(Reading time: 16 - 32 minutes)

"நீ இங்கயே நில்லு. வெளியே வராதே. சரியா?" என சைகை மொழியில் கூறி விட்டு வெளியேற எத்தனித்த நேரம், அவள் கால்கள் செல்லாமல் நின்றன.

அந்த அறையின் தரையில் மூன்று புகைப்படங்கள் இருந்தன. அவற்றில் வசந்த், மேகலா, நிலா இருந்தனர்.

'எதற்காக இவள் எங்களின் புகைப்படங்களை பார்த்துக்கொண்டிருக்கிறாள்?'  என்று மேகலாவுக்கு குழப்பம் மேலோங்கியது. அதைப் பற்றி விசாரிக்கலாம் என்று எண்ணியவள், முதலில் தந்தைக்கு செய்ய வேண்டிய பணிவிடைகளைச் செய்துவிட்டு பிறகு பார்த்துக்கொள்ளலாம் என முடிவெடுத்தாள்.

வசந்தின் கார் வீட்டு வாசலில் வந்து நின்றதைக் கண்டு மேகலா ஓடிச் சென்று வெளிக்கதவைத் திறந்தாள். கார் உள்ளே வந்து நின்றது. நாராயணனும் வசந்தும் கீழே இறங்கினர்.

நாராயணனைத் தாங்கிப் பிடித்தபடி அழைத்து வந்தாள் மேகலா. மருத்துவமனையில் நீராகாரத்தையே உண்ட நாராயணன் மிகவும் பலகீனமாக இருந்தார்.

"தாத்தா நீங்க வந்துட்டீங்களா" என நிலா ஓடி வந்தாள்.

"போடி என் கூட பேசாத"

"ஏன் தாத்தா?"

"நான் ஹாஸ்பிடல்ல இருந்தப்போ என்னை வந்து பாத்தியா?"

"நான் பாக்கணும்னு தான் தாத்தா நெனச்சேன். எக்ஸாம் இருந்தது. அதனால் பார்க்க வர முடியலை"

"தாத்தாவை விட எக்ஸாம் தான் உனக்கு முக்கியமா?"

"அடுத்த தடவை உனக்கு ஹார்ட் அட்டாக் வரும்ல, அப்போ லீவு போட்டுட்டு வந்து உன்னை பாக்குறேன் தாத்தா"

நிலாவின் முதுகில் ஓங்கி ஓர் அறை விட்டாள் மேகலா. நிலா அலறியபடி அங்கிருந்து ஓடினாள்.

"குழந்தையை ஏன் அடிக்கிற?" என்றார் நாராயணன்.

"என்ன பேச்சு பேசுறான்னு நீங்களே  பாத்தீங்கதான?"

"குழந்தைங்கன்னா அப்படி தான் இருப்பாங்க" என்று கூறியபடி பாத்ரூமிற்கு சென்று குளித்து முடித்து வெளியே வந்து பூஜை அறைக்கு சென்று சிறிது நேரம் பிரார்த்தனை செய்தார் நாராயணன்.

பின்பு, தன் அறைக்குச் சென்றார். அங்கு சென்றதும் மனைவியின் நினைவு வரவே ஹாலுக்கு வந்தார்.

"அந்த இஸ்லாமிய பெண் எங்கே? வீட்டை விட்டு வெளியே அனுப்பிட்டீங்களா?" என்று ஆவலோடு கேட்டார்.

மேகலாவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. சங்கடத்தில் நெளிந்தாள். அப்பொழுது மாடிப்படியில் நின்றவாறு ஹாலில் நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அமேலியாவை நோக்கினார் நாராயணன். அவர் உள்ளம் கோபத்தில் கொப்பளித்தது. மேகலாவை எரித்து விடுவதைப் போல் பார்த்தார்.

அமேலியா மெல்ல கீழிறங்கி வந்தாள். அவள் கண்கள் நாராயணனை பரிதாபமாக நோக்கின. இதழில் மெல்லிய புன்னகை இழைந்தோடியது.

"உங்கள் உடல் நிலை இப்போ பரவாயில்லையா?" என அரபிக் மொழியில் கேட்டாள் அமேலியா.

"என்ன சொல்லுறா இவ?"

"தெரியலப்பா" என்றாள் மேகலா.

அமேலியா புன்னகைத்தாள். நாராயணனோ அமேலியாவின் மேல் வெறுப்பை உமிழ்ந்தார்.

திடீரென நாராயணனின் கையைப் பிடித்தாள் அமேலியா. அதைச் சற்றும் எதிர்பாராத நாராயணன் அவளின் கையை உதறிவிட பார்த்தார். ஆனால், அமேலியாவின் பிடி தளரவில்லை. வலுக்கட்டாயமாக அதே நேரம் அவரின் உடல்நிலை அறிந்து நிதானமாக அவரை மாடிக்கு அழைத்துச் சென்றாள்.

வசந்தும் மேகலாவும் அமேலியாவின் அந்த திடீர் நடவடிக்கையின் காரணம் புரியாமல் பதற்றத்தோடு பின்னால் சென்றார்கள். மாடியில் இருக்கும் பெரிய அறைக்கு நாராயணனை அழைத்து சென்ற அமேலியா அறையின் விளக்குகளுக்கு உயிரூட்டினாள். 

அமேலியாவிடமிருந்து தன் கையை கோபமாக வெடுக்கென உதறிய நாராயணனன் அமேலியாவை முறைத்தார். அமேலியாவோ எதையும் கண்டுகொள்ளாமல் தன்னுடைய நடவடிக்கையில் முனைப்பாக இருந்தாள்.  

அறையின் நடுவில் இருந்த ஓவியம் வரையும் பலகையின் அருகே சென்றவள், தன்னையே வியப்போடு பார்த்துக்கொண்டிருந்த மூவரையும் சில நொடிகள் நோக்கினாள். பின்னர், மெதுவாக பலகையை மூடியிருந்த திரையை விலக்கினாள். 

மூவரின் கண்களும் இமைக்க மறந்து பிரமிப்பின் உச்சத்தில் ஆழ்ந்தார்கள்.

நாராயணனின் விழிகளில் கண்ணீர்த் துளிகள் படையெடுத்தன. அவரால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவரின் கவனம் முழுக்க ஓவியத்திலேயே இருந்தது. தான் காண்பது கனவா நிஜமா என்று தெரிந்துகொள்ள அவர் ஆசைப்படவில்லை.  

ஓவியத்தின் வடிவில் புன்முறுவலோடு நாராயணனையே பார்த்துக்கொண்டிருந்தார் அவர் மனைவி.

தொடரும்...

Episode # 21

Episode # 23

{kunena_discuss:983}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.