(Reading time: 29 - 57 minutes)

“என்னட பதுங்கிற, இந்த மாதிரி, எத்தனை கேஸ் பார்த்திருக்கோம், இவளை கடத்திட்டு வந்திருக்க, மயக்க மருந்து ஏதாச்சும் கொடுத்திருக்கலாம், நாளைக்கு காலைல அவங்க வீட்டில இருந்து பொண்ண காணும்னு வந்து நிப்பாங்க, எங்களுக்கு தான் தலைவலி, நீ வந்து இன்ஸ்பெக்ட்டர பார்த்து உன்னோட கதைய அங்க சொல்லு, நீ கூட்டிட்டு வர்றீயா இல்ல நாங்க இழுத்துட்டு போகட்டுமா?” – காவலரின் குரல் உயர்ந்தது. அதன் பின் இளமாறனின் வார்த்தைகள் யாவும் அவர்களின் காதில் விழவேயில்லை. சிறிது விவாதத்திற்கு பிறகு, கீர்த்தி இளமாறனின் கைகளைப் பிடித்து எழுந்தாள், “நாம போலாங்க, நாம ஏன் பயப்படனும்..” என்றாள்.

இருவரும் நடந்து வண்டியில் ஏற, அரைமணி நேரத்தில் காவல் நிலையத்தை அடைந்தனர், அங்கே இருந்த பெஞ்சில் இளமாறனை அமரவைத்து விட்டு எதிரே இருந்த சிறிய அறையில் கீர்த்தனாவை அமர வைத்தனர், அங்கே எற்கனவே சில பெண்கள் அமர்ந்திருந்தனர். அவர்களுடைய உடையும் பாவனையும் கீர்த்தனாவை அச்சுறுத்த, தயங்கி தயங்கி அமர்ந்திருந்தாள் அவள்.  தன் வீட்டிற்கு அழைத்தால் அடுத்த கணம் ரிஷி வந்துவிடுவான் தான், ஆனால் நடப்பது யாவும் அப்பாவிற்கு தெரிய வரும், ஏற்கனவே ரிஷியின் காதலில் லேசாக மனம் கசந்திருப்பவர், காவ்யாவின் காரை விட செல்லும் போது இவை யாவும் நடந்ததென தெரிந்தால் வீணாக ரிஷியின் மீதும் காவ்யாவின் மீதும் கோபப்படுவார். விஸ்வத்திற்கு கீர்த்தனா என்றால் உயிர், மேலும் இப்படி ஒர் பிரச்சனை என்றால், அவர் யாரையும் விட்டு வைக்க மாட்டார், தன்னை காப்பாற்றியவர் உட்பட, இந்த எண்ணம் தோன்றியதால் மௌனமானாள் அவள் மேலும், இளமறனின் முகம் ஞாபகம் வந்தது. “நான் இளமாறன்”, என தொடர்ந்து, அவன் கூறிய விதத்திலும் அவளிடம் அவன் நடந்து கொண்ட விதத்திலும், அவனது நேர்மையான குணமும்,கம்பீரமும், அழுத்தமான குணமும் அவளுக்கு தெரிந்தது. அவனுடைய களையான முகத்தையே பார்த்திருந்தாள் அவள். தனக்கு எந்த இன்னலும் நேர்ந்துவிடக் கூடாதென அவன் படும் தவிப்பை அவள் இரசித்தாள். அதனாலேயே தான் இன்னாரென அவனிடம் சொல்வதை தவிர்த்தாள்.

சில நிமிடங்களுக்கு பிறகு அவள் அருகே வந்த பெண், “ஏம்மா பாக்க பெரிய இடம் மாதிரி தெரியுற, நீ எப்படி இவனுககிட்ட மாட்டின?” – என்றாள்

கீர்த்தனா ஏதும் புரியாது விழிக்க,”இங்க பாரு அங்க நிக்கிறது உன் புருசனா?”

“இல்ல” என்று தலையசைத்தாள் அவள்.

“சரிதான், இங்க பாரு ப்ராத்தல் கேசுக்காக எங்களை இங்க உக்கார வச்சிருக்கானுக, நீ அந்த இன்ஸ்பெக்டருகிட்ட, அவன் உன் புருசன் இல்லனு சொன்னன உன்னயும் ஒரு வழி ஆக்கிருவான், அந்த பையனுக்கும் பிரச்சனை, ஏதாச்சு ஒரு கேஸுல உள்ளப் போட்டுருவான்.. போய் அந்த பையனுகிட்ட பேசு” என்றனர்.

