(Reading time: 31 - 61 minutes)

நேரம் மதியம் இரண்டை தொட்டிருக்க சஞ்சாவின் கெஸ்ட் ஹௌஸ் வாசலில் வந்து இறங்கினார் மேகலா. அஸ்வத் உடன் வந்திருக்கவில்லை. உடலின் ஒவ்வொரு அணுவும் தளர்ந்து கிடந்தது. இயக்குனரும், அவர் மீது வைத்த அந்த நேசமுமே மேகலாவை செலுத்திக்கொண்டிருந்தது.

'எங்கே வந்திருக்கிறேன் நான்??? யார் முன்னால் நிற்க போகிறேன்??? எதையும் யோசிக்க தயாராக இல்லை. கண்களில் கண்ணீர் எல்லை மீறி இருக்க அடியடியாக எடுத்து வைத்து உள்ளே நுழைந்தார் மேகலா.

எப்போதும் ஒரு மகாராணியின் கம்பீர நடையே மேகலாவின் அடையாளம். இன்று கண்கள் நிறைய கண்ணீரும், கலைந்த கேசமும், தடுமாறும் நடையுமாக, தன்னவனின் உயிரை காப்பாற்ற போராடும் சாதாரண பெண்மணியாய்  மேகலா வந்து நிற்க...

சஞ்சா, ரிஷி  உட்பட அத்தனை பெரும், ஒரே நேரத்தில் எழுந்து நின்றனர். யார் முகத்திலும் ஜெயித்து விட்ட பாவமோ, மகிழ்ச்சி ரேகைகளோ இல்லை. அருந்ததியின் கண்களில் நீர் கட்டிக்கொண்டு நின்றது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் இதுவரை நடந்தது எல்லாம் எல்லாருக்கும் மறந்தே போனது.

முதலில் மேகலாவின் அருகில் ஓடி வந்தது நம் வைதேகியாகத்தான் இருந்தது. அப்படியே மேகலாவின் தோளை அணைத்துக்கொண்டார் அவர் 'வா மேகலா...'

அந்த ஒரு அணைப்பில், ஒரு அழைப்பில் பல முறை செத்து பிழைத்திருந்தார் மேகலா. இப்படி ஒரு அழைப்பை நிச்சியமாக எதிர்ப்பார்க்கவில்லை மேகலா. எந்த வித அவமானத்தையும் எதிர்க்கொள்ள தயாராக வந்த மனதை இதமாக வருடியது.

'வா வந்து உட்காரு முதல்லே... ஏதாவது சாப்பிட்டியா காலையிலிருந்து...' பசியில் வாடி இருந்த முகத்தை பார்த்துக்கொண்டே கேட்டார் வைதேகி.

'ஆங்???' கேள்வி செவிகளில் ஏறவே இல்லை மேகலாவுக்கு.

மேகலாவை அழைத்து வந்து அமர வைத்து விட்டு, 'அம்மாவுக்கு குடிக்க ஏதாவது கொண்டு வா அருந்ததி' வைதேகி சொல்ல கண்ணீரை துடைத்துக்கொண்டு உள்ளே ஓடினாள் அவள்.

விதி அடித்த அடியின் வலியை தாங்க முடியாமல் பிரமை பிடித்தது போல்தான் அமர்ந்திருந்தார் மேகலா. கொஞ்ச நேரத்தில் பழச்சாறு வர... அதை வைதேகி அவரிடம் நீட்ட..

அதை கையில் கூட வாங்க தோன்றாதவராக எல்லாரையும் மாறி மாறி பார்த்தார் மேகலா. 'ப...ண....ம்????.'  கெஞ்சலும் தவிப்புமாக வெளி வந்தது குரல்.

நேற்று காலையில் கைகளை கட்டிக்கொண்டு இவர்கள் பத்திரிக்கையாளர்களிடம் பேசுவதை ரசித்த மேகலா ரிஷியின் கண் முன்னே வந்து போனார். ஒரே நாளில் வாழ்கை ஒரு மனிதனை இப்படியா புரட்டிப்போடும்????

