(Reading time: 31 - 61 minutes)

'வள் எங்கே இங்கே மருத்துவமனையில்??? யாருக்கு என்னவாயிற்று??? அலட்சியமாக திரும்பிக்கொண்டது மேகலாவின் பார்வை.

அந்த ரசிகர் கூட்டத்தின் நடுவே ஒருவன் தனியாக தெரிந்தான். அவன் திவாகர்!!!!

'சார்... ரிஷி சார்... நான் திவாகர்...' கையை உயர்த்தி கூவினான் அவன். ரிஷியுடன் இணைந்து விட வேண்டும் என்பதே அவனது குறிக்கோளாக இருந்தது. உண்மைகள் அவனுக்கு தெரிந்து விட்ட படியால் எப்படியும் தன்னையும் சேர்த்துக்கொள்வான் என்று ஒரு நம்பிக்கை திவாகருக்கு,

அவனை அடையாளம் தெரிந்துக்கொண்டான் ரிஷி. அதற்குள் ரிஷியை நோக்கி நீண்டன மைக்குகள். '

சொல்லுங்க சார்... இவங்க யாரு???' ஜானகியை பார்த்தபடியே வந்தது கேள்வி.

'இவங்கதான் என்னை பெத்த அம்மா  நிதானமாக சொன்னான் ரிஷி.

'சார் சரியா கேட்கலை மறுபடியும் சொல்லுங்க...'

'இவங்கதான் என்னை பெத்த அம்மான்னு சொன்னேன்..'  சற்றே உயர்ந்த குரலில் சொன்னான் ரிஷி. மேகலாவிடம் திருப்தி புன்னகை.

'அப்போ சந்திரிக்கா மேடம் உங்க அம்மா இல்லையா????

பதில்சொல்ல வில்லை ரிஷி. அவன் கரம் தன்னாலே சந்திரிக்காவின் கையை பற்றி அழுத்தியது. தன்னிச்சையாக திரும்பியவனின் பார்வை மேகலாவின் மீது விழ, உள்ளுக்குள் சுருக்கென ஏதோ ஒன்று உறைக்க......

'அம்மா நீ உள்ளே போயிடேன்!!! என்றான் சந்திரிக்காவுக்கு மட்டும் கேட்கும் தொனியில். சூழ்நிலையின் அழுத்தம் அம்மாவுக்கு புரியவில்லை. அவனை கேள்வியாக பார்த்தார் அவர்.

'பதில் சொல்லுங்க சார்..... இத்தனை நாள் ஏன் சார் இதை நீங்க வெளியிலே சொல்லைலை???

'என்னுடைய துரதிர்ஷ்டம் ஜானகி அம்மாவை  பத்தி எனக்கு தெரியலை...'

'அது எப்படி சார் உங்க நண்பர் வீட்டிலேயே இருந்திருக்காங்க அவங்களை உங்களுக்கு தெரியாம இருந்திருக்கு??? 

'அதை தான் ஒரே வார்த்தையிலே துரதிர்ஷ்டம்ன்னு சொல்லிட்டேன்.' அழுத்தமாக சொன்னான் ரிஷி.

'அப்போ இனிமே உங்ககூட தான் அவங்க இருப்பாங்கன்னு சொல்றீங்களா???

'கண்டிப்பா...'

இப்போது மைக் ஜானகியை நோக்கி திரும்பியது 'அம்மா நீங்க உங்க பையனோட சேர்ந்திட்டீங்க ரொம்ப சந்தோஷமா இருக்காமா உங்களக்கு???'

'ம். ரொம்ப சந்தோஷமா இருக்கு.'

'சார் நீங்க ரெண்டு பேரும் போட்டோக்கு போஸ் கொடுக்க முடியுமா??? சந்திரிக்கா மேடம் வேண்டாம்'  என்றபடியே அவர்கள் இருவரையும் பதித்துக்கொண்டார் ஒரு புகைப்படக்காரர்.

ஒரு முறை சந்திரிக்காவின் முகம் பார்த்துக்கொண்டான் ரிஷி. இன்னமும் அம்மாவின் கையை விடுவிக்கவில்லை தான் ரிஷி.  சந்திரிக்காவின் முக வாட்டத்தை கண்டு விட மேகலாவிடம் அப்படி ஒரு ஆர்வம்.

'அப்போ சந்திரிக்கா மேடம் அவ்வளவுதானா??? ஒரு குரல் எங்கிருந்தோ ரிஷி சற்றே கோபத்துடன் நிமிர, மற்ற மைக்குகள் எல்லாவற்றையும் தாண்டிக்கொண்டு சந்திரிக்காவை நோக்கி வந்தது ஒரு மைக். மேகலாவின் உள்ளே பரபரப்பு.

'மேடம் அப்போ ரிஷி உங்க வயித்திலே பிறந்த பையன் இல்லையா மேடம்???' பளாரென முகத்தில் அறைந்தார் போல் வந்தது அந்த கேள்வி. எல்லார் பார்வையும் அவர் மீதே.

'இல்லை...' என்று சட்டென வாய் திறந்து சொல்லிவிட நா எழவில்லை அந்த அன்னைக்கு. 'உடைய வேண்டுமே. சந்திரிக்கா இப்போது உடைய வேண்டுமே!!!' மேகலாவின் முகத்தில் அப்படி ஒரு சுவாரஸ்யம்.

'சொல்லுங்க மேடம்... '

....................................................................

'அம்மா ப்ளீஸ்... உள்ளே போ...' இப்போது குரல் கொஞ்சம் சத்தமாகவே வந்தது. 'இருங்க சார் நான் இவங்க கிட்டே ஒரு ஒரு கேள்வி மட்டும் கேட்டுக்கறேன்...'

'இந்த விஷயம் தான் எல்லாருக்கும் தெரிஞ்சிடுச்சே அப்புறம். ரிஷி உங்க வயத்திலே பிறக்கலைன்னு சொல்ல ஏன் தயங்குறீங்க???' மேகலாவின் இதழ்கள் புன்னகையில் விரிந்தன. கொடுத்த பணத்திற்கு சரியாக செயல்ப்பட்டுக்கொண்டிருந்தார் அந்த பத்திரிக்கையாளர்.

உள்ளுக்குள் கொதிக்கும் எரிமலையை அடக்கிக்கொண்டு சொன்னான் ரிஷி' என்ன கேள்வி கேட்கணுமோ என்னை கேளுங்க மிஸ்டர்'  .

'சரி நீங்க சொல்லுங்க சார்... டிசம்பர் 31 அன்னைக்கு சந்திரிக்கா மேடம் வயத்திலே பிறந்ததுக்கு நீங்க ரொம்ப பெருமை படறேன்னு சொன்னீங்க. இப்போ அது இல்லைன்னு ஆயிடுச்சு இல்லையா??? ஜானகி அம்மா தான் உங்க அம்மா இல்லையா??? அவங்க வயித்திலே பிறந்ததுக்கு நீங்க பெருமை படறீங்களா???. இல்லை அவங்க வீட்டு வேலை செய்தவங்கன்னு வருத்தப்படறீங்களா???

'இந்த அம்மா அந்த அம்மான்னு எனக்கு எந்த பேதமும் இல்லை. எனக்கு ரெண்டு பேரும் ஒண்ணுதான்' என்றான் அழுத்தமான குரலில்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.