(Reading time: 30 - 59 minutes)

ரசுவும் டிரைவரும் தங்களையும் இந்த வீட்டில் ஒரு அங்கத்தினராக அவள் ஏற்று கொண்டுள்ளதை கண்டு கண் கலங்கி நின்றனர்.

ஆனால் இவர்கள் எல்லோரையும் விட அதிகமான அளவு உணர்ச்சியின் பிடியில் சிக்கியிருந்தாள் மது. அவளுக்கு தெரியும் தன் குடும்பத்தினரை பொறுத்தவரை தான் வாங்கி வந்த இந்த பொருள்கள் அவர்கள் உபயோகிக்கும் பொருட்களின் பாதி விலையே என்றாலும் அதை கண்டு அவர்களில் முகம் கொள்ளா மகிழ்ச்சியுடன் கண் கலங்கி நெகிழ்ச்சியுடனும் இருப்பதற்கு காரணம் அவர்களுக்கு தன் மேல் இருக்கும் பாசம் தான் என்பது புரிந்தது. ரகுவும் சரணும் கழற்றியிட்ட அந்த கடிகாரங்கள் பல லட்சம் மதிப்பு வாய்ந்தது. ஆனால் தான் வாங்கி வந்திருப்பதோ ஒரு சில ஆயிரங்களே மதிப்புள்ள ஒரு கடிகாரம்...ஆனாலும் இனி இதை தான் ஆபீசுக்கு கட்டி செல்வோம் என்று இருவரும் குதித்து கொண்டிருப்பதை கண்டவளுக்கு இதை போன்ற ஒரு குடும்பம் அமைய தான் நிச்சயம் போன ஜன்மத்தில் ஏதோ ஒரு பெரும் தவம் செய்துள்ளோம் என புரிந்தது.

இந்த குடும்பத்தின் இந்த மகிழ்ச்சி இப்படியே கடைசி வரை நிலைக்க வேண்டுமென மனதில் கடவுளிடம் ஆயிரமாவது முறையாக வேண்டிகொண்ட மங்களம், "சரி மதும்மா மேல போயி ப்ரெஷ் ஆயிட்டு வா, டயர்டா இருக்க பாரு…வேணா ஒரு குட்டி தூக்கம் போட்டுட்டு வா" என்று அவளை மேலே அனுப்பி வைத்தார்.

மங்களம் சொன்னதைப்போல மேலே சென்றவள் திவ்யாவை அழைத்து தான் வந்து சேர்ந்து விட்ட விவரத்தை கூறிவிட்டு கட்டிலில் விழுந்தவள் அவளறியாமல் உறங்கி போனாள். 10.30 மணிக்கு எழுந்து முகம் கழுவி பல் துலக்கி கீழே வந்தவள் எல்லோரும் ஒன்றாக டைனிங் ஹாலில் அமர்ந்து ஏதோ சீரியசாக பேசிக்கொண்டிருப்பதை பார்த்து, ஆச்சர்யத்துடன் அவர்கள் அருகில் சென்று அமர்ந்தாள்.

"என்னப்பா இன்னைக்கு நீங்கல்லாம் ஆபீஸ் போகலையா...நான் வந்தனால ஆபீஸ்க்கு மட்டம் போட்டுடிங்களா" -மது

"ஹ்ம்ம் ஆமா இவ பெரிய ஒபாமா இவ வந்ததால நாங்க ஆபீஸ்க்கு லீவ் விட்டு வந்து உன்கூட தேனீர் விருந்துக்காக இங்க காத்திருக்கோம்" என்று ரகு நக்கலடிக்க,

"பாருங்க மோகனாம்மா " என்று அவளுடைய சித்தியின் கழுத்தை சுற்றி கொண்டாள்.

"டேய் பேசாம இருடா.. மதுக்குட்டி என்ன விஷயம்னு அப்பா சொல்வாருடா. நீ மொதல்ல டிபன் சாப்பிடு "என்று அவளை அமர வைத்து அவளுக்கு டிபன் எடுத்து வைத்தார்.