கீர்த்தனாவிற்கு மனம் நடுங்கியது, பிரச்சனைகளை சமாளிக்கலாம், அவமானத்தை?, தன்னால் தன்னைக் காத்தவனுக்கும் ஏதும் பிரச்சனை வருமா? கூடாதென அவள் உள்ளம் சொல்லியது அந்த சிந்தனையிலேயே அவன் முகத்தை அவள் பார்த்திருக்க, கவலையில் கலைந்திருக்கும் அவள் முகத்தைப்பார்த்தவாரே எதிரே இருந்த பெஞ்சில் அமர்ந்திருந்தான் இளமாறன்.

இன்ஸ்பெக்ட்டரிடம் தன் நிலையை சொல்லி அவளை பத்திரமாக, வீட்டுக்கு அனுப்பிவட வேண்டுமென, அவன் நினைத்திருந்தவையாவும் நிகழாது என இன்ஸ்பெக்டெரை பார்த்தவுடனேயே தெரிந்து கொண்டான். காவ்யாவுடனான பிரச்சனையில் தன் மீது பாய்ந்த அதே இன்ஸ்பெக்ட்டர், நிச்சயமாக இந்த நிகழ்வில் தன்னை சும்மா வட மாட்டான், தன் மீது வஞ்சம் தீர்த்துக்கொள்ள அவனுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பை அவன் பயன்படுத்திக்கொள்ள தயங்க மாட்டானென அவன் உள்ளம் உணர்த்தியது. இளமாறன் எழுந்து நிற்க, மனதில் ஏதோ உந்தியதால், இருந்த இடத்திலிருந்து எழுந்து, விருட்டென்று எழுந்து அவன் அருகில் வந்து நின்றாள் கீர்த்தனா, எதிரே இருந்தவரின் முகத்தைப் பார்த்ததும் இளமாறனின் கையைப் பற்றி நின்றாள். அவர்களை அழைத்து வந்த காவலர் இன்ஸ்பெக்டெரின் காதருகே ஏதோ சொன்னதும், அவர் கண்கள் எதிரே நின்ற இருவரையும் அளந்தது.

“என்னடா உன்ன இன்னும் ஸ்டேஷன் பக்கம் காணுமேனு நினைச்சேன், இவ யாருடா? எந்த பெண்ணுகிட்டயாவது பிரச்சனைப் பண்ணாம உன்னால இருக்க முடியாதா?” – இன்ஸ்பெக்ட்டர்,

பதிலுக்கு இளமாறன் சொன்ன எதுவும் இன்ஸ்பெக்ட்டரின் காதுகளில் ஏறவேயில்லை மாறாக, அவனது தோள்களை தழுவி நின்ற, கீர்த்தனாவின் மீதே அவரது பார்வை நின்றது. இளமாறனும் தன் அருகே நின்றவளுக்கு எந்த பிரச்சனையும் வராது மேலோட்டமாக நடந்தவைகளை கூற நினைத்தான். தீடீரென ஏதோ மின்னியது இன்ஸ்பெக்ட்டரின் கண்களில், அதன் பின் கொஞ்சம் நிறுத்து என்றவாரு, செய்கை காட்டிவிட்டு தன் அருகே நின்ற மற்றொரு காவலரை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றார். இளமாறன் தன்னை தழுவி நின்றவளின் கைகளை ஆதரவாக தட்டினான்.

“தம்பி கொஞ்சம் இங்க வாங்க” – என்று சற்று தள்ளி நின்ற காவலர் ஒருவர் அழைக்க அவர் அருகே சென்றான் இளமாறன், கீர்த்தனாவும் அவனைத்தொடர்ந்தாள்.

“தம்பி நீங்க, கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு பிரச்சனைக்காக ஸ்டேஷன் வந்தீங்க தானே, ஒரு பொய் கேசு .. அப்புறம் கூட உங்க பாஸ் ரிஷி வந்து கூட்டிட்டுபோனாரே?” என்றார்.

தன் பின் புறம் நின்றவளை ஒருமுறை திரும்பிப்பார்த்தான் இளமாறன், ரிஷியின் பெயரைக்கேட்டதும் ஒரு நிம்மதியும் அதே நேரம் தன் அண்ணனின் அலுவலகத்தில் இவன் பணிபுரிகிறானா என்ற எண்ணாமும் மேலிட, குழப்பத்துடன் அவனை ஏறிட்டாள் கீர்த்தனா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.