(Reading time: 18 - 35 minutes)

'பிடிக்கலைங்கறதுனாலே...' என்று ஏதோ சொல்ல வாயெடுத்த யசோதா நிறுத்திக்கொண்டார். வேண்டாம் தேவகி. விஷயம் என்னன்னு தெரிஞ்சுக்காம எந்த பொண்ணை பத்தியும் நாம தப்பா பேச வேண்டாம். சரி இப்போ நோக்கு இந்த விஷயம் தெரிஞ்சா மாதிரி காட்டிக்காதே' என்றார் யசோதா. 'பார்க்கலாம். இதுகள் எத்தனை தூரம்தான் போறதுகள்ன்னு பார்க்கலாம்....'

'இதுகளை விடுங்கோ மன்னி... அவாத்திலே எல்லாரும் என்ன பண்ணிண்டிருக்கா???  தேவகியின் முகத்தில் கொஞ்சம் கோப ரேகைகள்..

'கொஞ்ச நாழி பொறுமையா இருன்னு சொல்றேனோல்யோ... பேசாம தளிகையை கவனி...'

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

ஜெய்யின் "ஸ்ருங்கார சீண்டல்கள்... சில்லென்ற ஊடல்கள்..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

தே நேரத்தில் அங்கே கோதையின் வீட்டில்...

'அப்பா...  சேவிச்சுக்கறேன் பா... ' அப்பாவை நமஸ்கரிக்க அவர் முன்னால் வந்து நின்றாள் கோதை.

அப்பா வாங்கிக்கொடுத்த அந்த மெரூன் நிற புது பட்டு புடவையில்...கழுத்தை ஒட்டிய மெலிதான தங்க சங்கிலி.. கைகளில் ஒற்றை வளையல்கள் என மிக எளிமையான அலங்காரத்தில் கூந்தலில் முல்லை சரம் ஊஞ்சலாட,  நின்றிருந்தாள் கோதை.

உள்ளமெங்கும் பலநூறு குழப்ப அலைகள் பொங்கிக்கொண்டிருந்தாலும், அவ்வபோது கண் முன்னே வந்து போகும் கோகுலின் முகம் சந்தோஷ சாமரம் வீசிக்கொண்டு தான் இருந்தது. கண்களில் கண்ணீர் பளபளத்துக்கொண்டிருந்த அதே நேரத்தில் இதழோரம் கொஞ்சம் புன்னகையும் தேங்கித்தான் இருந்தது.

'இரு..... பெரியவா எல்லாரையும் சேவிச்சுக்கோ என்று அத்தை அத்திம்பேர்' என அனைவரையும் அழைத்தார் அப்பா. அனைவரையும் நமஸ்கரித்தாள் கோதை. எல்லார் முகத்திலும் மனம் நிறைந்து போன பாவம்.

நேரம் எட்டரை மணியை தொட்டிருக்க... கோகுலின் வீட்டுக்கு வருகை தந்தான் முரளி. சரியாக அதே நேரத்தில் மாடியிலிருந்து புது வேஷ்டியும் சட்டையுமாக இறங்கி வந்தான் கோகுல்...'

'டேய்.... முரளி உன்னையும் வேஷ்டி கட்டிண்டு வர சொன்னேனோல்யோ..' பேன்ட் ஷர்டில் வந்தவனை ஏற இறங்க பார்த்தபடி கேட்டார்  யசோதா.

'ரிஜிஸ்டர் ஆபீஸ்க்கு என்னத்துக்கு மா வேஷ்டி...' என்றான் முரளி 'அது மட்டும் இல்லாம...வேதா இருக்காளோன்னோ... அவ...' அவன் குரலின் ஸ்ருதி மெல்ல இறங்க...

'ஏன்... வேதாக்கு என்ன ஆச்சு???' இரண்டு அம்மாக்களின் குரலும் ஒன்றாக பாய்ந்து வந்தது.

'அவளுக்கு என்ன ஆச்சு??? ஒண்ணுமில்லை நன்னா இருக்கா. அதுவும் டெல்லிக்கு போய் நன்னா இருக்கா ... தெரியுமோ???.'

