(Reading time: 16 - 32 minutes)

"டாக்டர் சொன்னதை கேட்ட தானே வசந்த். இனிமேலாவது அப்பாவுக்கு பிடிச்ச போல நடந்துக்க"

"இனிமே அப்பா தூங்குன அப்புறம் தான் நான் வீட்டுக்கு வருவேன்"

"ஏன்?"

"டாக்டர் தான் சொன்னாரே, அப்பாவுக்கு பிடிக்காத எதையும் காட்ட கூடாதுன்னு"

மேகலா சிலையென நின்றாள்.

"என்ன ஆச்சு அக்கா?"

"அப்பாவுக்கு பிடிக்காத இன்னொன்னு நம்ம வீட்டுல இருக்கே"

"என்னது?"

"அமேலியா"

வசந்த் ஆமோதிப்பதாய் தலையசைத்தான்.

"இப்போ என்ன பண்ண போறோம்?"

"அமேலியா அப்பா கண்ணுல படக்கூடாது. நான் இப்போவே வீட்டுக்கு போயிட்டு நிலைமையை எடுத்து சொல்லுறேன்" என டாக்ஸியில் கிளம்பினாள் மேகலா.

நடந்தவற்றை எண்ணியபடி காரில் நாராயணனை அழைத்துக்கொண்டு வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தான் வசந்த்.

நாராயணன் சாலையை வெறித்தபடி வெறுமையோடு இருந்தார். மீண்டும் வீட்டிற்கு செல்லப்போகிறோம் என்று ஆவல் மிகுந்த நிம்மதி அடைந்தாலும், மனைவியின் புகைப்படம் நினைவுக்கு வந்து அவர் இதயத்தில் குண்டூசியால் குத்தியதைப் போல் வலி உண்டாயிற்று. நெஞ்சை மெதுவாகப் பற்றினார்.

காரை ஓட்டியபடி அவ்வப்போது தந்தையையே பார்த்துக்கொண்டிருந்த வசந்த் வண்டியை நிறுத்தினான்.

"என்ன ஆச்சு அப்பா?" என்று பதற்றத்தோடு கேட்டான்.

"ஒண்ணும் இல்லை, சீக்கிரம் வீட்டிற்கு போ"

வசந்த் காரை கிளப்பினான்.

ரைமணி நேர பயணத்தின் முடிவில் தன் வீட்டை அடைந்த மேகலா, ஓட்டமும் நடையுமாய் அவசரமாக வீட்டின் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தாள்.

ஹாலில் பந்து விளையாடிக்கொண்டிருந்தாள் நிலா.

"அம்மா, தாத்தா எங்கே?"

"நிலா இனி நீ வீட்டுக்குள்ளே பந்து எல்லாம் விளையாட கூடாது

"எதுக்குமா?"

"தாத்தாவுக்கு தொந்தரவா இருக்கும். இனி நீ தாத்தா கூட வாயாட கூடாது"  என்றபடி தந்தையின் அறைக்குச் சென்று படுக்கையை தயார் செய்தாள். அவர் வாசிக்கும் புத்தகங்களை படுக்கையின் அருகே இருக்கும் மேஜையில் எடுத்து வைத்தாள்.

மருத்துவமனையில் இருந்து வந்ததும் முதலில் குளிக்க வேண்டும் என்று நாராயணன் சொன்னது மேகலாவுக்கு நினைவு வந்தது.

பாத்ரூமிற்கு சென்று வாட்டர் ஹீட்டரை போட்டுவிட்டு வேறு என்ன செய்யவேண்டும் என்று நினைவுபடுத்தினாள். பூஜை அறையை சுத்தம் செய்துவிட்டு நாராயணன் சாப்பிடும் உணவை தயார் செய்யத் தொடங்கினாள்.

நிலா சோகமாக கன்னத்தில் கைவைத்தபடி அமர்ந்திருந்தாள். வீட்டினில் இனி விளையாடக்கூடாது என்று தன் அம்மா சொன்னது அவளுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

"நிலா" வென மேகலா அழைத்தாள்.

நிலா குரல் கொடுக்கவில்லை.

"நிலா"

"என்னமா?" கோபத்தோடு கேட்டாள் நிலா.

"அக்கா எங்கே?"

"தெரியாது"

மேகலா சமையலறையில் இருந்து வெளியேறி மாடிக்குச் சென்று வசந்த் அறையைக் கடந்து மாடியில் இருக்கும் பிரதான அறைக்குள் நுழைந்தாள்.

அறையின் மூலையில் சன்னல் கண்ணாடி வழியாக இயற்கையை ரசித்துக்கொண்டிருந்தாள் அமேலியா.

"அமேலியா"

குரல் வந்த திசையை நோக்கிய அமேலியா அங்கு மேகலா இருப்பதைக் கண்டு புன்னகைத்தாள்.

"சாப்பிட்டியா?" சைகை மொழியில் கேட்டாள் மேகலா.

சாப்பிட்டேன் என தலையசைத்தாள் அமேலியா.

"உங்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும். அப்பா மருத்துவமனையில இருந்து வீட்டிற்கு வந்துட்டு இருக்காரு. அவர் கண்ணுல நீ தென்பட கூடாது"

அமேலியா புரியாமல் விழித்தாள். அவளுக்கு எப்படி புரிய வைப்பது என்று மேகலாவிற்கும் குழப்பம் உண்டானது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.