(Reading time: 17 - 34 minutes)

அவன் இதயத்தை அணுகிய போது அதுவரை மார்புச்சிறைக்குள் இருந்த குருதியானது குபுகுபுவென வெளிவரவே அவள் வேகமாக ரத்தநாளங்கள் வழியே குருதியை நோயாளியின் உடலுக்குள் செலுத்துக் கொண்டிருந்தாள்.

இதயத்தைப் பிறந்த குழந்தையை தூக்குவது போல மென்மையாய் கையாண்டு பாதிப்பைச் சரி செய்தான்.

அன்று அறுவை அரங்கினுள் செவிலியர்களும் பணியாளர்களும் வருவதும் போவதுமாக இருந்தனர். ஏனெனில் எமர்ஜன்சி சர்ஜரி ஆதலால் சர்ஜரிக்கு தேவையான உபகரணங்களை கொண்டு வருவதும் மருந்துகள் ரத்தம் போன்றவற்றை எடுத்து வருவதுமாக இருந்தனர்.

ஆனாலும் அவன் கவனம் ஒரு கணம் கூட சிதறவில்லை.

மானிடர் இப்போதும் சீரான தாளத்திலே ஒலித்தது. ரத்த அழுத்தமும் நார்மலாக இருந்தது.

மிக மிக சிக்கலான சவாலான சர்ஜரியை லாவகமாக செய்து முடித்து விட்டிருந்தான்.  

கிட்டத்தட்ட ஆபரேஷன் முடியும் தருவாயில் இதயம் தாறுமாறாக துடிக்க மானிடரின் பீப் சத்தம் அபஸ்வரமாய் ஒலித்தது.

ப்ரவீன் பதட்டமடைந்து ஷாக் குடுக்க வேண்டுமா என்று கேட்க அவனோ அவளை நோக்கினான்.

கண்ணிமைக்கும் நேரத்திற்குள் மருந்தினை செலுத்தி இதயத்தை சீராக துடிக்க வைத்துவிட்டாள் அவள்.

ரத்தக்கறை படித்திருந்த மாஸ்க்கைத் தாண்டி அவன் விழிகள் அவளை பார்த்து மெச்சுதலாய் புன்னகைக்க ஒரே ஒரு நொடி தான் அவள் முகத்திலும் மின்னல் கீற்றாய் ஓர் புன்னகை.   

ஒரே நொடி என்றாலும் அந்த மின்னல் வெட்டினைக் கண்டு கொண்டான் அவன்.

வெற்றிகரமாக சர்ஜரி முடித்து ஐ.சி.யூ வில் பேஷண்டை ஷிஃப்ட் செய்து விட்டு ரத்தக்கறை படிந்த ஸ்க்ரப் உடைகளை களைந்து வேறு புதிய ஸ்க்ரப் உடைகளை அணிந்து கொண்டு ஐசியூ வந்தான்.

“அழாதே மா. உன் கணவருக்கு நல்ல படியா ஆபரேஷன் முடிஞ்சிருக்கு. இன்னும் கொஞ்சம் நேரத்தில் முழிப்பு வந்திடும். உன்னோட தைரியம் தான் அவருக்கு பலத்தைக் கொடுக்கும்”

அந்தப் பெண்ணின் கையைப் பிடித்து மிக மிக கனிவாக பொறுமையாக பதமாக நோயாளியின் நிலையை கொங்கனியில் விளக்கிக் கொண்டிருந்தாள்.

அவன் அருகே வரவும் ஆபரேஷன் செய்து காப்பாற்றிய டாக்டர் இவர் தான் என்று சொல்லி . அவனை முன்னிறுத்த அந்தப் பெண் இரு கரம் கூப்பி அவனை  வணங்கி நீங்க நல்லா இருக்கணும் ஐயா என்று வாழ்த்தவும் அவனுக்குத் தங்களின் பயிற்சி காலம் நினைவுக்கு வந்தது.

“ஹனி”

ஆழ்ந்த கரகரப்பான குரலில் அவன் அழைக்க அவள் தோள் மீது அவன் வைத்திருந்த கரத்தின் நடுக்கத்தை அவள் உணர்ந்தாள்.

சட்டென அவன் முகத்தை ஏறிட்டாள். திடீரென அவளுக்கு அந்நினைவு ப்ளாஷ் அடித்தது.

ஒரே நேரத்தில் சொல்லவொண்ணாத வலியையும், வானத்தின் எல்லையையே தொட்டு சாதித்து விட்ட நிறைவையும் ஒருவரால் உணர முடியுமா என்ன. அப்படி ஓர் உணர்வை அவன் விழிகளில் அவள் கண்டாள். அதற்கான காரணத்தையும் அவள் ஒருத்தி மட்டும் தானே அறிவாள்.

அவன் அங்கிருத்து அகன்று விட அவர்களை அனுப்பிவிட்டு அன்று சர்ஜரி செய்த மற்ற இரு பேஷன்ட்ஸ் பற்றி விசாரித்து விட்டு அவனது கேபினை நோக்கி விரைந்தாள்.

பின்னிரவு நேரம்! நட்சத்திர வானம். ஆங்காங்கே மேகம். அதிலே ஆடி ஓடி விளையாடிக் கொண்டிருக்கும் வெண்ணிலவு.

அலைகடலை தீண்டியதால் குளிர்ந்து போன காற்று அந்தக் குளுமையை உனக்கும் தருகிறேன் வா என்று ஜன்னலின் திரைச்சீலைகளை விலக்கி விட்டு உள்ளே வந்த போதும்  இரு கைகளாலும் முகத்தை மூடியபடி அதனை மறுத்து சோபாவில் அமர்ந்திருந்தான் அவன்.

அவள் உள்ளே நுழைய அந்த அரவம் கேட்டும் நிமிர்ந்து பார்த்தான் இல்லை.

அவன் அருகே சென்றவள் அவன் தலையை வருடிக் கொடுக்கவும் கை முஷ்டிகளை இறுக்கமாக மூடி தன்னை தானே கட்டுப்படுத்த முயன்றான்.

ஏற்கனவே அவன் மூளையின் செல்கள் ஆழமாய் புதைக்கப்பட்டிருந்த நினைவுகளை வெகு நேர்த்தியாக தோண்டி எடுத்து அவனது கண்களின் நீர்சுரப்பிகளில் தேக்கிக் கொண்டிருந்தன.

இப்போது அசீரரீயாய் அவளின் அழைப்பு அவன் செவிகளுக்குள் ஒலித்திட அந்த அதிர்வானது அவனது விழியின் அணையை உடைத்து விட்டிருந்தது.

அவள் வயற்றில் முகம் புதைத்து  அவளது தாய்மையின் அரவணைப்பில் அவளது அன்பின் கங்கையில் கண்ணீர் கரைத்துக் கொண்டிருந்தான்.

மௌனத்தின் மொழியில் அவன் அரற்றி ஓய்ந்திட தங்கள் பணி முடிந்தது என்றே மூளையும் சற்று ஓய்வை வேண்டிட அந்த சோபாவிலே சிறிது நேரம் அவன் கண்ணயர அவள் மெல்ல விலகி பால்கனி நோக்கிச் சென்றாள்.  

மாலையில் அவன் கூறிய செய்தியும் இந்த எமர்ஜன்சி ஆபரேஷனும் கலவையாய் அவனுள் உணர்வுகளை தூண்டி விட்டிருந்தன.

அதையெல்லாம் அசைபோட்ட படியே பால்கனியின் தூணில் சாய்ந்திருந்தபடி உணர்வுகளை சிந்தனைகளை ஆராய்ந்து கொண்டிருந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.