சிவசண்முகம் ஜாடையாக மங்களத்தை பார்த்து சொல்லு என்று சொல்ல,

மங்களமும் "அது ஒன்னும் இல்லடா மது நாளைக்கு ஏகாதசி.... உனக்கு தான் தெரியுமே கோயில்ல நம்ம பூஜை தான்னு ..எப்பவும் நம்ம வீட்டுல யாரவது 2 பேரு தான் போவோம். அதான் இந்த முறை நம்ம எல்லாரும் ஒண்ணா கோயிலுக்கு போயி பூஜையை முடிச்சிட்டு வரலாம்னு நெனைக்கிறோம் . நீயும் வந்துருக்க... அதை பத்தி தாண்டா பேசிட்டு இருந்தோம் "என்றார்.

மதுவும் "ஆமாப்பா எனக்கும் நம்ம கோயிலுக்கு போகணும்பா...எல்லாரும் போனா ஜாலியா இருக்கும்பா... போலாம்பா ப்ளீஸ் "என்க, எல்லோருக்கும் பாதி வேலை முடிந்து விட்ட சந்தோஷம்.

"சரிம்மா நான் அதுக்கு வேணுங்கற ஏற்பாடு பண்ணிடறேன். நீங்க எல்லாரும் மில்லுக்கு போயிடுங்க நான் அப்பறம் வந்து ஜாயின் பண்ணிக்கிறேன்" என்று மற்ற ஆண்களை பார்த்து சொல்லி விட்டு கிளம்பினார் சிவசண்முகம்.

அடுத்த நாள் காலையில் எல்லோரையும் 5 மணிக்கே எழுப்பி விட்ட மங்களம், மதுவின் அறைக்கு சென்றவர், "மதும்மா எழுந்திருடா கண்ணா, கோயிலுக்கு போகணும்ல, எழுந்து உக்காருடா " என்றார்.

"ஹ்ம்ம் எழுந்துடேம்மா "என்று கூறி கொண்டே பாதி தூக்கத்தில் உட்கார்ந்தவளிடம்,

"மது தண்ணி சூடா இருக்கும் எழுந்து ப்ரஷ் பண்ணி குளிச்சிட்டு கீழ வாடா.. உன் டிரஸ் எல்லாம் அம்மா கீழ என் ரூம்ல வெச்சிருக்கேன்.. நீ குளிச்சிட்டு ஒரு நைட்டிய போட்டுட்டு வா" என்று கூறி விட்டு கீழே சென்றார்.

குளித்து முடித்து ஈர தலையில் டவலை கட்டி கொண்டு தன் பெற்றோரின் அறைக்குள் நுழைந்தாள்.

அங்கு கட்டிலில் பேரட் கிரீன் கலரில் பிங்க் கலர் பூக்களை விரித்து வைத்ததை போன்ற ஒரு அழகான டிசைனர் புடவை அதற்க்கு பொருத்தமான நகைகள் என வைக்க பட்டிருந்தது. மங்களம் அழகான அரக்கு புடைவை கட்டி கிளம்பி ரெடியாக மதுவுக்காக காத்து கொண்டிருந்தார்.

"ஒஹ் வாவ் அம்மா யு ஆர் லுக்கிங் பாபுலஸ்..." என்று தன் தாயை பின்னாலிருந்து கட்டி கொண்டாள்.

"தேங்க்ஸ் டி பட்டு" என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டு கொஞ்சியவர் ,"சரி வா நீ கெளம்பு எல்லாரும் கெளம்பிருப்பாங்க" என்று அந்த புடவையை கையில் எடுத்தார்.

"அம்மா புடவையா நான் சுடிதார் போட்டுகறேனே" என்றவளை பார்த்து ஒரு முறை முறைத்தவரிடம் அடுத்து அவள் வேறெந்த எதிர் வாதமும் செய்யவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.