(Reading time: 12 - 24 minutes)

வரது முகம் பலவீனமாய் இருந்தது!!எனினும்,கம்பீரம் குறையவில்லை.

அவர் அந்த சிம்மத்தை தள்ளி மீண்டும் அதன் நெஞ்சினில் குத்தினார்.அது அவரது மார்பினில் கீறியப்படி உயிரை தியாகித்தது.

நடந்தவற்றை திகிலோடு பார்த்துக் கொண்டிருந்தாள் யாத்ரீகா!அவளது நினைவை கலைத்தது இளவரசரின் அலறல்!!!

"இளவரசே!"-என்று அலறியப்படி ஓடிச்சென்று அவரை தாங்கினாள்.

அவர் மெல்ல எழுந்து ஒரு மரத்தடியில் சாய்ந்தார்.

சற்று ஆழமாக இருந்தது அந்தக் கீறல்!!யாத்ரீகாவின் கண்களில் ஈரம் கசிந்தன...

"எனை மன்னித்தருளுங்கள் இளவரசே!"-என்று கண்ணீர் வடித்தாள்.

"இச்சமயம் இங்கு ஏன் வந்தாய்?"

"நான்..நான் தமக்கு உடல்நலம் சரியில்லை என கேள்வியுற்றேன்!தமக்கான ஔஷதங்களை தேடி வந்தேன்!"

-அவர் தமது கண்களை மூடினார்.

"இளவரசே!என்னை காணுங்கள்..!""-என்று பதறினாள் யாத்ரீகா.

அவர் அசையவில்லை.

"இறைவா!நான் என்ன செய்வேன்!"-என்று பதறியவரின் கண்களில் நாகவில்வங்கள் தென்பட்டன...

"நாகவில்வத்தின் துளிச்சாறு ஆயிரம் ராஜநாகத்தின் விஷத்தை முறிக்கும் சக்தி பெற்றது!"-என்ற வாக்கியம் நினைவு வந்தது.

ஓடிச்சென்று அதனை எடுத்து வந்தவள் அதை பிழிந்து அவரது காயத்தில் இட்டாள்.

மாற்றங்கள் ஏதும் நிகழ்ந்ததாய் தெரியவில்லை.

"கண் திறவுகள் இளவரசே!என்னை காணுங்கள்!"-என்று அவரது மார்பில் சாய்ந்து அழுதாள்.

அவரது மார்பில் இருந்த ரத்தகசிவு நின்று உடனடியாக தோல் கூடியது!!ஒரு பெரும் இருமலோடு கண்விழித்தார் அவர்.

"இளவரசே!இளவரசே!"-அவரது மூச்சின் வேகம் சீராக ஆரம்பித்தது.

எதைக்குறித்தும் சிந்திக்காமல் அவரை அணைத்துக் கொண்டாள்.

அவளது செய்கையில் உண்மையில் திடுக்கிட்டு போனார் ராஜகுமாரர்.

"என்னை மன்னியுங்கள்!"-அவரது கரங்கள் தன்னால் அவளை வளைத்தன..அந்நிலையிலும்,இதழின் ஓரம் சிறு புன்னகை தவழ்ந்தது.

அடிப்பட்ட வடு அம்மந்திர மூலிகையின் மந்திரத்தால் இருந்த இடம் தெரியாமல் மறைந்துப் போயிருந்தது!

இருவரும் இருந்த நிலையில் தங்களை மறந்திருந்தனர்.

காலம் சற்று நகர,யாத்ரீகா இளவரசரின் அணைப்பினை மெல்ல தியாகித்தாள்.

இரு மனங்களும் மௌனமாக பேசிக்கொள்ள,நான் விழிகளும் தடுமாறி போயின.

மனதின் காதல் வெளிவர துடித்துக் கொண்டிருக்க,மனம் அதை கட்டுப்படுத்த இயலாமல் திணறிக் கொண்டிருந்தது.

யாத்ரீகை தலைக்குனிந்தப்படி ராஜகுமாரரின் முன் அமர்ந்திருந்தாள்.

சில நொடிகள் அவள் முகத்தையே ஏக்கத்தோடு பார்த்தவர்,மெல்ல எழ முயன்றார்.

"நான் உதவி புரிகிறேன்!"-என்று அக்கறையோடு அவரை தாங்கினாள் சேனாதிபதியின் புதல்வி.

அவள் சங்கு கழுத்தை வளைத்தப்படி மெல்ல எழுந்து நின்றார் அவர்.

"விரைந்து இவ்விடம் நீங்குதல் அவசியம்!என்னோடு வா!"-சில அடிகள் எடுத்து வைத்தவர்,"தேஜா!"என்று குரல் கொடுத்தார்.

எஜமானரின் அழைப்பிற்காக காத்திருந்த அஸ்வம் விரைந்து ஓடி வந்தது.

மிக லாவகமாக அதன்மீது ஏறினார் இளவரசர்.

யாத்ரீகாவை நோக்கி தன் கரத்தினை நீட்டினார்.

அவள் தயங்கியப்படி அவரை பார்க்க,சற்றும் சிந்திக்காமல் குனிந்து அவள் இடையை பற்றி தூக்கி அஸ்வத்தின் மேல் அமர செய்தார்.

அந்த வேகத்தில் நிலை தடுமாறியவள்,அவர் மேல் சாய்ந்தாள்.

இருவரும் ஒரு நொடி பார்த்துக்கொள்ள,

"இக்கன்னிகையை விரைந்து அவள் இல்லத்தில் சேர்க்க வேண்டும் புறப்படு!"-என்று சுயநினைவு வந்தவராய் தன் அஸ்வத்திடம் கூறினார் இளவரசர்.அது விரைந்து அங்கிருந்து புறப்பட்டது.

சில மணிகளில் குளக்கரையில் நின்றது அது!!

"இங்கிருந்து நீ தனித்து செல்ல இயலுமா?நான் உன்னோடு ஊரார் முன்னிலையில் வருவது உசிதமாகாது!"-அவள் தலையசைத்தாள்.

அஸ்வத்தைவிட்டு இறங்கினார் இளவரசர்.

அதே அஸ்வத்தை நீங்க தடுமாறியவளை மெல்ல பிடித்து இறக்கிவிட்டார்.

இருவரது மனமும் இப்பிரிவினை ஏற்கவில்லை என்பதற்கு பிணைந்திருந்த அவர்களின் கரமே சாட்சியாகி இருந்தது.

"விடைபெறுகிறேன் இளவரசே!"-என்ற அவளது குரலில் நிஜ உலகினை அடைந்தவர்,

"ஆ...ஆகட்டும்!"என்று அவளது கரத்தை விடுதலை செய்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.