(Reading time: 19 - 38 minutes)

"ந்நேரம் ஒரு பணக்காரன பிடிச்சிருப்பன்னு நான் நினைச்சேன்... ஆனா நான் நினைச்சத விட நீ ஸ்லோவா தான் இருக்க... இருந்தும் அந்த பணக்காரன் என்னோட அண்ணான்னு நினைக்கும் போது தான்... " என்று நிறுத்தியவன்...

"எல்லாம் முடிவானதுக்குப் பிறகு என்ன பண்ண முடியும்..??" என்றான்.

பணக்காரனா பிடிச்சிருப்ப என்று அவன் ஆரம்பிக்கும் போதே அவள் அதிர்ச்சியோடு பார்க்க...  அவன் சொல்லி முடிக்கும் நேரம் அவளின் அதிர்ச்சி, கோபமாக மாற..

"இன்னும் எதுவும் முடிஞ்சிடல Mr. ரிஷப்... டைம் இருக்கு... அதுக்குள்ள முடிஞ்சா... உங்க அண்ணனையும், உங்க சொத்தையும் என்கிட்ட இருந்து காப்பாத்தீக்கோங்க..." என்று முடித்தாள்.

அதற்குள் வெளியேயிருந்து கோமதி செல்வாவை அழைக்க... அவளைப் பார்த்து முறைத்துவிட்டு வெளியேறினான். பதிலுக்கு அவளும் அவனை முறைக்க தவறவில்லை.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மதுவின் "மார்பில் ஊறும் உயிரே..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

ந்தவர்களுக்கு செய்திருந்த பலகாரத்தின் மீதியை தாய் தந்தையோடு சேர்ந்து சாப்பிட்டவள்... இதுவே போதும்... நைட் எனக்கு எதுவும் வேண்டாம் என்று சொல்லி, சீக்கிரமே தன் அறைக்கு வந்துவிட்டாள்.

மாலை செல்வா பேசியதே, அவளின் காதுக்குள் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது... அன்றும் இதே போல் தான் பேசினான்... ஆனால் அதைவிட இன்று அவன் பேசியது தான் மனதை வெகுவாக பாதித்திருந்தது...

அன்று அவன் அவ்வாறு பேசியதற்கு ஏதாவது காரணம் இருந்திருக்குமோ... என்று மனதை சமாதானப்படுத்த முயற்சி செய்வாள்... ஆனால் இன்றும் இப்படியே பேசுகிறான் என்றால், என்ன அர்த்தம்..?? என்னைப் பற்றி என்ன தெரியும் அவனுக்கு??

அவன் இப்படி பேசுவதை ஏன் என்னால் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை... ஏன் அது என் மனசை பாதிக்கிறது... எப்போ என் காதலை அவன் அலட்சியப்படுத்தினானோ... அப்பவே அவனை என்னோட மனசிலிருந்து தூக்கி போட முடியவில்லையே ஏன்..?? எத்தனையோ கேள்விகள் மனசுக்குள்ளே இருந்தது அவளுக்கு... ஆனால் அதையும் மீறி அவன் மேல் அதிக கோபமும் இருந்தது.

இப்பவும் அவன் அப்படி நினைப்பதால் என்னாக போகிறது... இந்த திருமணத்தை நடத்த விடாமல் செய்திடுவானா..?? செய்யட்டுமே... அவன் இருக்கும் வீட்டுக்குப் போகாமல் இருப்பதே நல்லது தான் என்று நினைத்தாள்... ஆனாலும் அவன் பேசியதே காதில் ஒலித்துக் கொண்டிருந்தது...

படிக்கிற வயதில் அதில் மட்டுமே கவனத்தை செலுத்தாமல், மனசை அலைபாய விட்டதின் பலன் தான் இது... அந்த ரிஷப் மீது இருக்கும் கோபத்தை விட, இவள் மீதே இவளுக்கு அதிக கோபம் வந்தது.

