(Reading time: 30 - 59 minutes)

திவ்யா அங்கு வந்து சேர்ந்த புதிதில் அவளிடமும் அதே எண்ணத்துடன் நெருங்கியவன் தான் ஆனால் தன் படிப்பின் பெரும் பகுதியை அவள் ஹாஸ்டலில் கழித்ததால் அவளால் வெளி உலகையும் அதில் சுற்றும் கயவர்களையும் இனம் கண்டறிய முடிந்தது. கிரணால் எத்தனையோ முயற்சி செய்தும் திவ்யாவை நெருங்க முடியவில்லை. திரும்பவும் தனக்கு ஒத்து வரும் சில பெண்களுடனே அவன் சுற்ற தொடங்கினான் அவளுக்கு அவனை பற்றி தெரியும் என்பதால் அவள் கிரனை மதுவிடம் நெருங்க விட்டதில்லை. எப்போதும் ஒரு நிழல் போல மதுவின் உடன் இருந்தாள்.  இன்று திவ்யா இல்லாததால் மதுவுடன் பேசும் சந்தர்ப்பதிர்க்காக காத்திருந்த கிரண் அவளிடம் பேச்சு கொடுத்தான்.  அவனை பற்றி அறியாத மதுவும், அவனுக்கு பதில் சொல்ல தொடங்கினாள்.

"ஒன்னும் இல்லை கிரண்.  இன்னைக்கு ஊருக்கு போறேன் அதனால கொஞ்சம் சீக்கிரம் வந்துட்டேன். திவ்யாவும் இன்னும் ஒரு 15 நிமிஷத்துல வந்துருவா "என்று அவனுக்கு ஆங்கிலத்தில் பதில் சொன்னான்.

"தனியா ஊருக்கு போயிருவியா ... உனக்கு தனியா எல்லாம் போக தெரியுமா? எப்பவும் உன் ப்ரெண்ட் இல்லாம நீ எங்கயும் போக மாட்டியே" - என்று கிண்டலாக கேட்டான்.

மதுவின் தன்மானத்திற்கும் தைரியத்திற்கும் ஏற்பட்ட இழிவாக கருதி "யாரு சொன்னா அப்படின்னு….நான் தனியா போயிடுவேன் எனக்கு அதுல பயமெல்லாம் ஒன்னும் இல்லை"- என்று சற்று கோபமாகவே பதில் சொன்னாள் மது

அவனுக்கு தேவையான விஷயங்களை கிரண் போட்டு வாங்கும்போதே திவ்யா அந்த ப்ளோரில் நுழைவதை கண்டவன் மதுவிடம் அவசரமாக திரும்பி " சாரி மது ஒரு பிரிண்ட் அவுட் எடுக்கணும் மறந்துட்டேன்... அப்பறம் பாக்கலாம்" என்று அந்த இடத்தை விட்டு காலி செய்தான்.

கோபமாக வந்த திவ்யா மதுவின் அருகில் வந்து"உனக்கு அறிவே இல்லையா அந்த பொறம்போக்கு கிட்ட பேசாதேன்னு சொல்லிருக்கேன்ல... எதுக்கு அவன்கிட்ட பேசுன…"என்று கத்த தொடங்கியவளை பார்த்து

"ஹஹஹ யு மீன் வேஸ்ட் லாண்ட்" என மது சிரிக்க ,

"நான் சீரியஸா பேசிட்டு இருக்கேன் நீ சிரிக்கிற...இனி நீ அவன் கூட பேசுன நம்ம ப்ரெண்ட்ஷிப் கட்... உங்க வீட்டுல போட்டு கொடுத்துருவேன் ஜாக்ரதை… சொல்லிட்டேன்" என்ற திவ்யாவை பார்த்து,"அடிப்பாவி எட்டப்பி இனி நான் அந்த வேஸ்ட் லாண்ட் கூட பேச மாட்டேன்... நீ என் இந்த ஒரு வருட கனவுக்கு உலை வெச்சிடாதே சரியா தாயே" திவ்யாவின் முன்பு தலைக்கு மேல் இரு கைகளையும் சேர்த்து குவித்து கும்பிடுவதை போல செய்தாள் மது.

அவளின் செயல் கண்டு திவ்யாவிற்கு சிரிப்பு வந்தது. அவள் சிரிக்க,"அப்பாடா சிரிச்சிட்ட... இப்போதான் பாக்கவே அழகா இருக்கு" என்று மதுவும் புன்னகைத்தாள்.

