(Reading time: 16 - 32 minutes)

"சீக்கிரம் வா" என ஜெஸிகா கையசைத்தாள்.

"கொஞ்சம் பொறு" என சமிக்ஞை செய்த ஜான், காரை ஸ்டார்ட் செய்ய பெரும் முயற்சி செய்தான். அத்தனை முயற்சியும் தோல்வியில் முடிந்தது. மழை விடாமல் பெய்துகொண்டிருந்தது. காரை விட்டு கீழே இறங்கிய ஜான் கார் இன்ஜினில் என்ன பிரச்சனை என்று ஆராய்ந்தான். 

ஜானின் செயலைக் கண்டு வெறுப்படைந்த ஜெஸிகா, "நான் என் வாழ்க்கைல செஞ்ச பெரிய தப்பு இந்த வீட்டுக்கு வந்தது தான். எல்லாம் அந்த டைரக்டர் சொட்டைத்தலையனை சொல்லணும்" என்று முணுமுணுத்தாள்.

"ஜான்! கார் ரெடி ஆயிடுச்சா இல்லையா?"

"முயற்சி பண்ணிட்டு இருக்கேன்" மழையின் இரைச்சலில் அவன் கூறியது மெல்லிதாய் கேட்டது.

நீண்ட பெருமூச்சை வெளியேற்றிய ஜெஸிகா குளிரில் சில்லிட்ட தன் உடலை போர்வையால் இறுகப் பற்றிக்கொண்டாள். பிறகு, அது ஜானின் போர்வை என உணர்ந்த ஜெஸிகா போர்வையை விலக்கினாள். அவள் உடல் நடுங்கியது. இருந்தும் அவள் போர்வையை போர்த்திக்கொள்ள விரும்பவில்லை.

மழையை ரசிப்பது அவளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று தான் என்றாலும் இன்று ஏனோ அதை ரசிக்கும் மனநிலையில் இல்லை. காரணம் ஜானாக இருக்கலாம் அல்லது தான் விரும்பாத சூழலில் சிக்கிக்கொண்டு விட்டோமே என்ற எண்ணமாக இருக்கலாம். 'சீக்கிரம் வீட்டிற்கு செல்ல வேண்டும்' அவள் எதிர் பார்க்கும் நிம்மதி அது தான்.

காரின் முன்னால் தலையை விட்டு ஜான் வித்தை காட்டிக்கொண்டிருந்தது அவளது கோபத்தை அதிகரிக்கச் செய்தது. "ஜான் என்ன பண்ணிட்டு இருக்க நீ?"

"இவளை அங்கயே விட்டுருக்கனும். கூட்டிட்டு வந்த பாவத்துக்கு என் உயிரை வாங்குறா" என தன்னையே சபித்துக்கொண்டான் ஜான்.

ஜெஸிகா மழையில் நனைந்தபடி கார் ஷெட்டை நோக்கி ஓடினாள். "ஜான் எனக்கு நேரமாகுது"

"என்னுடைய கார் ரிப்பேர் ஆகியிருக்கு அதை முதல்ல புரிஞ்சிக்க"

"நீ காரை ரிப்பேர் பண்ற மாதிரி நடிக்கிறியோனு தோணுது"

"இந்த பொண்ணுங்களுக்கு இருக்கிற சந்தேக புத்தி இருக்கே..." என எதையோ சொல்ல வந்தவன் வாக்கியத்தை முடிக்காமல் ஜெஸிகாவை பார்த்தான. "வேணும்னா நீயே ஸ்டார்ட் செஞ்சு பார். ஸ்டார்ட் ஆயிடுச்சுனா நான் தலையை வெட்டிக்கிட்டு முண்டமா திரியுறேன்"

ஜானை ஒருமுறை முறைத்துவிட்டு காரில் ஏறி இஞ்சினை ஆன் செய்தாள் ஜெசிகா. கார் உடனே ஸ்டார்ட் ஆனது. ஜான் அதிர்ச்சியோடு திருதிருவென விழித்தான்.

"இவ்வளவு நேரம் நடிச்சிட்டு இருந்திருக்கான் ராஸ்கல்" என ஜானைப் பார்த்து கோபத்தோடு முணுமுணுத்தாள் ஜெஸிகா. "முண்டம் வண்டியில ஏறு" என்றாள்.

கோபத்தில் கண்கள் சிவந்த ஜான் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அடக்கிக்கொண்டான்.

"ஜெஸிகா இது என்னுடைய கார். நான் தான் ஓட்டணும். அது மட்டும் இல்லாம உன் மோசமான டிரைவிங் பத்தி எனக்கு தெரியும். கார் ஓட்ட கத்துக் கொடுத்தவரையே கொல்லப் பாத்தவ நீ"

ஜானை முறைத்தபடி ஜெஸிகா நகர்ந்தாள்.

மழையில் நனைந்தபடி மிதமான வேகத்தில் கார் சென்றது. ஜெஸிகா தன் கைகளை பரபரவென தேய்த்து கன்னத்தைச் சூடேற்றினாள்.

"கார் ஓட்டுவது மிக சுலபம். ஆரம்பத்தில் சற்று பயமாக இருந்தாலும், கார் ஓட்டப் பழகிவிட்டால் உங்களால் காரை விட்டு பிரியமுடியாது. உங்களது நெருங்கிய நண்பராகி விடும்" டிரைவிங் கற்றுக் கொடுத்தவர் கூறிய வார்த்தைகள் அவை.

அவர் சொன்னபடி ஜெஸிகாவிற்கு எதுவும் நடக்கவில்லை. ஜெஸிகாவிற்கு பின்னால் வந்தவர்கள் எல்லாம் பயிற்சி முடிந்து சென்று விட ஜெஸிகாவோ இன்னும் ஆரம்ப நிலையிலேயே இருந்தாள். எவ்வளவோ பயிற்சி பெற்றும் பணம் தான் விரயமானதே தவிர எந்த அதிசயமும் நிகழவில்லை..

ஒரு முறை .ஜெஸிகா பயிற்சி செய்துகொண்டிருந்தபோது, காரை வேகமாக இயக்கினாள். அவளின் வேகத்தைக் கட்டுப்படுத்த தன்னுடைய கட்டுப்பாட்டில் இருந்த பிரேக்கை அழுத்தினார் கற்றுக் கொடுத்தவர். துரதிர்ஷ்டவசமாக அது செயல்படாமல் போக கார் நிலை தடுமாறி வழியில் இருந்த மரத்தில் மோதியது.. 

ஜெஸிகாவிற்கு வலது காய் முறிவும் டிரைவிங் கற்றுக் கொடுத்தவருக்கு பலமான அடியும் கால் முறிவும் ஏற்பட்டது. அந்த சம்பவத்திற்கு பின் ஜெஸிகா நண்பர்களின் கேலிக்குண்டானாள்.

திடீரென ஜானின் காரின் வேகம் மெதுவடைந்து சிறிது தூரம் சென்று நின்றது. பழைய நினைவுகளை அசைபோட்டுக்கொண்டிருந்த ஜெஸிகா திடுக்கிட்டு ஜானைப் பார்த்தாள்.

"எனக்கொண்ணும் தெரியாது" என ஜான் கைகளைத்  தூக்கினான்.

"விளையாடாத ஜான். நான் வீட்டுக்கு போயே ஆகணும்"

"நிஜமா நான் ஒண்ணும் பண்ணல" என ஜான் பரிதாபமாக கூறினான்.

"நீ ஒதுங்கு. நான் பாக்குறேன்" என்றாள் ஜெஸிகா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.