(Reading time: 16 - 32 minutes)

அமேலியா - 22 - சிவாஜிதாசன்

Ameliya

முன்பை விட மழை சற்று அதிகமாகவே பெய்து கொண்டிருந்தது. மழையின் ஓசையை ஜெஸிகாவின் செவிகள் மெல்ல உணரத் தொடங்கின. கண்களைத் திறக்க முயற்சித்தாள், முடியவில்லை. தான் மயக்கமடைந்த இறுதி நிமிடங்களை நினைத்துப் பார்த்தாள்.

அது ஒன்றும் சாதாரணமாக நடந்த நிகழ்வு என்று கூற முடியாது. அவளுக்கு நன்றாகவே தெரியும். எப்படியாவது வீட்டிற்கு சென்று விடலாம் என்றுதான் அவள் எண்ணினாள். தன்னால் நிச்சயம் முடியும்; தனக்கொன்றும் வயதாகி விடவில்லையே என்ற அவளின் மனவுறுதியையும் மீறி மயக்கமடைந்து கீழே விழுந்ததை அவளால் தடுக்க முடியவில்லை..

உடலில் இருந்த எல்லா சக்தியும் செயலிழந்து விட்டதாய் அவள் உணர்ந்தாள். கண்கள் ஒளி இழந்து மூடிக்கொண்டதையும் கடைசியாக மழைத்துளிகள் முகத்தில் விழுந்தபோது சுரணையற்றுக் கிடந்ததையும் நினைத்தாள் ஜெஸிகா.

அந்த மயக்கம் மரணத்தின் ஒத்திகை போல் அவளுக்கு தோன்றியது. சாதாரண மயக்கத்தையே நம்மால் தடுக்க முடியவில்லையே, மரணத்தை எவ்வாறு தடுப்பது  என வேதாந்தமாக எண்ணிக்கொண்டிருந்தவள், மழையின் சத்தம் கேட்கிறது, ஆனால் நாம் நனையாமல் இருக்கிறோமே? ஒருவேளை நாம் கனவுலகில் இருக்கிறோமா என எண்ணியவாறே மெல்ல கண்களைத் திறக்க முயற்சித்தாள்.

அவள் முகத்தில் சூடான காற்று வீசியதைப் பொறுக்கமுடியாமல் ஆ வென கத்தினாள்.

"என்ன ஆச்சு? எரிச்சலா இருக்கா?" என்று கேட்டது ஒரு குரல்.

ஜெசிகா கண்களைத் திறந்து பார்த்தாள். அவள் அருகே ஜான் அமர்ந்திருந்தான்.

"என்ன செஞ்சிட்டு இருக்க நீ?"

"நீ குளிருல நடுங்கிட்டு இருந்த, அதான் ஹேர் ட்ரையர் வச்சி உன்ன காயவச்சிட்டு இருந்தேன்"

"நான் எப்படி இங்கே வந்தேன்?"

"நடந்து வந்த"

"அது எப்படி முடியும்? நான் தான் மயக்கத்துல இருந்தேனே"

"அப்போ நான் தான் தூக்கிட்டு வந்திருப்பேன்" 

சட்டென சுதாரித்த ஜெசிகா, தன் உடலில் போர்த்தியிருந்த போர்வையை விலக்கிப் பார்த்தாள். தன் ஆடைகளைப் பரிசோதித்தாள்.

"திடீர்னு ஏன் மீன் போல துள்ளுற? என்ன ஆச்சு?"

ஜானை முறைத்தவாறே சந்தேகக்கண்ணோடு பார்த்தாள் ஜெஸிகா. 

