(Reading time: 12 - 24 minutes)

16. தொடர்கதை - சக்ர வியூகம் - சகி

Chakra Vyoogam

"மாயா!மாயா என்னை கண் விழித்து பாரு மாயா!"-அணிந்திருந்த சட்டை முழுதும் மாயாவின் செங்குருதி பரவி இருக்க,மயங்கிய நிலையில் இருந்தவளை அவசர சிகிச்சை பிரிவுக்கு செவிலியர்கள் உதவியுடன் அழைத்துச் சென்று கொண்டிருந்தான் ருத்ரா.

"மாயா!"-அவனது கூக்குரல் அவள் செவிகளில் விழவில்லை.உயிரே ஒடுங்கியது அவனுக்கு!!உணர்வுகளை தூண்டி உயிரில் இசை மீட்டியவள்,உயிரற்ற உடலாய் சரிந்திருப்பது அவனை செயல்பட இயலாமல் தடுத்தது.

"சார் இங்கேயே இருங்க!"-அவனை வெளியே நிற்க வைத்து அவளை மட்டும் உள்ளே அழைத்து சென்றனர் மருத்துவர்கள்!!அவன் கண்கள் கரைந்துருக,உடல் நடுங்கிற்று.கண்ணாடி வழி உள்ளே நடப்பதை பார்த்தான் ருத்ரா.ஏதோ இயந்திரங்களை அவள் உடலோடு சிறு கம்பியால் இணைத்தனர்.செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது.நடப்பவற்றை எல்லாம் கிலியோடு பார்த்துக் கொண்டிருந்தான் ருத்ரா.மனதில் என்று உணரப்படாத ஓர் உணர்வு,பயம் என்ற உணர்வு வியாபித்தது.

"பிரதாப்!"-பதறியப்படி ஓடி வந்தனர் காயத்ரி,அர்ஜூன் மற்றும் மித்ரா.

"டேய்!ம...மாயா!"

"என்னடா ஆச்சு?எப்படிடா நடந்தது?"

"மாயாக்கூட போன்ல பேசிட்டு இருந்தேன்டா!திடீர்னு அவ அலறல் சத்தம் கேட்டது!அவ மொபலை டிராக் பண்ணி போய் பார்த்தேன்...அவ..."-பேச முடியாமல் திணறினான் அவன்.

"கடவுளே!"-நெஞ்சில் கை வைத்து அப்படியே அமர்ந்துவிட்டார் காயத்ரி.

"எல்லாத்துக்கும் நான் தான் காரணம்!நான் அவக்கூட பேசி இருக்க கூடாது!அவ டிராவல்ல இருப்பான்னு தெரியாது!இல்லைன்னா கால் பண்ணிருக்கவே மாட்டேன்!"

"பயப்படாதே!மாயாவுக்கு எதுவும் ஆகாது!அவ வருவா!"-நண்பனை தேற்ற முயன்றான் அர்ஜூன்.

"அவளுக்கு எதுவும் ஆக கூடாது!"-காதலின் ராஜ்ஜியத்தில் அவன் அடிமையாய் மாறி இருக்க,அவனை ஆட்சி புரிபவள் அவனுக்கு மிகுந்த வேதனைகளை ஈந்துக் கொண்டிருந்தாள்.

அவசர சிகிச்சை அறையிலிருந்து மருத்தவர் வெளி வர,அவரை இடைமறித்தான் ருத்ரா.

"டாக்டர்...அவளுக்கு!"

"தலையில பலமா காயம் பட்டிருக்கு சார்!பிளட் ரொம்ப லாஸ் ஆகிருக்கு!பிழைக்கிறது கஷ்டம் சார்!அப்படியே பிழைத்தாலும் பழைய விஷயங்கள் எல்லாம் ஞாபகம் வைத்திருப்பாங்களான்னு தெரியலை!எதையும் 4 மணி நேரம் கழித்து தான் செல்லணும்!"

"மாயா...!"-தாயின் மனம் கதறி அழுதது.

இடிந்துப் போய் நின்றுவிட்டான் ருத்ரா.

காலமும் கடந்திருக்க..நான்கு மணி நேர அவகாசம் 12 மணி நேரமாய் உருமாறியது.

சூழ்ச்சியோ அல்லது இரக்கமோ அங்கு அந்த இரவில் மாயாவை காண ரகுராம் வந்திருந்தார்.அவரைக் கண்ட மாத்திரத்தில் ஏனோ ருத்ராவின் அங்கம் முழுதும் ஜூவாலைகளால் பற்றி எரிந்தது.

"அழாதீங்கம்மா..!அக்காக்கு தெய்வ நம்பிக்கை ரொம்ப அதிகம் தானே!அவங்க பூஜிக்கிற இறைவன் எந்தச் சூழ்நிலையிலும் அக்காவை கைவிட மாட்டார்!"-ஆறுதலாய் வெளிவந்த மித்ராவின் வார்த்தைகள் ராணாவின் செவிகளில் விழுந்தன.

சில நொடிகள் அவன் மனதில் பல்வேறு சிந்தனைகள் வலுக்க,யாரிடமும் கூறாமல் அங்கிருந்து கிளம்பினான் அவன்.அதிவேக பயணத்தில் வெறும் 15 நிமிடங்களில் தனது இல்லத்தை அடைந்தான்.

"ருத்ரா!அந்தப் பொண்ணு என்னாச்சுப்பா?"-அவனதே பாட்டியின் சொற்கள் அவன் செவிகளில் விழவில்லை.நேராக பூஜை அறைக்குள் சென்றவன்,எதிரில் செதுக்கப்பட்ட சிவ லிங்கத்தை சில நொடிகள் உற்று பார்த்தான்.

"இ..இதுவரை நான் உன்ன நம்பினது கூட கிடையாது!ஆனா,இப்போ உன்னை தவிர வேற யாரையும் நம்பும் நிலையில நான் இல்லை.உன்னை நிறைய பழித்திருக்கேன்!கேலி செய்திருக்கிறேன்.அதே ருத்ரா இன்னிக்கு உன்கிட்ட ஒரு வேண்டுதல் வைக்க வந்திருக்கேன்.மித்ரா நீ உன்கிட்ட எதை வேண்டுனாலும் கொடுப்பன்னு சொன்னா!இன்னிக்கு நான் என்னுடைய மாயாவை கேட்டு வந்திருக்கேன்.அவளுக்கு எதுவும் ஆக கூடாது!அதே மாதிரி அவளுக்கு பழைய விஷயம் எதுவும் மறக்க கூடாது!மகேந்திரன் சாரோட விருப்பம் நிறைவேறணும்.அதுக்கு ரகுராம் மாயா வாழ்க்கையில இருந்து வெளியே போகணும்.அதுக்கு மாயா தன் நினைவுகளை இழக்காம இருக்கணும்.என் மாயாவை என்கிட்ட இருந்து பறிக்கிற உரிமை யாருக்கும் இல்லை.அவ வணங்குற ஒரே காரணத்துக்காக அதை நீ எடுக்க முயற்சி பண்ணாதே! என் மாயா எனக்கு வேணும்!நான் அவக்கூட வாழணும்.அவ வாழ்க்கையில திகட்டுற அளவு சந்தோஷத்தை கொடுக்க ஆசைப்படுறேன்.அவளை என்கிட்ட இருந்து பிரித்துடாதே!மறுபடியும் ஒரு நரகத்தை என்னால அனுபவிக்க முடியாது.என் மாயா எனக்கு வேணும்!"-அவன் கண்கள் மௌனமாய் கசிந்தன.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.