(Reading time: 24 - 48 minutes)

சொல்ல நினைத்த எதையும் சொல்ல முடியாமல் தவிப்பான ஒரு கண் பாஷை முக பாவத்தில் இவள்….

“பவிமா…..நாம அடிக்கடிலாம் நேர்ல பார்த்து பேசிக்க முடியாதுமா…..நம்ம வீட்ல இருந்து கல்யாணம் பேசி முடிக்கிற வரைக்குமே  ஃபோன்ல பேசுறது கூட எவ்ளவு சரியா வரும்னு சொல்ல முடியாது…. தப்பித்தவறி உன் வீட்ல யார் பார்வையிலும் அது உறுத்திட்டுனா……இல்லை எதாவது காதில விழுந்துட்டுனா……எவ்ளவு கஷ்டம்னு யோசிச்சுப் பாரு?? அரேஞ்ச்ட் மேரேஜ்னா உங்கப்பா ஒத்துப்பாங்க….அதே இது லவ் மேரேஜ்னு நினச்சாங்கன்னா எப்டி எடுத்துப்பாங்க….?

 அதோட நாம சிட்டியில இல்லை….சுத்தி இருக்றவங்க ஆயிரம் பேசுவாங்க நம்ம ஊர்ல….அதுக்காக அவங்க சொல்றபடியெல்லாம் ஆடனும்னு இல்லை….ஆனா நம்ம பேரை நாம இந்த விஷயத்துல காப்பாத்திதான் ஆகனும்…..நம்ம குழந்தைங்களும் நாளைக்கு அந்த ஊர்ல தான வளருவாங்க….அவங்க நம்மை மதிக்கவாவது இந்த விஷயத்துல நிச்சயம் நமக்கு நல்ல பேர் வேணும்….அதனால நாம மீட் பண்றது, பேசிக்கிறதெல்லாம் ரொம்பவே ரேராதான் இருக்கும்…. அப்படி எப்ப நாம மீட் பண்ண சான்ஸ் கிடச்சாலும் சட்டுன்னு மனசுல நினைக்கிறத ஓபனா பேசிடு…..அதுவும் முக்கியமான விஷயத்துல கண்டிப்பா ஓபன்னஸ் வேணும்….நான் தான….என்ட்ட பேச என்ன பயம் பவிமா? இந்த மாதிரி விஷயத்துல நான் எப்டி வெறும் யூகத்தை வச்சு முடிவெடுக்க நீயே சொல்லேன்?”

இவ்வளத்தையும் இவள் கண் பார்த்து முகம் நோக்கி அவளுக்கு புரிந்தாக வேண்டும் என்றும் அவள் மன ஓட்டத்தை புரிய வேண்டும் என்றுமாய் சொல்லி முடித்தவன் கண்கள், இப்போது நிலவினி வீட்டு மாடியில் தெரியும் ஜன்னல் மீதிலும்,  தோட்டம் சுற்றிலுமாய் ஓடுகிறது….. யாராவது வந்துவிடக் கூடும் என்பது அவனுக்கு மட்டுமல்ல இவளுக்கும் புரிகிறது. வந்து நேரமாகுதே யாராவது இவளைத் தேடி வந்துடுவாங்க….இதுக்கு மேல தயங்கி பேசாமல் இருப்பது சரி இல்லை….

“அது…..” இவள் தவிப்பாய் ஆரம்பிக்க இவள் முகத்தின் மீது வந்திருந்தது அவனது பார்வை…. உன் ப்ரச்சனை உன்னோடது மட்டுமில்லை என்னோடதும் தான் என்றது அது....

“அது……வீட்ல……கோர்ஸ் முடியவும்……அலையன்ஸ் பார்க்கனும்னு சொல்லி இருக்காங்க…..” தர்மசங்கடமாய் தவிப்பாய் மெல்லமாய் சொல்லியபடி தலை குனிந்தவள்….. அவசரமாக நிமிர்ந்து “ஆனா அதி அத்தான் மேரேஜுக்கு பிறகுதான் நம்ம மேரேஜ் இருக்கனும்….” என தன் முழு எண்ணத்தையும் வெளியிட்டாள்.

