(Reading time: 21 - 41 minutes)

27. காதல் பின்னது உலகு - மனோஹரி

Kadhal pinnathu ulagu

விஷ்யாவின் அப்பாவின் கூற்றில் அத்தனை பேரும் ஆயிரம் வோல்டேஜ் ஷாக்கில் அதிர்ந்து போய் நிற்க கிடைத்தது அரை நொடி மட்டுமே…..அதற்குள் பவி விழுந்துவிட கவனம் முழுவதும் அவளிடம் கடந்து போக வேண்டிய கட்டாயம்.

பவிக்கு பக்கத்தில் நின்று கொண்டிருந்தது  வினி தானே…..அவள் இவளை தரையில் சென்று விழாமல் தாங்கிப் பிடித்து மெல்ல படுக்க வைக்க முயன்றாள் எனில் அடுத்து ஒருவர் தண்ணீர் கொண்டு வர…. இன்னொருவர் தெளிக்க… என ஒரு பதற்றமும் படபடப்புமான சூழல் வந்து நின்றது…..

எல்லோரும் பவிஷ்யா அப்பா பேசிக் கொண்டிருக்கும் போது அவரையோ அல்லது தங்களுக்குள் நடந்த உரையாடலிலேயோ கவனத்தை  வைத்திருக்க…..அபை மட்டும் அப்போதுமே அவள் மீது தானே கவனம் வைத்திருந்தான்…. ஆக அவள் சரிய தொடங்கியதும் முதலில் பார்த்ததுமே அவன் தான்….

அவனுக்கும் விஷயத்தின் தாக்குதல் ஆணி வேர் வரை அடித்து வைக்கிறது தான்…. அடுத்த வீட்டில்  விருந்துக்கு வந்த இடத்தில்  திருமணத்திற்கு வெளிப்படையாக அழைக்கும் அளவுக்கு விஷயம் வந்திருக்கிறதென்றால் இந்த திருமண முடிவை மாத்துவதென்பது எளிதான காரியம் கிடையாது என இவனுக்கும் புரிகிறதுதான்…..

ஆனாலும்…… ஆனாலும் அவனால் இதை இறுதி முடிவாய் எண்ணவோ நம்பவோ முடியவில்லை….

அவன் என்ன உணர்கிறான் என அவனுக்கே சரியாய் புரியவில்லை…..அப்படி எப்படி பவிஷ்யாவை மீறி அவளுக்கு திருமணம் செய்துவிட முடியும் என நினைக்கிறானா?

அவளை அத்தனை தூரம் வெளிநாடு வரை அனுப்பி படிக்க வைக்கும் ஒரு பெற்றோர்….அப்படி எப்படி அவள் சம்மதம் கூட கேட்காமல் திருமணத்தை நடத்தி விடுவார்கள் என  எண்ணுகிறானா?

இல்லை இவனை மீறி யாரும் அவளை நெருங்க முடியாது என நம்புகிறானா..?

அவனுக்கு இதுதான் காரணம் என எதுவும் புரியவில்லை…… ஆனால் அவனது பவி அவனுக்கு இல்லை என்பதை அவனால் உணரவோ ஒத்துக் கொள்ளவோ முடியவில்லை…..

உள்ளுக்குள் இறங்க மறுக்கிறது பவி அப்பா சொன்ன திருமண தகவல்…. உள்ளத்துக்குள் இறங்க விட மறுக்கிறது அத்தகவலை அவன் காதல்…

இதெல்லாம் அவன் உணர்ந்து உள்வாங்கிக் கொண்டிருக்கும் அந்த நொடி நேரத்தில்…..

