(Reading time: 22 - 43 minutes)

05. மனம் கொய்தாய் மனோஹரி - அன்னா ஸ்வீட்டி

Manam koithaai Manohari

செக்யூரிட்டியை அழைத்து கேட்டை பூட்டிவிட்டு கார் கேட்டை உடைத்துக் கொண்டு போனாலும் அவர் மீது அடி படாதபடி விலகி  நிற்க சொல்ல வேண்டும் என்று நினைத்ததை செயலாக்க தன் மொபைலை எடுத்தபடி தன் காரை நோக்கி ஓடிய மித்ரனுக்கு சட்டென உள்ளுணர்வில் ஏதோ தோன்ற….நடுநாயகமாய் லிஃப்ட் இருந்த அந்த பேஸ்மென்டின் இடப்பக்க மூலையைப் பார்த்தான்….தரையில் படுத்த நிலையில் அவள்…மனோஹரி…

அடுத்த நொடி அவளை அடைந்திருந்தான்….இலை போல் குழைந்திருந்தவளை, அள்ளி எடுத்து மடியில் வைத்து அவளுக்கு எங்காவது புல்லட் ஷாட்…ஆபத்தான வெட்டுக் கயாம், அடி இருக்கிறதா? தவிக்க தவிக்க ஆராய்ந்து…. மூக்கில் சுவாசத்தை நிச்சயத்து……வெறும் மயக்கம் தான் என்பதை ஓரளவு ஊகித்து…ஆனாலும் உறுதியாய் தெரியாமல்…..

சுற்றிலும் சூழலையும் துழாவுகின்றன அவன் கண்கள்…..ஆபத்து கடந்துவிட்டதென்று மட்டும் என்ன நிச்சயம்? ஒழிந்திருந்து இப்பொழுது தாக்க மாட்டார்கள் எனவும் தான் என்ன நிச்சயம்?

அவசர அவசரமாக அவளை கையில் ஏந்தி, தன் காரில் வைத்து அடுத்த சில நொடிகளில் இடத்தை காலி செய்திருந்தான் மித்ரன்….

 ஃபோர்வீலர் வெளியே போகவென இருந்த வழியே அந்த இனோவா சென்றிருக்க….மனோஹரி விழுந்திருந்த அந்த இடத்திற்கு நேர் எதிரில் தான் டூ வீலர் எக்‌ஸிட்….

அதாவது இவன் கவனத்தை அந்தப்பக்கம் திருப்பிவிட்டு இந்த பக்கமாக கடத்த முயன்ற நபர் தப்பிவிட்டாரா…? ஆனால் ஏன்? இவன் வருவான் என எதிர்பார்க்காமல் கிட்நாப் செய்ய முயன்று…இவன் வரவும் திட்டத்தை பாதியில் கைவிட்டுவிட்டானோ அந்த கல்ப்ரிட்? பேக் ஆஃப் த மைன்டில் இதுவும் ஓடிக் கொண்டிருக்கிறது இவனுக்கு.

அலுவலகத்திற்கு இருந்த செக்யூரிட்டி இன்சார்ஜுக்கு ஃபோன் செய்து ஃபுல் அலர்ட்டில் உள்ளே தேடலை தொடங்க சொல்லி….அடுத்த என்ன செய்ய வேண்டும் என சொல்லிக் கொண்டே அலுவலக வளாகத்தை தாண்டினான்.

முதலில் மனோஹரியை ஹாஸ்பிட்டல் கொண்டு செல்ல வேண்டும்…… அவளை கடத்த நினைத்த கல்ப்ரிட் ஹாஸ்பிட்டலில் அவளுக்காக காத்திருந்தால்? மயக்கத்திலிருப்பவளை அங்கிருந்து தூக்குவது என்பது எவ்வளவு எளிது? கடத்த முயன்றவன் பத்தி தகவல் வெளியே வராமல் இருப்பதற்காகவாவது அவன் இவளை மயக்கத்திலிருக்கும் போதே மீண்டும் கடத்த நினைக்கலாம் தானே….

முதலில் இருந்த பெரிய ஹாஸ்பிட்டலை தவிர்த்து அடுத்திருந்த மிடில்க்ளாஸ் ஹாஸ்பிட்டலை தெரிந்தெடுத்து….. பொதுவாக இந்த இடத்தில் அவனை எதிர்பார்க்க மாட்டார்கள் தானே…. அவளை  அட்மிட் செய்து…… டாக்டர்ஸிடம் அவளிற்கு இருக்கும் ரிஸ்கை சொல்லி பாதுகாப்பிற்காக அவள் அருகிலேயே நின்றான்.

