(Reading time: 38 - 76 minutes)

"விடு பிரணதி... என் பொண்ணோட சந்தோஷத்துக்கு முன்னாடி... இந்த பணமெல்லாம் பெருசு இல்ல..." என்று சுஜாதா கூறினாள்...

"ஆனாலும் பிருத்வி... நீ இதுவரைக்கும் வராததால.. யுக்தா விஷயத்துல இப்படி பிடிவாதமா இருக்கியேன்னு நாங்க ரொம்ப வருத்தப்பட்டோம்பா... இவ மேல இவ்வளவு அன்பு இருந்தும் ஏண்டா இப்படி இருந்த..." தன் ஆதங்கத்தை கேட்டார் வளர்மதி..

"யுக்தா வீட்டை விட்டு போனப்பவே என்னோட தப்பு எனக்கு புரிஞ்சிடுச்சுமா.. ஆனா யுக்தா வந்ததுக்குப் பிறகும் அவக்கிட்ட மனசுவிட்டு பேச தயக்கமா இருந்துச்சு... இதுல மாமா வந்து பேசினதும்... யுக்தாவை நான் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்... அவளுக்கு நான் தகுதியில்லாதவன்னு யோசிச்சிட்டேன்... அதான் யுக்தாவை பிரியறதா முடிவு எடுத்துட்டேன்..." பிருத்வி எல்லோருக்கும் விளக்கமாக கூறினான்...

"ஸாரி பிருத்வி... எல்லாத்துக்கும் காரணம் நான் தான்... நான் உன்கிட்ட அப்படி பேசியிருக்கக் கூடாது..." என்று மாதவன் வருத்தப்பட்டதும்...

"அய்யோ என்ன மாமா.. நீங்க என்கிட்ட ஸாரியெல்லாம் கேட்டுக்கிட்டு... நீங்க ஒரு அப்பாவா உங்க ஆதங்கத்தை பேசினீங்க... உங்க மேல எதுவும் தப்பில்லை மாமா..." என்று பிருத்வி அவரை சமாதானப்படுத்தினான்.

"இப்பயாவது வந்து உன்னோட மனசுல இருப்பதை சொன்னியே... ரொம்ப சந்தோஷமா இருக்கு பிருத்வி..." என்று செந்தில் சந்தோஷப்பட்டார்..

"இன்னிக்கும் காலை வரைக்கும் கூட  நான் எடுத்த முடிவு தான் சரின்னு தான் நினைச்சுக்கிட்டு இருந்தேன்ப்பா... அப்புறம் தேவா வந்து பேசினதுக்கு பிறகு தான் வேற மாதிரி யோசிக்க முடிஞ்சுது..." என்று பிருத்வி சொன்னதும்...

தேவா போய் பேசினானா..?? என்று யுக்தா உட்பட எல்லோரும் தேவாவை பார்க்க... அவனோ.. "உடனே எல்லோரும் என்ன பாராட்ட ஆரம்பிச்சிடாதீங்க... இதுக்கு காரணம் நான் மட்டுமில்ல... சங்கும் நானும் சேர்ந்து தான் பிருத்வி கிட்ட பேசனும்னு முடிவுப் பண்ணோம்... சங்கு சொன்னதோட சில விஷயத்தை சேர்த்து நான் பிருத்வி கிட்ட பேசினேன்... பிருத்வி கொஞ்சம் யோசிப்பான்னு நினைச்சோம்... ஆனா அதோட ரியாக்‌ஷன் இப்படி இருக்கும்னு நாங்களே நினைச்சுப் பார்க்கல..." என்று சொல்லிவிட்டு கவியை பார்த்து தேவா சிரிக்க... யுக்தாவோ நன்றியோடு கவியின் கையைப் பிடித்துக் கொண்டாள்...

