(Reading time: 38 - 76 minutes)

"மாம் ஆமாம் பெரிய தண்டனை தான்... யுக்தாவால் தான் இப்படியெல்லாம் தண்டனை கொடுக்க முடியும்... எல்லோருக்காகவும் நீ யோசிக்கறது ரொம்ப சந்தோஷமா இருக்கு... அதனால தான் நீ இல்லாத நேரத்துல எல்லோரும் என்னை ஆங்கிரிபேர்ட் கணக்கா முறைச்சாங்கப் போல.." என்றவன் அவள் கன்னத்தில் இதழ் பதித்தான்...

அந்த நேரம் ட்ராவல் பேகை கவனித்தவள்... ஏதோ ஞாபகம் வந்தவளாக அந்த பேகிலிருந்து ஒரு கவரை எடுத்தவள்... அதை பிருத்வியிடம் காட்டி... "பிருத்வி இது நான் உங்களுக்காக வாங்கின டி-ஷர்ட்.. நல்லா இருக்கா..?? தேவா, கவியோட ஷாப்பிங் போனப்போ வாங்கினது... அப்புறம் உங்க கையில் கொடுக்கலாம்னு நினைச்சேன்... ஆனா அப்புறம் டைவர்ஸ் வரைக்கும் பேச்சு வந்ததும் கொடுக்காமலேயே நானே எடுத்துக்கிட்டு போக முடிவுப்பண்ணிட்டேன்... இது உங்களுக்கு பிடிச்சிருக்கா..??" என்றுக் கேட்டாள்.

அதை வாங்கியவன் பிடித்திருக்கிறது என்றான்... பின்.. "யுக்தா நானும் உனக்கு ஒன்னு வாங்கியிருக்கேன் என்றவன்...  கப்போர்டை திறந்து ஒரு நகைப் பெட்டியை எடுத்தான்... அதை அவள் கையில் கொடுத்த போது அதை அவள் பிரித்துப் பார்க்க... அதில் இதய வடிவ லாக்கெட்டோடு ஒரு செயின் இருந்தது...  அந்த லாக்கெட்டை திறந்துப் பார்த்தால் இவர்களின் சிறு வயது புகைப்படம் இருந்தது... அதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டவள்...

"ரொம்ப நல்லா இருக்கு பிருத்வி இந்த கிஃப்ட்... எப்போ வாங்கினீங்க..??" என்று கேட்க...

"சொன்னா சிரிக்கக் கூடாது.." என்றவன் அவளை மீண்டும் கட்டிலில் அமர வைத்து... அவனும் அவளுடன் நெருங்கி உட்கார்ந்தான்...

"அம்மாக்கும், பிரணதிக்கும் நகை வாங்கினேனே... அப்பவே இதை உனக்கு வாங்கிட்டேன் யுக்தா... நீ என்னோட பர்த்டேக்கு ப்ரேஸ்லெட் கொடுத்தப்போ... அந்த SP க்கு விளக்கம் சொன்னல்ல.. அப்பவே அது சம்யுக்தா, பிருத்விராஜா இருக்கக் கூடாதான்னு நான் யோசிச்சேன்... அப்போ நீ ஊருக்குப் போகப்போறதா சொன்னப்போ மனசுக்கு கஷ்டமா இருந்தாலும்... நீ போகும் போது உனக்கும் நம்ம ஃப்ரண்ட்ஷிப் ஞாபகமா ஏதாவது கொடுக்கனும்னு நினைச்சேன்...

ஆனா அந்த நைட்... நம்ம வாழ்க்கையையே மாத்திடுச்சு... அப்புறம் நான் கோபத்தோட சுத்திக்கிட்டு இருந்தேன்... அன்னைக்கு புது ப்ராஜக்ட் கிடைச்ச சந்தோஷத்துல உங்களுக்கெல்லாம் ஏதாவது வாங்கனும்னு நகைக் கடைக்கு போனப்போ.. அம்மாக்கும், பிரணதிக்கும் ஃபர்ஸ்ட் வாங்கிட்டேன்... உனக்கு என்ன வாங்கலாம்னு யோசிச்சப்ப பக்கத்துல ஒருத்தர் லாக்கெட்டோட செயின் வாங்கறத பார்த்தேன்... சரி உனக்கும் அது போல வாங்கினேன்... அப்போ இதுல போட்டோ வைக்கிற ஐடியால்லாம் இல்ல...