ர்மதாவின் தந்தை குமாராசாமி ஒரு பள்ளி ஆசிரியர், தாய் மல்லிகா இல்லத்தரசி...  நர்மதா பன்னிரெண்டாம் வகுப்பில் அடியெடுத்து வைத்த சமயத்தில் குமாரசாமிக்கு தலைமையாசிரியராக பதவி உயர்வும், காஞ்சிபுரத்துக்கு பணி மாற்றமும் கிடைத்தது..

அவர்கள் சென்னை புறநகர் பகுதியில் வசித்து வந்தனர்... அப்போது நர்மதாவிற்கு பள்ளியை மாற்ற முடியாது என்ற காரணத்தால், அவர்களை இங்கேயே விட்டுவிட்டு, குமாரசாமி மட்டும் காஞ்சிபுரத்தில் ஒரு அறை எடுத்து தங்கி வந்தார்... விடுமுறை நாட்களில் குடும்பத்தோடு இருப்பார்... அடுத்த வருடம் நர்மதாவின் தம்பி பத்தாம் வகுப்பில் அடியெடுத்து வைப்பதால், அப்போதும் காஞ்சிபுரத்துக்கு செல்ல முடியாது என்பதால் இப்படியே இருந்துவிடலாம் என்று முடிவு செய்தனர்... நர்மதாவும் சென்னையிலேயே கல்லூரியில் சேர்ந்தாள்.

அது ஆண், பெண் இருபாலரும் படிக்கும் கல்லூரி... நர்மதா படித்த பள்ளியும் அதே போல் என்பதால், அவளுக்கு அந்த கல்லூரிக்கு செல்ல எந்த பயமும் இல்லை... அதிலும் நர்மதா எளிதாகவே எல்லோரிடமும் பழக கூடியவள்... அவளுடன் பள்ளியில் படித்த நண்பர்கள் சிலரும் இதே கல்லூரியில் சேர்ந்ததால் அவளுக்கு அந்த கல்லூரியில் படிப்பதற்கு எந்த தயக்கமும் இருக்கவில்லை...

ஆனால் பள்ளியில் இவளை காதலிப்பதாக சொல்லி எத்தனையோ பேர் இவள் பின்னே சுற்றி வந்து தொல்லை கொடுத்தும் மனதை அலைபாய விடாமல் இருந்தவள், கல்லூரியில் சேர்ந்த கொஞ்சநாட்களிலேயே காதலில் விழுந்துவிடுவாள் என்று தெரிந்திருந்தால், கொஞ்சம் கவனமாக இருந்திருப்பாளோ...??

கல்லூரியில் சேர்ந்து பத்து நாட்கள் கடந்திருக்கும், தன் தோழி ஒருத்தி, கல்லூரியை பற்றி சில தகவல்கள் சேகரித்து வந்தவள், அதைப்பற்றியெல்லாம் சொல்லிக் கொண்டிருந்த போது தான், ரிஷப் பற்றி முதன்முதலில் இவள் கேள்விப்பட்டாள்...

முக்கிய விஷயமாக ஸைட் அடிக்க இந்த கல்லூரியில் ஹாண்ட்சம் பாய்ஸ் பற்றி அந்த தோழி சொன்ன போது தான் ரிஷப் பற்றி கூறினாள்...

ரிஷப் மூன்றாமண்டு படிக்கும் மாணவன், முக்கியமாக இவர்கள் பாடப்பிரிவு இல்லை... அழகானவன், பணக்காரன், மாணவ தலைவனின் நண்பன், அவனை தான் மாணவ தலைவனாக நிற்க சொல்லியிருந்தார்களாம், ஆனால் அவன் தான் மறுத்துவிட்டானாம்.. என்று சொல்லிக் கொண்டிருந்தவள், பின் கவலையாக,

ஆனால் அவன் பெரிய படிப்ஸ் ஆம்.. சரி அதனால என்ன, அவனை பார்க்கும் போது நமக்கு தெரிஞ்ச நாலு இங்க்லீஷ அவுத்து விடுவோம் என்றாள்... ஆனா அதுல தான் பிரச்சனையே... அவனோட டிபார்ட்மென்ட் பொண்ணுங்க கூட மட்டும் தான் அவன் பேசுவானாம்... மத்த பொண்ணுங்க கிட்ட பேச மாட்டானாம்... என்றாள் வருத்தத்தோடு... அப்போது நர்மதாவோடு சேர்ந்து மற்ற தோழிகளும் சிரித்து வைத்தனர்.

