(Reading time: 15 - 30 minutes)

நோ சஞ்சு! உனக்கெதுக்கு வீண் சிரமம்.  நீ எனக்காக வெயிட் பண்றதே கில்டியாயிருக்கு… இதுல என்னை டிராப் பண்றதெல்லாம் வேணா சஞ்சு” என்று அவள் தன் மனதிலிருப்பதை சொல்லவும்

ஜெய்யின் முகம் வாடியது.  என்னை யாரோன்னு நினைக்கிறதால தானே இப்படி பேசுறா என்று அவன் நினைக்கவும் இப்பவாவது உனக்கு புரிஞ்சதே… கொஞ்சமாவது யோசி ஜெய்! அவளுக்கு உன்னை ரெண்டு நாளாதான் தெரியும்… ஆனா நீ அவகிட்ட இருந்து ரொம்பவே எதிர்பாக்குற… அவளுக்கு கொஞ்சம் டைம் கொடு என்றது அவன் மனம்.

சரயூவின் ஃபோன் அடிக்கவும் டிஸ்ப்ளேவில் ராகுலும் சரயூவும் சிரிக்க.. சட்டென ஃபோனை எடுத்தவள்,

“எங்க இருக்க ராகுல்? எவ்ளோ நேரம் வெயிட் பண்றதுடா?”

“சாரிடா சரயூ! ஆஃபிஸ் பக்கத்திலேயே டிராஃபிக்ல மாட்டிகிட்டேன்.  இங்க ஒரு ஆக்ஸிடெண்ட் அதனால ஜாம் ஆகியிருக்கு.  ரொம்ப நேரமா உனக்கு ஃபோன் ட்ரை பண்ணிட்டிருந்தேன்.  இப்போ தான் லைன் கிடைச்சது.  எனக்காக வெயிட் பண்ணாத…. நீயொரு ஆட்டோ பிடிச்சு வீட்டுக்கு போயிடு.  நான் வர இன்னும் இரண்டு மணி நேரமாவது ஆகும்”

“ஓகே! நான் ஆட்டோலியே போயிடுறேன்.  நீ பத்திரமா வா” என்றபடி அழைப்பை முடித்தவள் ஜெய்யிடம் திரும்பி

“நீ எப்படி சரியா சொன்ன சஞ்சு!! ராகுல் டிராஃபிக்ல தான் மாட்டியிருக்கா.  என்னை வெயிட் பண்ண வைக்கணும்னு எதுவும் செய்யல.  நான் இப்போ ஆட்டோல போறேன்.  நீயும் கிளம்பு சஞ்சு” என்றபடி அவள் நடக்கவும் அவன் அங்கேயே நின்றிருந்தான். 

‘முகம் தெரியாத ஒரு ஆட்டோகாரனை நம்ப முடிஞ்ச உன்னால என்னை நம்ப முடியலையா சரூ.  உனக்கு அவ்வளவு அந்நியமாயிட்டேனா நான்?’ என்று ஜெய் வருந்தினான்.

பதிலேதும் வராது போகவும் அவனிடமாக திரும்பியவள் ஜெய் அங்கில்லை என்றதும் ‘இப்போ தானே இங்கிருந்தான்.  எங்க போனான்?’ என்று சுற்றிலும் பார்த்தாள்.  ஜெய் இன்னமும் அங்கேயே நின்றிருக்க அவனிடமாக வந்தவள்

“என்னாச்சு மச்சா? ஏன் இங்கயே நிக்குற? வீட்டுக்குப் போகலையா? எனக்காக வெயிட் பண்ணி ஆல்ரெடி லேட்டாயிருச்சு.  சீக்கிரம் கிளம்பு சஞ்சு”

தன் வருத்தத்தை மறைத்தவனாக, “ஒரு நிமிஷம் இரு.  நான் போய் கார் எடுத்துட்டு வந்துடுறேன்.  அப்புறம் நீ ஆட்டோவைக் கூப்பிடு” என்றவன் கார் பார்க்கிங்கை நோக்கி விரைந்தான்.

‘நான் என்ன கேட்ட.. இவன் என்ன சொல்லிட்டு போறான்..ஒருவேளை இப்படி இருக்குமோ? இவ்வளவு நேரம் எனக்காக வெயிட் பண்ணினதனால எனக்கு ஆட்டோ கிடைச்ச உடனே அவனும் கிளம்பனும்னு காரை நான் இங்கிருக்கும்போதே எடுத்துட்டு வரப் போனானோ? கடவுளே என்ன காரணமாயிருக்கும்னு எனக்கு சொல்லக் கூடாதா நீங்க?’ முதலில் குழம்பி பிறகு தனக்கு தானே ஒரு காரணத்தை சொல்லியும் சமாதானமாகாத தன் அவசர மனதின் செயலால் கடவுளிடமும் கேட்டுக்கொண்டிருந்தாள் சரயூ.

அதற்குள் அங்கு வந்து சேர்ந்த ஜெய் காரிலிருந்து இறங்கி இவளிடமாக வந்து, “இப்போ ஆட்டோ கூப்பிடறேன்… சீக்கிரமா வீட்டுக்கு போயிடலாம்”

கடவுளிட்டருந்து பதிலேதும் வராததால சரயூவோட மூளை சஞ்சுகிட்டயே கேக்கலாமேன்னு ஒரு மாபெரும் ஐடியாவைச் சொல்லவும், “வீட்டுக்கு போலாம்… ஆனா அதுக்கு முன்னாடி எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சாகனும் இல்லைனா தலையே வெடிச்சிடும்… எதுக்காக கார் இங்கே எடுத்து வந்தப்புறம் தான் ஆட்டோ கூப்பிடனும்னு சொன்ன சஞ்சு?” அவசரமும் ஆர்வமுமாக கேட்டவள் கண்களை உருட்டியபடி அவன் முகத்தைப் பார்த்தாள்.

சரயூவை வீட்டில் டிராப் செய்ய முடியலையேன்னு இருந்த வருத்தத்தையும் மீறி அவளின் பேச்சும் பார்வையும் அவனை சிரிக்கவைத்தன.

“மச்சா! நான் இப்போ என்ன கேட்டுட்டேன்னு சிரிக்கிற?” 

அவன் இப்போதும் நிறுத்தாமல் சிரிக்கவும்

“அப்பவும் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம போயி கார் எடுத்திட்டு வரேன்னு சொன்ன இப்பவும் பதில் சொல்லாம சிரிக்கிற” கைகளை இடுப்பில் வைத்து காட்டமாக நின்றாள்.

சிரிப்பை அடக்கியவாறு, “சாரி சரூ! நீ ஆட்டோல தனியா போறது சேஃபில்லைனு எனக்கு தோனிச்சு.  அதனால உன்னை கார்ல ஃபாலோ பண்ணதான்…” என்றவனின் குரலிலிருந்த சிரிப்பு மறைந்து தயக்கம் குடியேறியிருந்தது.

சரயூவின் அப்பா அவளை ஒரு தைரியமான பெண்னாக வளர்த்திருக்கிறார்.  இவனின் இந்த சொல் தன் அப்பாவின் வளர்ப்பைக் குறை சொல்லிவிட்டதே என்றெழுந்த கோபம் “ஆட்டோல போறதெல்லாம் பெரிய விஷயமில்லை.  அது மட்டுமில்லாம நான் தனியா போறதுக்கு பயப்படறவ இல்லை, சஞ்சு.  என்னை எங்கப்பா ஒன்னும் அப்படி வளர்க்கலை” என்று பொரியவைத்தது. 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.