இதற்குள் அவன் முகத்தில் வந்து வியாபித்திருந்தது கனிவு…. “ அதி விஷயம் முக்கியம் தான்….ஆனா உனக்கோ உன் அம்மா அப்பாக்கோ ப்ரச்சனையாகிற மாதிரி விட்றமாட்டேன் ஓகேவா….” அவன் முகத்திலிருந்த கனிவு அவனது முழு மொழியிலுமே….

எழும்பி இருந்த தவிப்பெல்லாம் இறங்கி இருக்க அவன் கண்களைப் பார்த்தபடி நிம்மதியாக சம்மதமாக தலை அசைத்தாள் இவள்…

“இப்பதான் எனக்கு நிம்மதியா இருக்கு…..” அவன் தான் சொன்னான். அதுவும் சொல்லும் தொனியில் நிம்மதியை விட சீண்டல் தான் அதிகமாய் இருந்தது.

‘என்ன’ என்பது போல் பார்த்தாள் பவிஷ்யா….

“சந்தடி சாக்குல அதிய அத்தான்னு ஒத்துகிட்டியே அத தான் சொல்றேன்……” இவள் கொண்டல்புரத்திலிருந்து கிளம்பும் போதும் கூட யவியை அண்ணா என சொல்லி அபயனுக்கு டென்ஷன் ஏத்திவிட்டு வந்திருந்தாளே…அதை சொல்கிறான்.

“அண்ணானா என்ன அத்தான்னா என்ன…..வார்த்தையில என்ன இருக்கு…..?” சற்று வேகமாய் ஆரம்பித்தவள் பார்வை தாழ்த்தி “எனக்கு உங்களைத் தவிர எல்லோரும் அண்ணாதான்” என முனங்கினாள்.

கேட்டிருந்த அவனுக்கு எப்ப்டி இருக்குமாம்? அவ்வளவுதான் அப்படியே அவளை ஆக்ரோஷமாய் இழுத்து…..மூச்சுமுட்ட தன்னில் புதைத்து….. கடிச்சு தின்னு….என வெடித்துக் கொண்டு வருகிறது அவனுள் ஒன்று….

‘இதுக்கு மேல இப்டி தனியா நிக்றது நல்லதுக்கு இல்லை….’ அதே நேரம் அவன் குணம் எச்சரிக்க

கிணற்றின் சுவரில் அமர்ந்திருந்தவன் இறங்கிக் கொண்டான்…..

“பவிமா உன்னை தேடுவாங்க நீ கிளம்புடா…..அப்டியே …” அவன் சொல்லத் தொடங்க… சட்டென உரையாடல் அந்த இடத்தில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்காத பவிஷ்யாவோ அவனை என்னவென்று பார்த்தாள். இவனோட அண்ணங்களை நான் அண்ணன்னு சொல்றது இவனுக்கு பிடிக்கலையோ?

“உனக்கு எதுவும் கேட்கனுமா பவி?” நாமபாட்டு கிளம்புன்னு சொல்றமே….அவ என்ன நினைக்கிறான்னே கேட்கலையே என்கிறது இவன் மனது.

“அது…..நிலு ஹஸ்பண்ட்னா எனக்கு அண்ணானு எப்பவுமே நினச்சு பழகிட்டு….யவி அண்ணாவை மட்டும் அண்ணானே சொல்லிக்கிறனே ப்ளீஸ்…..அதோட இப்ப நான் அவங்களை அத்தான்னு எப்டி சொல்ல? இப்ப அண்ணானு சொல்லிட்டு பின்னால நான் எப்டி மாத்தி சொல்ல முடியும்…ப்ளீஸ்பா…. “

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.