(Reading time: 19 - 38 minutes)

08. உன் நேசமதே.. என் சுவாசமாய்..!! - சித்ரா. வெ

love

யிரம் வர்தா புயல்கள் ஒன்று சேர்ந்து தாக்கிய ஒரு உணர்வோடு... அதிர்ச்சியில் நின்றிருந்தாள் நர்மதா..

யாரை இனி வாழ்நாள் முழுதும் பார்க்கக் கூடாது என்று நினைத்திருந்தாளோ.. அவனை இதுபோல் ஒரு சூழ்நிலையில் பார்ப்பாள்... அதுவும் துஷ்யந்தின் சகோதரனாக பார்ப்பாள்.. என்று  கனவிலும் நினைத்ததில்லை இவள்...

கையில் ஏந்தியிருந்த தட்டோடு, பலகாரத்தை அவனுக்கு கொடுப்பதற்காக குனிந்தப்படி அதிர்ச்சியில் நின்றிருக்க...

"தேங்க்ஸ்.." என்றப்படி அவன் பலகாரத்தை எடுத்தப் போது தான் நடப்புக்கு வந்தாள்...

"இவன் பேரு... ரிஷபசெல்வன் ம்மா.. நாங்கல்லாம் செல்வான்னு கூப்பிடுவோம்.." அறிமுகத்தின் அடுத்த படலத்தை விஜி கூற...

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "என்னை ஏதோ செய்து விட்டாய்..." - நெஞ்சுக்குள் நீ மட்டும். எல்லாம் மறந்தேன். எனை என்ன செய்தாய்...

படிக்க தவறாதீர்கள்..

ரிஷபசெல்வன் என்ற அவனது முழு பெயரை முதலில் அவள் கைகளால் எழுதிய போது எவ்வளவு ரசனையோடு எழுதினாள்... அதன்பின் எத்தனை முறை அவ்வாறு எழுதிப் பார்த்து ரசித்திருக்கிறாள்... எல்லாம் அவளின் நினைவுக்கு வந்தது...

மாப்பிள்ளை பேரு துஷ்யந்த்.. அவருக்கு ஒரு தம்பி இருக்காரு... பேரு செல்வா.. என்று இவளின் அன்னை சொன்ன போது, அவன் இந்த ரிஷபசெல்வனாக இருப்பான் என்று நினைக்கவில்லையே... அம்மாக்கிட்ட இன்னும் கொஞ்சம் விசாரித்திருக்கனுமோ..?? என்று மனம் நினைக்க...

ஆமாம் கல்யாணம் பண்ணிக்கப் போற துஷ்யந்த் பத்தியே நீ எதுவும் கேட்டு தெரிஞ்சிக்கல... ஏன் போட்டோவையே நீ சரியாப் பார்க்கல... அம்மா, அப்பா இஷ்டத்துக்கே விட்டுட்ட... இதுல துஷ்யந்தோட தம்பி பத்தியா கேட்ருக்கப் போற.." என்று உள்மனது கேள்விக் கேட்டது...

இதெல்லாம் நடக்கனும்னு இருக்கு... அப்புறம் என்ன பண்ண முடியும்..?? என்று நினைத்தவளாக... தன் அன்னையின் அருகில் நின்றுக் கொண்டாள்.

"மாப்பிள்ளை வருவாருன்னு நினைச்சோம்.." மல்லிகா கேட்டதும்...

"அது... ராஜா டில்லிக்கு போய்ட்டு இப்போ தான் வந்தான்... ரொம்ப டயர்டா இருந்தான்... அதான் கூட வரல..." என்று கோமதியே சமாளித்தார்.

ராஜாவா.. என்று குமாரசாமியும், மல்லிகாவும் முழிக்க... "அண்ணி... ராஜான்னு சொன்னா, அவங்களுக்கு எப்படி புரியும்... துஷ்யந்த்னு சொல்லுங்க.." என்ற விஜி...

"அது... துஷ்யந்தை வீட்ல நாங்க ராஜான்னு தான் கூப்பிடுவோம்.." என்றார்.

"ஆமாம்... அது ஏன்னா... அவங்க தாத்தா ஒரு நாடக பிரியர்... இவன் பொறந்திருந்தப்போ... சகுந்தலை நாடகம் பார்த்துட்டு வந்தவரு... துஷ்யந்த மஹா ராஜான்னு பேரு வச்சாரு... அதை சுருக்கி நாங்க ராஜான்னு கூப்பிட்டோம்...