இவன் கண்ணெதிரில் எதிர் அறை வாசலில் தன் தோழி பக்கவாட்டில் நின்று…… அவளது முழு கவனத்தையும் தன் பேச்சில் வைத்திருக்கும் பாவத்துடன்….. இவனை கொஞ்சமும் கவனிக்கவில்லை என இவனை நம்ப செய்யும் முயற்சியுடன்….. இவனுக்கு பக்கவாட்டு முகம் காட்டி….. தன் தோழியை முழுதாய் பார்த்து…..எதையோ  சுவாரஸ்யமாய் பேசுவது போல முக பாவத்தோடு….. ஒரு கை விரலால் மறு கை விரல்களை ஒவ்வொன்றாய் தொட்டு தொட்டு எதையோ எண்ணிக் காண்பித்தபடி….. ஆனால் இவன் விழிகளுக்கு தெரியும் அவள் கன்ன கதுப்பில், இவன் பார்வை அவள் மீதே பதிந்து கிடக்கிறது என்பதை உணர்ந்து உண்டாகும் வெட்க பூரிப்பை, அதோடு தோன்றும் சின்ன சிணுங்கலை, அது கொண்டு வரும் சுக துடிப்பை  மறைத்தும் மறைக்க இயலாமலுமாய்……..  அதுவரையிலும் இவனுக்கு ஆனந்த தீயை மூட்டிக் கொண்டிருந்த அவனது பவிப் பொண்ணோ…..

இந்த விஷயம் காதில் விழவும் இப்படி சட்டென சரியவும்……எல்லாவற்றையும் மீறி முதலில் ஒரு நொடி  அவனுக்கு தலை காட்டியது கோபம்…..எப்படி இதை நம்பமுடிகிறது இவளால் என வந்த கோபம்……ஆனாலும் அடுத்த நொடி அதை நம்பும் போது அவளுக்கு எப்படி வலிக்கும் என ஒரு உணர்வு…..விழுகிறாளே……நம்பபோய்தானே விழுகிறாள்…

“ஹேய்…” என பதறியபடி இவன் முதல் எட்டு எடுக்க….அவனை அசையாது தடுக்கும் விதமாய் அடுத்த கையை அழுத்திப் பற்றினான் அதி….. கூடவே மறுப்பாக அவள் அருகில் போகாதே எனும் விதமாய் ஒரு சைகை கண்களால்…

அதற்குள் வினி பவிஷ்யாவை பிடித்திருந்தாள் என்பதோடு…..அதியுமே பவிஷ்யா அப்பாவின் அறிவிப்பு இறுதி முடிவு இல்லை என நம்புகிறான் ..அதனால்தான் இப்போது பெரிதாய் எதுவும் ப்ரச்சனை ஆகிவிடக் கூடாதென விலக்கி நிறுத்துகிறான் என்பதும் இவனுக்கு புரிய…  அது ஒரு வகையில் ஆறுதல் தந்தாலும்……

இப்போ இவன் இத்தனை பேர் லேடீஸ் நிக்க…….ஹீரோ மாதிரி ஓடிப் போய் அவளை தூக்க..… அவ உணர்ச்சி வேகத்துல எதையாவது சொல்லி அழ….. இவன் அதுக்கு பதில் சொல்லனு…….பவி அப்பாவுக்கு விஷயம் புரிஞ்சுதோ…. அடுத்து நடப்பது சண்டையாத்தான் இருக்கும்….சம்பந்தம் பண்ற பேச்சா இருக்காது….

ஆக பவி இவர்கள் இணைய முடியாது என நம்பும் படியாய் அப்படி எதுவும் காரணம் இருக்குமோ என எழுந்த நினைவையும் …..அப்படி என்ன இருந்தாலும் அதையும் தாண்டி வர நான் இருக்கிறேன் என அவளுக்கு காட்டிவிட துடித்த  அத்தனை உணர்வுகளையும்….. அழுந்த கடித்த கடைசி பற்களில் அடக்கி….இறுக மூடிய இரண்டு கை முஷ்டிகளில் தன் உள்மனிதனையும் சேர்த்து மூடி வைத்து….. எல்லோரும் பதற்றமும் பரிதவிப்புமாய் அவனது பவிஷ்யாவுக்கு முதலுதவி செய்வதை அசையாது நின்று பார்த்திருந்தான்…  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.