(Reading time: 14 - 28 minutes)

02. என் சிப்பிக்குள் நீ முத்து - தமிழ் தென்றல்

En sippikkul nee muthu

நில்லுடா.. ஓடாத! கையில மாட்டின அவ்வளவுதான் இன்னிக்கு நீ!” என்று மிரட்டியபடி தன் முன்னால் ஓடிக்கொண்டிருந்தவனை துரத்தினாள், மைத்ரீ.

நல்ல உயரம், துருதுரு பார்வை, நீண்ட தோள்கள், பரந்த மார்பு கொண்ட சஞ்சய் முகத்தில் புன்முறுவலோடு ஓடிக்கொண்டிருந்தான்.   ஆணழகனான சஞ்சய் பின்னாடி பெண்கள் சுத்தறது அதிசயமில்லை.  ஆனால் ஏன் சஞ்சய் ஓடுரான்னு புரியலையே!?

“என் காலேஜ் பையைக் கொடுடா.  நேரமாகுது, முதல் நாளே லேட்டா போக முடியாது”

“முடிஞ்சா என்னை பிடிச்சு, உன் பையை வாங்கிக்கோ”

அங்கு நின்றிருந்த ஆதர்ஷ்-ஐ பார்த்து, “அண்ணா சஞ்சயை பிடி” என்று கெஞ்சினாள் மைத்ரீ.

“காலைலியே ஆரம்பிச்சிட்டீங்களா? இன்னைக்கு நீ காலேஜுக்குப் போன மாதிரிதான்.  உங்க விளையாட்டில் நான் பலிக்கிடா ஆகமாட்டேன்.  நீயாச்சு. உன் ஜெய்யும் ஆச்சு”

“தேங்க்ஸ்டா மச்சா” என்றான் சஞ்சய்.

ஓடி களைத்தவளாய் தன் தந்தை சந்திரசேகரிடம் வந்தாள்.  “அப்பா! அவனை நிற்க சொல்லுங்க. எனக்கு நேரமாகுது”

“என்ன ஜெய் இது… அவளுக்கு மட்டும் லேட்டாகலை, உனக்கும்தான்.  நீயும் முதல் நாளே காலேஜுக்கு லேட்டா போகப்போறியா?”

“அவளை எத்தனை முறை எங்கூடவே இன்சினியரிங்க் படிக்க சொன்னேன். கேட்டாளா? இல்லையே எம்.பி.பி.ஸ் தான் படிப்பேன்னு பிடிவாதாமா சேர்ந்திட்டாள்.  சின்ன வயசிலிருந்து ஒன்னா ஒரே வகுப்புல படிச்சிட்டு இப்ப தனியா போறது வருத்தமா இருக்குப்பா.  அதனாலதான் கொஞ்ச நேரம் விளையாட்டு காட்டினேன்”

“பிடி உன் பையை” என்று அவளின் கையில் பையை திணித்தான் ஜெய்.

அவன் பேசியதை கேட்டு மனதில் எழுந்த வருத்தத்தை மறைத்து கொண்டு, “எதுக்கு? எங்கூடவே சுத்திகிட்டு, எல்லா அஸ்ஸைன்மென்டையும் என் தலையில கட்றதுக்கா? போதும்டா உன் நடிப்பு. நாங்கல்லாம் உன்னை இத்தனை வருஷமா பார்த்திருக்கோமே எங்களுக்கு தெரியாது நீ யாருன்னு!?” என்று அவன் வருத்தத்தை குறைக்க வம்பிழுத்தாள்.

அவளின் எண்ணத்தை புரிந்தவனாக, “போடி லூசு” என்று அவள் தலையில் தட்டிவிட்டு தப்பி ஓடினான் ஜெய்.

