(Reading time: 19 - 37 minutes)

ங்கே...

தனது வீட்டை அடைந்திருந்தாள் அபர்ணா. அவர்களை வரவேற்ற அம்மாவுக்கு நிறையவே சந்தோஷம். அஸ்வினியை தன்னோடு சேர்த்துக்கொண்டு அவளது உடல் நிலையை விசாரித்து, எல்லா காயங்களையும் ஆராய்ந்து அவளை சாப்பிட வைத்து பேசி பேசித்தீர்த்த பிறகு அபர்ணாவிடம் வந்தார் அவர்.

'மாப்பிள்ளையை பத்தி நான் நிறைய இடத்திலே விசாரிக்க சொல்லி இருந்தேன். எல்லாரும் நல்ல விதமாதான் சொல்றாங்க. அபர்ணாவுக்கும் பிடிச்சிருக்கு பேசி முடிச்சிடலாமா நாம??? அப்பா கேட்டார் அம்மாவை பார்த்து. உதட்டை சுழித்து திரும்பிக்கொண்டாள் அஸ்வினி.

அவர் நல்லவர் தான் எனக்கு தெரியும். அந்த மழையே வந்து சாட்சி சொல்லிச்சே அவருக்கு...' ஏதோ புரிந்துக்கொண்டு அம்மா ஏதோ சொல்ல அம்மா எதை குறிப்பிடுகிறார் என அபர்ணாவுக்கு புரிய..

'மழையா???' என்றாள் சட்டென 'மா .. அதெல்லாம் இல்லை மா..'

'என்னது மழை? எனக்கு புரியலை. அவர் பேர் அருண். அபர்ணா கூட வேலை பார்க்கிறார்.. அப்பா சொல்ல ஏனோ கொஞ்சம் மாறித்தான் போனது அம்மாவின் முகம்.

அருணை பற்றிய விவரங்கள் கேட்டுக்கொண்டு சரியென தலை அசைத்து விட்டு உள்ளே போய்விட்டார் அம்மா.

சிறிது நேரம் கடந்திருக்க, அம்மாவும் அபர்ணாவும் ஒரே அறையில் படுத்திருந்தனர். உறக்கம் கிட்டவில்லை போலும் அம்மாவுக்கு.

'அன்னைக்கு அந்த ஃபங்ஷன்லே கூட உனக்காக தான் பாடினான் இல்லையா அந்த பரத்??? மெல்ல கேட்டார் அம்மா.

சட்டென எழுந்து அமர்ந்தே விட்டாள் அபர்ணா 'மா என்னாச்சு உனக்கு???'

'இல்லமா... ஏதேதோ யோசனை. அன்னைக்கு ஒரு நாள் நான் பரத்தை கொஞ்சம் அவமான படுத்திட்டேன் அந்த பரத் அப்போ இருந்த நிலைக்கும் இப்போ இருக்கிற நிலைக்கும் நிறைய வித்தியாசம். எல்லாம் உனக்காக தானோன்னு பைத்தியம் மாதிரி யோசிக்கிறேன். அதான்...'

கொஞ்சம் திகைத்து போனவளாக அம்மாவையே பார்த்திருந்தாள் அபர்ணா.

'சரி எதுவா இருந்தாலும் உனக்கு பிடிக்கணும் இல்ல... நீ குழப்பிக்காதே தூங்குமா... ' சொல்லிவிட்டு திரும்பி படுத்துக்கொண்டார் அம்மா.

காலையில் இந்துஜா உறங்கிக்கொண்டிருக்க அவள் விழிப்பதற்குள் வீட்டுக்கு சென்று திரும்பிவிடும் எண்ணத்துடன் தனது அறைக்கு வந்தான் விஷ்வா. அவன் மேஜையின் மீது இருந்தது அந்த மருத்துவ அறிக்கை. அம்மாவின் தலை வலிக்காக செய்த பரிசோதனைகளுக்கான மருத்துவ அறிக்கை.

அதை பிரித்துக்கொண்டு அமர்ந்தான் விஷ்வா. அதை அவன் படித்துக்கொண்டிருந்த நேரத்தில் அவனுக்குள்ளே சில பிரளயங்கள் நிகழ்ந்தன. விரல்கள் அந்த அறிக்கையை புரட்டிகொண்டிருக்க மனம் தாறுமாறாக சுழன்றது.

அதை முடித்துவிட்டு நிமிர்ந்தவனின் முகம் இறுகிக்கிடந்தது. கண்களை மூடிக்கொண்டு நாற்காலியில் சாய்ந்துக்கொண்டான் அந்த மருத்துவன். அவன் கண்திறந்த போது அவன் பார்வை அவனது மேஜை மீதிருந்த அந்த சின்ன கண்ணன் சிலையின் மீது பதிந்தது.

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,
அதுவும் நன்றாகவே நடக்கும்

சில நிமிடங்கள் அந்த கண்ணனையே பார்த்திருந்தவன் ஒரு முடிவுடன் எழுந்தான். ஒரு மணி நேரம் கடந்திருக்க ரிபோர்ட்டுகளுடன் வீட்டுக்குள் நுழைந்தான் விஷ்வா.

வீட்டுக்குள் நுழைந்துவுடன் அவன் அம்மாவை தேடி பல நாட்கள் ஆகின்றன!!! ஓடி சென்று தனது அறைக்குள் புகுந்துக்கொண்டு கதவடைத்துக்கொள்வதே இப்போதெல்லாம் வழக்கமாகி இருக்கிறது!!  இன்று ஏனோ பரபரவென அம்மாவை தேடின கண்கள்.

சமையலறையை அடைந்து அம்மாவின் முன்னால் சென்று நின்றான் விஷ்வா. அம்மா இவனை கவனிக்காமல் வேலையில் மூழ்கி இருக்க..... அந்த ஒரு நிமிடத்தில் பல நூறு முறை செத்து பிழைத்தவனாக குரல் நடுங்க அவரை அழைத்தான்

'அம்மா!!!'

சில மணி நேரங்கள் கழித்து மறுபடியும் மருத்துவமனைக்கு வந்திருந்தான் விஷ்வா. தனது வழக்கமான வேலைகளை முடித்து விட்டு இந்துஜா இருக்கும் அறையை அடைய நேரம் மதியம் ஒன்றாகி இருந்தது.

அறைக்குள்ளிருந்து ஒரு நர்சின் குரல் மட்டும் கேட்டது. 'நீங்க என்ன சொல்றீங்க எனக்கு புரியலை...'

அப்படி என்ன சொல்லிகொண்டிருக்கிறாள் இவள் என்று யோசித்தபடியே உள்ளே நுழைந்தவனின் முகத்தில் நிறையவே சுவாரஸ்ய ரேகைகள் ஓடின. அவள் முக பாவத்தில் இருந்தே அவளுக்கு வலி கொஞ்சம் குறைந்திருக்க வேண்டுமென புரிந்தது அவனுக்கு.

விரல் அசைத்து கண்களை விரித்து சுருக்கி அவள் கேட்ட கேள்வி அவனுக்கு தெளிவாக புரிந்தது. அவன் இதழோரத்தில் புன்னகை. நர்சை அனுப்பிவிட்டு அவளருகில் வந்தான் விஷ்வா.

'கால் உடைஞ்சு போயிருக்கு இந்த ரணகளத்திலே உனக்கு இப்படி ஒரு கேள்வி எதுக்கு??? இதை தெரிஞ்சிட்டு நீ என்ன பண்ண போறே??? ம்???' குரலை கஷ்டப்பட்டு மிரட்டும் தொனிக்கு நகர்த்திக்கொண்டான் அவன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.