அப்புறம் தான் துஷ்யந்தோட அப்பா.. மஹா ராஜான்னா அது அவரோட பதவி... அதனால வெறும் துஷ்யந்தன் அப்படின்னு பேரை சுருக்கி ஸ்கூல்ல கொடுத்துட்டாரு... அப்புறம் சின்னவனுக்கும் ரிஷபசெல்வன் ங்கிற பேரை அவர் தான் வச்சாரு... அவனை ராஜான்னு கூப்ட்றதால, இவனையும் செல்வான்னு கூப்பிட ஆரம்பிச்சோம்.." என்று தங்களது மகன்களுக்கு பெயர் வைத்ததை பெருமையாக சொல்லிக் கொண்டார் கோமதி.

ஏனோ நர்மதாவிற்கு அதை ரசிக்க தோன்றவில்லை... பொதுவாக ஒருவர் சொல்ல வரும் விஷயத்தை அலட்சியம் செய்பவள் இல்லை அவள்... தனக்கு தேவையில்லாத ஒன்றென்றாலும், ஆர்வத்தோடு சொல்கிறார்களே என்றுக் கேட்டுக் கொள்வாள்... ஆனால் இதை அப்படி அவளால் எடுத்துக் கொள்ள முடியவில்லை... ரிஷப் என்றோ, இல்லை ரிஷபசெல்வன் என்று முழு பெயரையோ சொல்லியிருந்தால், இவளும் முன்பே இந்த சம்பந்தத்தை வேண்டாம் என்று சொல்லியிருப்பாள்... ஆனால் இனி என்ன செய்வது..?? என்று மனதை சமாதானப்படுத்த முயன்றாள்... ஆனால் முடியவில்லை.

"ஆமாம் மாப்பிள்ளை சாதாரண வேலையா செய்றாரு... பெரிய அளவுல வியாபாரம் பார்க்கிறவருக்கு ஓய்வு கிடைக்கறதே கஷ்டம்... டைம் கிடைக்கிறப்போ ஓய்வெடுத்துக்கனும்.." என்று மல்லிகா, கோமதி சொன்னதற்கு பதில் சொன்னார்.

மாப்பிள்ளையை நேரில் பார்க்காமலேயே பத்திரிக்கை அடிக்கற வரைக்கும் வந்திருக்கோமே... எல்லாம் நல்லப்படியாக அமையுமா..?? என்று குமாராசாமிக்கு கவலையாக இருந்தது... இதில் ஜோசியர் சொன்னதும் ஞாபகத்திற்கு வந்தது... மாப்பிள்ளையை நேரில் பார்க்கவில்லையென்றாலும், அவங்க வீட்ல மத்தவங்க எல்லாம் நல்லவங்களா தெரியுறாங்க... என் பொண்ணோட கல்யாணத்துல எந்த குழப்பமும் வந்துடக் கூடாது கடவுளே என்று அவர் வேண்டிக் கொண்டார்.

அதன்பிறகு பத்திரிக்கை அடிப்பது குறித்து பெரியவர்கள் பேச... நர்மதாவும், செல்வாவும் மௌனமாகவே இருந்தனர்... பின் கோமதியும், விஜியும் கேட்டதற்கு நர்மதா பதில் சொல்வதும், துஷ்யந்த், செல்வாவின் தொழில் சம்பந்தமாக குமாரசாமி கேட்பதற்கு செல்வா பதில் சொல்வதுமாக இருந்தனர்...

பின் வந்த வேலை முடிந்து மூவரும் கிளம்ப ஆயத்தமானார்கள்... "சீக்கிரம் எங்க வீட்டுக்கு வந்துடும்மா..." என்று கோமதி, நர்மதாவின் கன்னத்தை தொட்டு கூறினார்.. பின் பெரியவர் இருவரும், "எல்லோருக்கும் போய்ட்டு வரோம்..." என்று விடை பெற.. செல்வாவோ,

"போய்ட்டு வரேன் அங்கிள்... போய்ட்டு வரேன் ஆன்ட்டி.." என்று பெரியவர் இருவரிடமும் விடைப் பெற்றவன்...

"வரேன்.." என்ற ஒற்றை வார்த்தையை நர்மதாவிடம் கூற.. அவளும் தலையை ஆட்டினாள்.

மூவரும் கிளம்பி வெளியே போக, அவர்களை மல்லிகாவும், குமாரசாமியும் வழியனுப்ப வாசல் வரை சென்றனர்.

"கார் கீயை உள்ளேயே மறந்து வச்சிட்டேன்.. போய் எடுத்துட்டு வந்துட்றேன்.." என்று செல்வா உள்ளே போனான்...

நர்மதா இன்னும் அதே இடத்தில் நின்றிருக்க... உள்ளே நுழைந்தவனை கேள்வியோடு பார்த்தாள்.

"கார் கீ.." என்று அவன் உட்கார்ந்திருந்த சோஃபாவிற்கு முன் போடப்பட்டிருந்த மேசையை காண்பித்து சொல்லவும்... அந்த சாவியை எடுத்து அவன் கையில் கொடுத்தாள்... அப்போது..!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.