“அனஸ்தெடிக் எஃபெக்ட்…. மத்தபடி வேற எதுவும் இல்லை….சீக்கிரம் மயக்கம் தெளிஞ்சிடும்….” என்ற பின் தான் அவனுக்கு நிம்மதி வந்தது. அடுத்து அவள் மொபைலை குடைந்து அகதனின் எண்ணை எடுத்து அதற்கு அழைத்து “மனுக்கு சின்னதா ஒரு ப்ரச்சனை….இங்க ஹாஸ்பிட்டல்ல இருக்கோம்…இப்ப உடனே வரமுடியுமா…?” என ஹாஸ்பிட்டல் அட்ரெஸ் கொடுத்தவன் அடுத்து மயக்கதில் இருந்தவள் அருகில் ஒரு ச்சேரை போட்டு அமர்ந்து….. தன் இருகை கட்டை விரல்களால் தன் நாடியை தாங்கியபடி…..அவளை பார்வைக்குள் பொதிந்தபடி…..

மனதிற்குள் அவளை முதன் முதலில் பார்த்த அந்த வர்ஷன் ஆஃபீஸ் ரூம் காட்சியிலிருந்து இன்று காலை அவளுடனும் அவளுக்குடையவர்களுடனும் ஹோட்டல் சென்றது வரை ஒவ்வொரு நிகழ்வாய் ஒன்றன் பின் ஒன்றாய் ஊர்வலம்….

மனதிற்குள் ஏதோ எங்கோ புரிகிறது…..ஒரு இன்ஸ்டிங்க்ட்…. சாதாரணமாக அவன் புரிதல் சரியானதாகவும் இருக்கலாம்….இல்லாமலும் போகலாம்…. ஆனால் அவன் இன்ஸ்டிங்க்ட் அது தவறாய் போனதில்லை…. அவன் தன் திட்டத்தை மாற்றியாக வேண்டும்….. இவளை அதற்கு எப்படி சம்மதிக்க வைக்க? இவன் என்ன காயை மூவ் பண்ணனும்?

ப்பொழுது மனோஹரியின் கண்களில் சிறு அசைவு. ஏதோ தனக்கு தொந்தரவாய் இருப்பது போல் நெற்றி சுருக்கினாள். சுய நினைவு திரும்புகிறது போலும்…. ஃபேன் காற்றின் ஸ்பீடில் மனோஹரியின் நெற்றியில் ஆடிக் கொண்டிருந்த சிறு கற்றை முடி மூடியிருந்த அவள் கண்களின் மீதும் உருண்டு உருண்டு போகிறது. மயக்கம் தெளிய ஆரம்பிக்கும் நிலையில் அவளுக்கு அது இடைஞ்சலாய் இருக்கிறது போலும்…

அந்த குழல் கற்றையை அவள் முகத்தில் ஆடாதவாறு தள்ளி வைக்க எண்ணி கை நீட்டியவன் மனதில் அவள் முதல் நாள் ட்ரெய்னிங்கில் சொன்ன பொறுக்கி பதம் ஞாபகம் வருகிறது. சின்னதாய் சிரிப்பு இப்பொழுது இவன் இதழில்.

அருகிலிருந்த நர்ஸை கூப்பிட்டான்…. “அந்த கண்ல விழுற முடிய கொஞ்சம் ஒதுக்கி விடுங்களேன்….அவளுக்கு அது டிஸ்டபர்ன்ஸா இருக்குதுன்னு நினைக்கிறேன்….”

ஒரு விதமாய் இவனைப் பார்த்த நர்ஸ் ஒரு சிறு புன்னகையுடன் அவள் நெற்றியில் பிரண்டு கொண்டிருந்த அந்த முடியை விலக்கி விட்டாள். அவள் முடி என்ன ஆறறிவு உள்ள ஜீவனா? நம்மள வரக்கூடாதுன்னு சொலிட்டாங்கன்னு… மானம் ரோஷம் பார்த்துகிட்டு விலக்கி நிறுத்துன இடத்துல விழுந்து கிடக்க?  இல்லை திருவாளர் மித்ரன் வீட்டு நாய்குட்டியா? எஜமான் கட்டளைக்கு பயந்து எழும்பாமல் படுத்திருக்க?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.