'டெல்லிக்கா??? அங்கே என்னத்துக்கு போனா அவ... அதுவும் இன்னைக்கு கல்யாணத்தை வெச்சிண்டு.???' குரலில் கொஞ்சம் கோப சூடு பரவ  கேட்டார் தேவகி.

'அது ஏதோ ஆபீஸ் வேலையாம். கிளம்பி போயிருக்கா .. மாட்டிண்டுட்டா வேலையிலே...' கோகுல் முரளிக்கு உதவியாக வர...'

'காயத்ரி மந்திரம் சொல்ற வாயாலே பொய் சொல்லதேடா கடங்காரா...' அம்மா மானசீகமாக திட்டியது புரிந்திருக்க வேண்டுமோ என்னவோ அம்மாவின் முகம் பார்க்காமல் கண்களை தாழ்த்திக்கொண்டான் கோகுல்.

'நோக்கு யாருடா சொன்னா இதை???' முரளியை பார்த்து கேட்டார் அவன் அம்மா.

'அவளேமா ... அவளேதான் நேக்கு போன் பண்ணி சொன்னா.... நேத்து.......எல்லார்கிட்டேயும் ரொம்ப சாரி கேட்டுண்டா மா..'

'உன்னை வக்கீலுக்கு படிக்க வெச்சதுக்கு நன்னா பொய் சொல்றேடா ' உதடுகள் வரை வந்த வார்த்தைகளை விழுங்கிக்கொண்டார் யசோதா  

'அதனாலே இன்னைக்கு கோகுல் கோதைக்குத்தான் கல்யாணம்........' பதில் பேசாமல் மகன் முகத்தையே சில நொடிகள் பார்த்திருந்தார்  யசோதா.

'அப்போ நோக்கு எப்போடா கண்ணா கல்யாணம்??? ஏக்கத்தில் குளித்து கிடந்தது அந்த அம்மாவின் குரல். 'இத்தனை நாள் தள்ளி தள்ளி போயிண்டிருந்தது இன்னைக்கு நடந்திடும்னு ரொம்ப சந்தோஷமா இருந்தேனேடா அம்மா...'  அம்மாவின் குரல் கரைய கொஞ்சம் தடுமாறி பின்னர் சட்டென சுதாரித்தான் முரளி

'மா.. இப்போ என்ன ரெண்டு நாள் கழிச்சு என் கல்யாணம் நடந்தா தலையா போயிடும்... இன்னைக்கு இவா  கல்யாணம் நடக்கட்டும்மா..'

'அதெல்லாம் வேண்டாம்..' என்றார் தேவகி சட்டென 'ரெண்டு கல்யாணமும் ஒண்ணா நடக்கணும்னு தானே பிளான் அப்படியே நடக்கட்டும். இவா கல்யாணமும் வேதா வந்ததுமே நடக்கட்டும்.. அதுதான் சரி..' 

சரியாக அந்த நொடியில் ஒலித்தது வாசுதேவனின் கைப்பேசி. கோதையின் தந்தையிடமிருந்து அழைப்பு.

'சொல்லுங்கோ...' வாசுதேவனின் குரல் கம்பீரமாக ஒலிக்க.. கொஞ்சம் தடுமாறித்தான் போனது மறுமுனை.

'பெரியவா மன்னிக்கணும்.... ஒரு சின்ன தப்பு நடந்திடுத்து... என் பெரிய பொண்ணு டெல்லிக்கு போயிருக்கா...வர ரெண்டு நாள் ஆகுமாம்... '

'டெல்லிக்கா???' எதிர்முனை முழுவதுமாக சொல்லி முடிப்பதற்குள் சுறுசுறுவென ஏறியது அவர் கோபம். 'ஸ்ரீதரன் என்ன விளையாடறேளா??? இது வரைக்கும் நாங்க உங்க பெரிய பொண்ணை நேர்லே பாக்கவே இல்லை. இன்னைக்கு கல்யாணத்தை வெச்சிண்டு டெல்லிலே போய் என்ன பண்ணிண்டிருக்கா உங்க பொண்ணு ???

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.