இவர்கள் பேசியதை மறைந்து நின்று கேட்டு கொண்டிருந்த கிரணுக்கு இவர்கள் பேசியது முழுவதுமாக புரியவில்லை என்றாலும், அவர்கள் பேசியதின் சாராம்சம் புரிந்தது.” உன்னை தான் என்னால வளைக்கவும் முடியலை...ஏமாத்தவும் முடியலை... ஆனா மது எனக்கு ரொம்ப ஈசி டார்கெட்... உங்க ரெண்டு பேருக்கும் கூடிய சீக்கிரமே நான் யாருன்னு காட்றேன்” என்று மனதிற்குள் கருவிகொண்டான்.

இரவு திவ்யாவுடன் டின்னரை முடித்து கொண்டு ஆபீசில் இருந்தே ஒரு டாக்ஸி வரவழைத்து டிராவல்ஸ் வந்து சேர்ந்தனர் இருவரும். அந்த டாக்ஸியை வைடிங்கில் வைத்து விட்டு, மதுவை பஸ்சில் ஏற்றி விட்டு அவளுக்கு ஒரு நூறு முறை பத்திரம் பார்த்து போ.. மொபிலில் சார்ஜ் இருக்கா.. தூங்கிட்டு போ... மரத்தை ரசிக்கிறேன் மலையை பாக்கறேன்னு சொல்லி தூங்காம இருக்காதே.. வாட்டர் பாட்டில் எல்லாம் வெச்சுக்கோ...கவர் எல்லாம் எடுதுடியா” என்று சொல்லியவளை பாசத்துடன் பார்த்தாள் மது. அவளுக்கு தெரியும் மதுவின் மேல் திவ்யாவிற்கு உள்ள அக்கறையும் பாசமும்.அவளுக்கு அறிவுரைகளை மழையாக பொழிந்து கொண்டிருந்த திவ்யாவை பார்த்து, "ஐயோ போதும்டி.. எங்க அம்மா மாதிரியே பேசற... நான் போய்க்கிறேன்...நீ கெளம்பு... ஹாஸ்டல் போயிட்டு எனக்கு கால் பண்ணு ஒகேவா" என்றாள் மது.

"சரி டி ...பார்த்துக்கோ..."என்று மனமில்லாமல் கிளம்பினாள் திவ்யா.

நேரம் இதோ 12ஐ கடந்து விட்டது ஆனாலும் ஏனோ மதுவால் தூங்க இயலவில்லை. வீட்டிற்கு போகும் சந்தோசத்தில் அவளுக்கு தலை கால் புரியவில்லை. இன்னும் 7 மணி நேரம், இன்னும் 6 மணி, இன்னும் 5 மணி நேரம் என நேரத்தை கணக்கிட்டு கொண்டே எப் எம்மில் இளையராஜாவின் பாடல்களை கேட்டு கொண்டே இரவில் மின்னிய வானத்து நட்சத்திரங்களை ரசித்து கொண்டே பயணம் செய்வது ஒரு புது அனுபவமாக அவளுக்கு தோன்றியது.

காலை சரியாக 5.30 மணிக்கு அவினாசி பேருந்து நிலையத்தில் அந்த பேருந்து நுழையும் போதே சரணும் ரகுவும் நிற்பதை கண்டு கொண்டாள். சந்தோசத்துடன் கைப்பையையும் டிராலி பாகையும் எடுத்து கொண்டு கீழிறங்கியவளை எதிர் கொண்ட சரணும் ரகுவும்,"என்ன வாலு பெங்களூர் வேண்டாம்னு ஓடி வந்துட்டியா...மூட்டை முடிச்சோட வந்துருக்க.." என்று கேட்டவாறே ஆளுக்கொரு பையை எடுத்து கொண்டு நடந்தனர். அவர்களை பின் தொடர்ந்தவாறே "ஹ்ம்ம் இல்லடா அண்ணனுங்களா, நான் இந்த ஒரு மாசத்துல செஞ்ச வேலையை பாராட்டி இந்த மூட்டை நெறைய பணம் கட்டி கொடுத்துருக்காங்க... கொஞ்சம் பாத்து பதனமா கொண்டு வாங்க " என்று அதிகாரமாக சொல்லியபடி காரின் பின் சீட்டில் ஏறி அமர்ந்தாள். அம்மா, அப்பா, சித்தப்பாக்கள், சித்தியர், சரசு, ரோசி என வீட்டில் உள்ள நாய்க்குட்டி வரை விசாரித்து முடிக்கும்போது வண்டி தங்கள் வீட்டின் முன் வந்து நின்றது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.