(Reading time: 19 - 38 minutes)

பாட்டும் நானே பாவமும் நானே என்பது போல, மன்னிப்பு கேட்பதும் நானே! மன்னிப்பதும் நானே ! என்ற பானியில் பேசிவிட்டு சகியைத் தேடி போனாள்.

“ப்லூ கலர் கேப் போட்டிருந்தவன் எங்கே?” என்று  தன்னையே கேட்டுக் கொண்டு நடந்தவள், தன்முன் முதுகு காட்டி நின்று கொண்டிருந்தவனைப் பார்த்து அதிர்ந்தாள்.

சில வாரங்களுக்கு முன்பு, அவளது அத்தை மகனாகிய கதிரோவியனும், இப்படித்தானே முதுகு காட்டி நின்றுக் கொண்டிருந்தான்? தெரிந்த பொண்ணுனு சொன்னானே? அப்போ அவன் தானோ?என்று  சிந்தித்தாள் மைத்ரேயி.

“கதிர்க்கு சென்னையில ஐ டீ கம்பனியில நல்ல வேலை கிடைச்சது. ஆனா அவன்தான் விவசாயம் அது இதுன்னு வேணாம்னு சொல்லிட்டான்!” மையூவிற்கு அவளது அப்பத்தா சொன்னது நினைவிற்கு வந்தது. “ஓஹோ, முடிவை மாற்றிக் கொண்டு சென்னைக்கே வந்துவிட்டான் போலும்.!என்று நினைத்தவள், அவனை நோக்கி நடந்து வந்து

“அத்தான்..” என்று அழைத்தாள். கொஞ்சமே கொஞ்ச நேரம் மைத்ரேயி பேசியிருந்தாலும், அவளது குரல் சகிதீபனுக்கு பரிட்சயமாகி இருந்தது.

“அத்தான்” என்று தன்னை அழைத்தது அவள் தான் என்று திரும்பி பார்க்காமலேயே புரிந்துக் கொண்டவனுக்கு ஜிவ்வென்று இருந்தது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "நிர்பயா" - சமூகத்தில் நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கும் பெண்ணின் கதை...

படிக்க தவறாதீர்கள்..

வசீகரமான புன்னகையொன்றை இதழில் பொருத்தி, “என்ன?” என்று வியப்புடன் கேட்டபடி தனது கேப்பை நிக்கி முழுமுகத்தை காட்டினான் சகிதீபன்.

பூமியை விட வேகமாய் சுழன்றது மைத்ரேயியின் உணர்வுகள். இது கனவா நிஜமா? கனவில் கண்ட அவனை நேரிலே காண்கிறேனா? வியப்பில் உச்சத்தில் இருந்தவளை பரிகாசித்தது அவள் மனம்.

“என்னமோ ஒரு வாரத்தில் என்ன நடக்கும்னு கேட்டியே? ஒரே நாளில் வந்துட்டானே ! இப்போ என்ன சொல்ல போற?” என்று மனமானது பரிகாசம் செய்தது.

“ஹலொ மேடம்.. என்னம்மா.. என்னங்க?” என்று சகிதீபன் அவளிடம்  கேள்வியெழுப்ப பதில் பேசாமல் நின்றாள் மைத்ரேயி. அந்த  சின்ன இடைவெளியில் அவளுக்கு “வீரலக்ஷ்மி” என்று பெயரே வைத்திருந்தான் சகிதீபன். நேரம் ஆக ஆக அங்கு கூட்டம் சேர்ந்துகொண்டே இருக்க, வேறு வழியின்றி மைத்ரேயியின் கரம் பிடித்துக் கொண்டு தனது வேனை நோட்டி நடந்தான் அவன்.

என்னமோ திருமண வைபவத்தில் அவனோடு அக்கினியை வலம் வருபவள் போலவே நடந்து கொண்டிருந்தாள் மைத்ரேயி. விசை போட்டால் உயிர் பேரும் கருவி போல, அவன் பேச்சுக்கு இணங்கி இருக்கையில் அமர்ந்து கொண்டாள் மைத்ரேயி.

எதுவும் பேசாமல் வண்டியை எடுத்துக் கொண்டு கொஞ்ச தூரம் சென்றபின் காரை நிறுத்தினான் சகி. மையுவும் அதற்குள் கொஞ்சம் இயல்பாகியிருந்தாள்.

“சாரி”

“சாரி” இருவரும் கோரசாய் ஒரே நேரம் சொல்லிவிட்டு அதை எண்ணி சிரித்துக் கொண்டனர்.

“உங்களைப் பார்த்த ஷாக்ல எதுவும் பேசாம இருந்துட்டேன்” என்று உண்மையைச் சொன்னாள் மைத்ரேயி.

“ஷாக்கா? யூ மீன் மின்சாரம்? மின்சாரம் என் மீது பாய்கின்றதேன்னு பாட்டு கேட்டுச்சா?” என்று ஆர்வமாக கேட்டான் சகி.

“பாஸ் நான் ஷாக்ன்னு சொன்னது அதிர்ச்சியத்தான் ..வேற ஒன்னும் இல்லை!” என உடனே மறுத்தாள் மைத்ரேயி.

“ உங்களுக்கு போலீஸ்கார அண்ணனோ, தம்பியோ இருக்காங்களா வீரலக்ஷ்மி?” என்று கேட்டான் சகிதீபன். அவனுக்கு பதில் சொல்லாமல் சுற்றியும் முற்றியும் பார்த்தாள் மைத்ரேயி.

“என்னம்மா?”

“இல்ல, யாரு வீரலக்ஷ்மி? இந்த வேனில் வேற யாராவது இருக்காங்களான்னு பார்க்குறேன்!” என்றாள் சிரிக்காமல்.

“ ஓ அதுவா.. உங்க பேரு என்னனு தெரியல. அந்த பையன் கிட்ட சண்டை போட்டப்போ கோவில்பட்டி வீரலக்ஷ்மி படம் ஞாபகம் வந்துருச்சு. அதான் ..”

“ ஹா ஹா..ஆமா, எனக்கு போலீஸ்கார அண்ணனோ, தம்பியோ இருக்காங்களான்னு கேட்டிங்களே ஏன்?”

“ உங்க அனுமதி இல்லாமல் தூக்கிட்டு வந்தேன்ல?”

“ஆங்.. என்ன?” என்று மைத்ரேயி அதிரவும்,

“ ஐ மீன் கூட்டிட்டு வந்தேன்ல? அதான் சொன்னேன்..”

“ அதான் வீரலக்ஷ்மின்னு சொன்னீங்களே, அப்போ உங்களை தண்டிக்க நானே போதாதா? என்று மிரட்டினாள் மைத்ரேயி.

“தெய்வமே .. ஆளை விடுங்கம்மா.. நான் எங்கம்மாவுக்கு ஒரே பிள்ளை “ என்றான் சகிதீபன்.

“ஓஹோ நீங்க வீட்டுக்கு ஒரே பிள்ளையா?”

“ச்ச ச்ச, ஒரு அண்ணன், ஒரு தங்கச்சி. ஒரு அண்ணி”

“பின்ன ஒரே பிள்ளைன்னு சொன்னீங்க?”

“ இவ்வளோ அழகா, ஸ்மார்ட்டா, புத்திசாலியா, அளந்து பேசுற ஒரே பையன் நான்தான்.. அதை வெச்சு சொன்னேன்” என்று சகி கூறவும் கலகலவென சிரிக்க ஆரம்பித்தாள் மைத்ரேயி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.