அவன் சற்று தூரம் சென்றதும், “என்ன மைத்ரீ? இப்படி சொல்லிட்டியேமா? இந்த விஷயத்துல ஜெய் ரொம்பவுமே வருத்தப்படுறான்”

“எனக்கும் தெரியும்பா! அதனாலதான் இப்படி அவனை வம்பிழுத்தேன்.  அதை புரிஞ்சிக்கிட்டு இங்கிருந்து எதுவுமே பேசாமல் போயிட்டான்”

அவன் சென்ற திசையை பார்த்துக் கொண்டிருந்த மைத்ரீ, ‘இப்படி ஒரு நண்பன் கிடைக்க என்ன தவம் செய்தேனோ?!!’ என்று நினைத்தவளின் மனம் பின்னோக்கி பயணித்தது.

எல்.கே.ஜி. வகுப்பில் ஒரு குழந்தை அழுதுக்கொண்டிருந்து.  உங்க மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்குது.  ஆமா அது மைத்ரீதான்.  அவளின் பக்கத்தில் உட்கார்ந்திருந்த சஞ்சய், “ஏன் அழற?” என்றான்.

“அம்மா வேணும்… அம்மா வேணும்” என்று மறுபடியும் அழுகையை தொடர்ந்தாள்.

“அம்மா சீக்கிரமா வந்திருவாங்க” என்று சமாதானம் சொன்னவன் அவளிடம் ஒரு சாக்லெட்டை நீட்டியவன் “இந்த சாக்லெட் சாப்பிடு” என்றான்.

அதை வாங்கி கொண்டு அழுகையை நிறுத்தினாள் மைத்ரீ.  அன்று முதல் இருவரும் ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படித்து வந்த நணபர்கள். சஞ்சய் பள்ளி பருவத்தில் பெற்றோரை ஒரு விபத்தில் பறிகொடுத்தான்.  அது முதல் மைத்ரீயின் பெற்றோரை தன் தாய் தந்தையாக நினைத்துக் கொண்டான்.  மைத்ரீயின் பெற்றோரும் அவனுடைய நிலையை எண்ணி அவனை தங்கள் மகனாகவே நினைத்தனர்.  சஞ்சயின் பெற்றோர் அவனை பிரிந்தாலும் அவனுக்கு நிறைய சொத்துக்களை விட்டு சென்றிருந்தனர்.  சஞ்சய் தன்னுடைய பெரிய வீட்டில் தனியாக இருந்தாலும் அதிக நேரத்தை மைத்ரீயின் வீட்டில்தான் செலவிடுவான்.  இதனாலேயே சஞ்சய் இந்த வீட்டில் ஒருவனாக மாறிப்போயிருந்தான்.

மைத்ரீயின் கனவு ஒரு மருத்துவராவது.  சஞ்சய் எப்போதுமே தனக்கென தன்னுடைய உழைப்பில் ஒரு தொழில் துவங்க ஆசை கொண்டவன்.  இந்த காரணத்தினால் தான் வருத்தமாக இருந்த போதிலும் இவர்களிருவரும் வேறு படிப்புகளை தேர்ந்தெடுக்க வேண்டியதாயிற்று.  மைத்ரீயின் பெற்றோருக்கும், அவள் அண்ணனுக்கும் இவர்களின் நட்பைப் பார்த்து பெருமை கொள்வதே வேலையானது.

உள்ளே சென்ற சஞ்சய், ‘இவளை ஓட விட்டு நான் களைச்சிப் போயிட்டேன்.  ஏதாவது அம்மா கையில சாப்பிட்டா இன்னும் இவளை தெம்பா வம்பிழுக்கலாம்’ என்றெண்ணியபடி சமையலையறையை நோக்கிச் சென்றான்.

“என்னம்மா வாசம் மூக்கை துளைக்குது.  என்ன ஸ்பெஷல் இன்னைக்கு?”

“வா ஜெய்! உட்காரு.  உனக்காகதான் குழிபனியாரம் சூடா வச்சிருக்கேன்.  சாப்பிடு” என்றவாறு அவனுக்கு பரிமாறினார் வடிவு, மைத்ரீயின் அன்னை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.