அவளுடைய பார்வையின் அர்த்தத்தைப் புரிந்துகொண்ட ஜான், "எனக்கு வேணும், நல்லா வேணும். உன்மேல பரிதாபப்பட்டு காப்பாத்தினேன்ல. எனக்கு இன்னும் நிறைய வேணும்"

"நடிக்காத. நான் மயக்கமடைஞ்சி மண் தரையில கீழே விழுந்தேன். என் டிரஸ் முழுக்க சேறு ஆகியிருக்கும். ஆனா அப்படி ஏதும் தெரியலையே"

ஜான் சிரித்தான். "நீ சொல்லுறது உண்மை தான் ஜெஸ்ஸி. உன் துணி முழுக்க மண் சேறு இருந்தது. அதை வேக்கம் கிளீனர் வச்சு எடுத்துட்டேன்"

"என்னது? வேக்கம் கிளினீரா?" அதிர்ச்சியோடு கேட்டாள் ஜெஸிகா.

"நம்பலையா, இரு வரேன்" என அவ்வறையை விட்டு மற்றொரு அறைக்கு சென்ற ஜான் வேக்கம் கிளீனரோடு வந்தான்.

ஜெசிகா புரியாமல் பார்த்தாள். வேக்கம் கிளீனரை ஆன் செய்த ஜான் ஜெஸிகாவிடம் நீட்டினான். உள்ளிழுக்கும் காற்றால் அவள் ஆடை மெல்ல பறந்தது. பொறுக்கமுடியாமல் ஜெஸிகா "போதும். முதல்ல ஆப் பண்ணு" என கத்தினாள். அப்பொழுது எதிர்பாராமல் வேக்கம் கிளீனரின் குழாய் அவள் வாயில் மாட்டிக்கொண்டு அவளது மூச்சுக்காற்றை வேகமாக இழுத்து அவள் முகத்தை விகாரமாகக் காட்டியது.

உடனே சுதாரித்த ஜான் சட்டென வேக்கம் கிளீனரை ஆப் செய்து அவளைக் காப்பாற்றினான். ஜெஸிகாவிற்கு நடந்தது என்னவென்று புரிய சில நிமிடங்கள் பிடித்தன. அவளால் இருமலைக் கட்டுப்படுத்தமுடியவில்லை. தொடர்ந்து இருமியபடியே இருந்தாள்.

"முட்டாள் முட்டாள் அறிவே இல்லாதவனே இந்நேரம் என்னை நீ கொன்னிருப்ப" டென்ஷன் தாங்கமுடியாமல் ஜெஸிகா கொதித்தாள்.

"ஐ ஆம் சாரி ஜெஸ்ஸி. செஞ்சு காட்டலாம்னு நினைச்சேன். அது விபரீதமா போயிடுச்சு"

"கடவுளே!" என்று சலித்துக்கொண்ட ஜெஸிகா மேற்கொண்டு அங்கிருப்பதை அசௌகரியமாக உணர்ந்தாள்.

"எனக்கொரு உதவி செய்ய முடியுமா ஜான்?"

"நீ இங்கே இருந்து கிளம்புறேன்னா, என்ன உதவி வேணும்னாலும் செய்யுறேன்"

"என்னை பஸ் ஸ்டாப்ல கொண்டு போய் விடமுடியுமா? ப்ளீஸ்"

"கண்டிப்பா. அதுக்கு முன்னாடி ஏதாச்சும் சாப்பிடுறியா?"

"எதுவும் வேணாம். எனக்கு இங்கே இருந்து தப்பிச்சா போதும்"

"சரி" என்ற ஜான் வீட்டை விட்டு வெளியேறி கார் ஷெட்டிற்கு சென்றான். சிறிது நேரத்தில் மெதுவாக நடந்தபடி ஜெஸிகா வந்தாள். கார் ஷெட்டிற்கு செல்ல எத்தனித்தாள். காய்ச்சல் இன்னும் இருந்ததால் மீண்டும் மழையில் நனைய பிரியப்படவில்லை.

ஜான் காரை ஸ்டார்ட் செய்தான். கார் ஸ்டார்ட் ஆகவில்லை. மீண்டும் முயற்சி செய்தான். பலனில்லை. காரில் இருந்தபடியே ஜெஸிகாவை நோக்கினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.