அடுத்த இரண்டாவது நிமிடத்தில் கையில் பணப்பெட்டியுடன் அவர் முன்னால் வந்து நின்றான் ரிஷி ''நீங்க முதல்லே ஜூஸ் குடிங்க. நானும் உங்களோட ஹாஸ்பிடல் வரேன். அங்கிள்க்கு ஒண்ணும் ஆகாது' 

'நீயும், அந்த சந்திரிகாவும் என் காலிலே வந்து விழணும். அந்த சந்திரிகா கண்ணிலேர்ந்து ரெண்டு சொட்டு தண்ணியாவது வரணும். அதை நான் பார்க்கணும்' இதை அவனிடம் சொல்லி ஒரு வாரம் இருக்குமா??? கேலியாக சிரித்த காலத்தின் குரல் மேகலாவின் காதில் விழாமல் இல்லை.

கண்களில் கண்ணீர் வழிய அவர் அந்த பழச்சாறை மடமடவென அருந்த அந்த கண்ணீரிலேயே பழைய மேகலா கரைந்து ஓடிக்கொண்டிருந்ததை போலவே தோன்றியது ரிஷிக்கு.

தன் பின் எல்லாம் சரியாகவே நடக்க துவங்கியது. இயக்குனர் பிழைத்த விட, நாட்கள் நகர அவர் சில நாட்களில் வீடு திரும்பிவிட எல்லாருமே மேகலாவிடம் வெகு இயல்பாகவே பேச ஆரம்பித்திருந்தனர். ஆனால் யாரையும் நிமிர்ந்து பார்க்கும் கூட இல்லை மேகலாவிடம். குற்ற உணர்ச்சி அவரை வதைத்து கொண்டிருந்தது. '

திவாகர் கூட இவர்களுக்கெல்லாம் ஒரு நண்பனாக மாறி இருந்தான். எல்லாரிடத்திலும் மகிழ்ச்சியும், நிறைவும் பரவ ஆரம்பித்திருந்தது. அருந்ததியின் கையும் குணமாகி இருந்தது. நாட்கள் நகர ரிஷி நடிக்கும் அடுத்த திரைப்படத்திற்கான வேலைகளும் துவங்கி இருந்தன

இரவின் தனிமை. தீக்ஷா சந்திரிக்காவிடம் உறங்கிவிட பால்கனியில் நின்று கண்ணில் படும் கடலை பார்த்துக்கொண்டிருந்தாள் அருந்ததி. மெதுவாக அவளை வளைத்தது அவளது கணவனின் கரம். பல ஆண்டு கால தவம். அவள் கன்னத்தில் பதிந்தன அவனது இதழ்கள்

சிலிர்ப்புடன் கலந்த வெட்க சிரிப்புடன் அவனை விலக்கினாள் அருந்ததி. 'போடா ஒண்ணும் வேண்டாம்'

'அன்னைக்கு கார்லே ஒரு முத்தமாவது கொடுத்திட்டு போன்னு சொன்னே. இன்னைக்கு வேண்டாங்கறே'

'அது அப்படிதான் ஒண்ணும் வேண்டாம் போ...'

'எனக்கு வேணுமே... என்றபடியே ரிஷி பத்தினியை அள்ளிக்கொண்டான் ரிஷி...'

தே நேரத்தில் அங்கே சஞ்சாவின் கைச்சிறையில் இருந்தாள் அஹல்யா.

'சும்மா இரு சஞ்சா!!'

'ஹேய்... கல்யாணம் ஆனதிலிருந்து இதையே சொல்றே .. இனிமேலெல்லாம் சும்மா இருக்க முடியாது.'

'சரி அப்போ இன்னும் கொஞ்சம் இறுக்கமா கட்டிக்கோ..' என்றபடி அவனுக்குள் புதைந்தாள் அவள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.