அம்மாக்கிட்ட கொடுத்து இதை உங்கிட்ட கொடுக்கனும்னு நினைச்சேன்... ஆனா அம்மாவோ நீ இருக்கப்பவே நேரடியா உனக்கு என்ன வாங்கிட்டு வந்தேன்னு என்கிட்ட கேட்டாங்களா...?? அப்போ எனக்கு இருந்த கோபமும், ஈகோவும் உனக்கு வாங்கிட்டு வந்ததை உன்கிட்ட கொடுக்க விடல.... அதான் எதுவும் வாங்கிட்டு வரலன்னு சொன்னேன்...

அதுக்கப்புறமும் அதை உங்கிட்ட கொடுக்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைக்கல... அப்போ தான் நீ லெட்டர் எழுதி வச்சிட்டு வீட்டை விட்டுப் போன... அப்பத்தான் என் மனசு முழுக்க நீதான் இருக்கன்னு தெரிஞ்சுது... நீ திரும்பி வரும்போது இந்த செயினை கொடுத்து காதலை சொல்லனும்னு, நம்மளோட லேட்டஸ்ட் போட்டோவை இதுல வச்சிருந்தேன்... ஆனா நீ வந்தும் என்னால உன்கிட்ட எதுவும் பேச முடியல...

அப்புறம் உன்னை விட்டு ஒரேடியா பிரியனும்னு முடிவெடுத்தப்போ... நீ நியூயார்க் போகறதுக்குள்ள நம்ம ப்ரண்ட்ஷிப் ஞாபகமாவது இதை உன்கிட்ட கொடுக்கனும்னு நம்ம சின்ன வயசு போட்டோவை மாத்தி வச்சேன்... ஆனா அப்பவும் உன்னை பார்க்கும் தைரியம் எனக்கில்ல... எங்க இந்த கிஃப்ட்டை உன்கிட்ட கொடுக்க முடியாமலேயே போய்டுமோன்னு கூட நினைச்சேன்...

இப்போ இதை உன்கிட்ட கொடுத்தாச்சு... இதுல நாம இப்போ வேற போட்டோக் கூட சேன்ஞ் பண்ணிக்கலாம்... என்ன சொல்ற...??"

"இல்லை பிருத்வி... இதுவே இருக்கட்டும்... எனக்கு இதுவே பிடிச்சிருக்கு... இப்போ இதை போட்டுவிடுங்க " என்று அவள் சொன்னதும் அவன் அதைப் போட்டுவிட்டான்...

"தூங்கற நேரமும், குளிக்கிற நேரமும் தவிர... எப்போதும் இது என் கழுத்துல இருக்கும் பிருத்வி... கிஃப்ட்க்கு ரொம்ப தேங்க்ஸ்..."

"ஹேய் என்ன சாதாரணமா தேங்க்ஸ் சொல்ற... இதுக்கு ஸ்பெஷலா நீ தேங்க்ஸ் சொல்லனும்..." என்றதும் அவள் புரியாமல் பார்க்க...

"ஆக்சுவலா நீ இப்படி தான் தேங்க்ஸ் சொல்லனும்..." என்று தன் உதட்டை காட்டியவன்... "இருந்தாலும் பரவாயில்ல... இப்படி தேங்க்ஸ் சொன்னாலே போதும்..." என்று அவன் கன்னத்தை காட்டினான்...

அவன் அப்படி சொன்னதும்... உடனே அவன் கன்னத்தில் அவள் இதழ் பதிக்க... உடனே மறு கன்னத்தையும் காட்டினான்... அதிலும் அவள் இதழ் பதிக்க...

"இப்படி கேட்ட உடனே கொடுப்பன்னு நினைக்கல யுக்தா... தெரிஞ்சிருந்தா இப்படியே தேங்க்ஸ் சொல்ல சொல்லியிருக்கலாமோ..." என்று மறுபடியும் அவன் உதட்டை காட்டி கண்ணடித்தான்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.