அதன்பிறகு ஒருமுறை தூரத்தில் இருந்தவனை இவன் தான் ரிஷப் என்று இவளிடம் காட்டினார்கள் தோழிகள்... அவ்வப்போது அதுபோல் தூரத்தில் தான் ரிஷபை இவள் பார்த்திருக்கிறாள்... இப்படியே சில நாட்கள் கடந்தது...

பள்ளியில் படிக்கும்போதே நர்மதாவை ஒருவன் காதலிப்பதாக கூறி தொந்தரவு செய்துக் கொண்டிருந்தவன், இவள் இந்த கல்லூரியில் தான் சேரப் போகிறாள் என்று தெரிந்து, அவனும் இதே கல்லூரியில் சேர்ந்து அடிக்கடி இவளை தன்னை காதலிக்கும்படி தொல்லை செய்துக் கொண்டிருந்தான்...

அன்று தோழிகளுடன் கேன்டீனுக்கு சென்றுவிட்டு திரும்பும் போது, இவள் கையைப் பிடித்தவன், உடனே அவன் காதலை ஏற்றுக் கொள்ளும்படியும், இல்லையென்றால் தற்கொலை செய்துக் கொள்வதாகவும் மிரட்டினான்...

ஆரம்பத்திலிருந்தே அவனை கண்டும் காணாமல் செல்பவள் தான் அவள்... இப்போது இவனிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்று தெரியாமல் இவள் பயப்பட...

திடிரென்று அவனை ஒருவன் பிடித்து இழுத்து, கன்னத்திலே ஒன்று வைத்தான்... யாரென்று இவள் பார்த்தபோது அந்த ரிஷப் நின்றுக் கொண்டிருந்தான்.

"ஏய் அந்த பொண்ணுக்கு பிடிக்கலன்னா ஏன் தொல்லைப் பண்ற... என்னை சாகப் போறியா..?? கை நரம்பை கட் பண்ணிக்கப் போறியா..?? இல்லை மேல இருந்து விழப் போறியா..?? போ என்ன பண்ணனுமோ பண்ணு.." என்றான்..

நர்மதாவை தொந்தரவு செய்தவன் திரு திருவென்று முழிக்க... "இங்கப் பாரு... இதோட இந்த பொண்ணு பக்கம் நீ திரும்பி பார்க்கக் கூடாது... தொந்தரவு பண்ணக் கூடாது... அப்படி ஏதாவது கேள்விப் பட்டேன்... மேனேஜ்மென்ட்க்கு ரிப்போர்ட் பண்ணிடுவேன்.." என்று ரிஷப் மிரட்டினான்...

அவனும் நர்மதாவிடம் ஸாரி கேட்டுவிட்டு சென்றுவிட... ரிஷபை பார்த்து, "தேங்க்ஸ்.." என்றாள் இவள்... அதுதான் அவனிடம் பேசிய முதல் வார்த்தை...

அதன்பிறகு தினம் ஒருமுறை அவனை அருகிலேயே பார்க்கும் சந்தர்ப்பம் அவளுக்கு கிடைக்கும்... கேன்டீனுக்கு போகும்போதோ... லைப்ரரி போகும்போதோ... கல்லூரிக்கு வரும்போதோ, இல்லை போகும்போதோ ஒருமுறையாவது அவனை பார்த்துவிடுவாள்... இது தானாக நடப்பதா..?? இல்லை இவள் பார்வையில் படும்படி அவனே வருகிறானா..?? என்று நினைப்பாள்... "சேச்சே இது என் கற்பனை.." என்று ஒதுக்கிவிடுவாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.