" ஆமாம் இப்படியெல்லாம் வந்து நான் யுக்தாக்கிட்ட பேசுவேன்னு நானே எதிர்பார்க்கல... யுக்தா கிளம்பறதுக்குள்ள அவளை ஒருதடவை பார்க்கனும்... செஞ்ச தப்புக்கு அவக்கிட்ட மன்னிப்பு கேக்கனும்... அப்படி நினைச்சுக்கிட்டு தான் வந்தேன்... ஆனா இங்க வந்து யுக்தா முகத்தைப் பார்த்ததும் என்னை அறியாமலேயே என் மனசில இருப்பதெல்லாம் சொல்லிட்டேன்..." என்று யுக்தாவை பார்த்துக் கொண்டே பிருத்வி பேசினான்.. அவள் முகத்திலோ சந்தோஷப் புன்னகை...

"உங்க எல்லோரையும் நான் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்... அப்பா, அம்மா, அத்தை, மாமா எல்லோருக்கும் தேவையில்லாத மன உளைச்சலை கொடுத்திட்டேன்... எல்லோரும் என்னை மன்னிக்கனும்... வரூன், பிரணதி என்னால தான் உங்க கல்யாணம் கூட லேட்டாகுது... ஸாரி..." என்றதும்... "என்னடா இதுக்கெல்லாம் ஸாரி சொல்லிக்கிட்டு..." என்று பிருத்வியின் தோள்களில் ஆதரவாக கை வைத்தான் வரூன்...

"ஆமாம் நான் எல்லோருக்கும் கஷ்டம் தான் கொடுத்துட்டேன்... எனக்கே அது தெரியுது வரூன்... ஏன் தேவா, கவி காதலுக்கே நான் இடைஞ்சலா இருந்திருக்கேன்... நானும் யுக்தாவும் சேரனும்னு நீங்கல்லாம் வெய்ட் பண்ணீங்க..." என்று பிருத்வி பேசி முடிக்கும் முன்னரே... கவி அதிர்ச்சியோடு பார்க்க... தேவாவோ "அய்யோ இப்ப உன்னை யாரு இதெல்லாம் சொல்ல சொன்னா பிருத்வி..." என்று மனசுக்குள்ளே புலம்பினான்...

யுக்தாவோ நியூயார்க் போனதும் இவங்க ரெண்டுப்பேரையும் பேசச் சொல்லனும் என்று நினைத்திருந்தாள்... இப்போது பிருத்வி இந்த விஷயத்தை எல்லோர் முன்னேயும் சொல்லிவிட்டதால்... இனியாவது ரெண்டுப்பேரும் பேசிப்பாங்க..." என்று நினைத்துக் கொண்டு ஒரு கேளிப் புன்னகையை உதிர்த்தாள்...

இவர்களின் மூன்றுப் பேரின் ரியாக்‌ஷனை பார்த்த பிருத்வியோ... "நான் ஏதாவது தப்பா சொல்லிட்டேனா..??" என்றுக் கேட்டான்.

"பிருத்வி... இன்னும் ரெண்டுப்பேரும் ஒருத்தர்க்கொருத்தர் லவ்வை சொல்லிக்கில... அதான் இப்படி முழிக்கிறாங்க..." என்று யுக்தா விளக்கம் கொடுத்தாள்... நாம தான் உளரிட்டோம் போல.. என்று நினைத்த பிருத்வி கண்களால் தேவாவிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டான்...

"ஹேய்.. அப்போ கவியும், தேவா அண்ணாவும் லவ் பண்றாங்களா..?? எனக்கு முன்னாடியே ஒரு டவுட் இருந்துச்சு..." என்று பிரணதி குதூகலிக்க..

"பிரணா.. உனக்கு டவுட் தான்... ஆனா இவங்க ரெண்டுப்பேரையும் பார்த்தப்பவே எனக்கு கன்ஃபார்மா தெரிஞ்சிடுச்சு.." என்றான் வரூன்...

நான் தேவாவை லவ் பண்றது யாருக்கும் தெரியாதுன்னு நினைச்சா.. எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கே.. அப்படி எல்லோருக்கும் டவுட் வர்றா மாதிரியா நான் தேவாக்கிட்ட பழகியிருக்கேன்... என்று நினைத்து வெட்கத்தால் தலைக்குனிந்துக் கொண்டாள் கவி..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.