடச் சென்று விடுவாள்.

சுஜாதாவோ... யுக்தாவை நினைத்து கவலை கொண்டாள்... கவியும் யுக்தாவும் பிரிவை ஏற்றுக் கொள்ளும் வரை ஒருவரையொருவர் சந்திக்க வைக்க வேண்டாம் என்று முடிவெடுத்திருந்தனர் அனைவரும்... ஆனால் இப்படியே யுக்தா இருந்தால் அவள் நிலைமை மோசமாகிவிடும் என்று சுஜாதா பயந்தாள்... இன்னும் சில நாட்கள் இப்படியே இருந்தால் அவளை கிராமத்திலேயே விட்டு விட வேண்டும் என்று கவலையாக கூறினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.