(Reading time: 17 - 34 minutes)

திகாலை கதிர்கள் கிழக்கில் இருந்து மெல்ல நீண்டு வர மேற்கே விரிந்த அரபிக் கடல் சூரியனின் ஸ்பரிசத்தில் ஜொலித்தது.

பறவைகள் பூமியின் இன்னொரு விடியலை இன்னொரு நாளை உற்சாமாக வரவேற்க கீதம் பாடிட மலர்களோ மணம் பரப்பி தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடின.

இந்தக் காலைப் பொழுதை மிகவும் ரசிப்பான் அவன்.

நேற்றைய உணர்வுகளின் சுவடுகள் நீர் கோடுகளாய் கன்னத்தில் படிந்திருக்க அவன் ஒரு கணம் கண் மூடி திறந்து ஆழ மூச்சை இழுத்து விட்டு ரிப்ரஷ் செய்து கொண்டு வந்தான்.

அந்தக் கேபினின் உள் அறையை எட்டிப் பார்த்தவன் அவளை அங்கே காணவில்லை எனவும் ‘அதுக்குள்ளே எழுந்து ரவுண்ட்ஸ் போய்ட்டாளோ’ என்று நினைத்தபடி காலைப் பொழுதினை வரவேற்க பால்கனி வந்தான்.

அங்கே இருந்த மூங்கில் நாற்காலியில் கால்களை மடக்கியபடியே கைகளை தலைக்கு முட்டுக் கொடுத்து உறங்கிக் கொண்டிருந்தாள் அவள்.

உறக்கத்தில் தான் ஒருவரது உண்மையான முகம் தெரியும் என்பர்.

“நீ தூங்கும் போது பார்க்கணுமே அப்படியே ஒரு குட்டி பேபி தூங்குறது போல இருக்கும்” அவன் உறங்கும் போது குழந்தையாய் தெரிகிறான் என்று அவள் சொல்ல அவன் கேட்டதுண்டு.

இவள் உறக்கத்திலும் இப்படி பிரித்தறிய முடியாத கலவையாகத் தான் இருக்கிறாள்.

இந்த முகத்தில் சாந்தம் இருக்கிறது. கருணை இருக்கிறது. திடம் அதிகமாகவே இருக்கிறது. கொஞ்சமே கொஞ்சம் குழந்தைத்தனம் குழைந்திருக்கிறது. ஆனால் முன்பெல்லாம் இருக்கும் லேசான ஒரு பயம், ஒரு கோபம், ஒரு சஞ்சலம் இப்போது சுத்தமாக இல்லை.

மேற்கு திசை என்ற போதும் அதிகாலை கதிரவனின் ஒளி வெளிச்சமாக அந்த பால்கனியில் நிறைய துவங்க அவளை லேசாக அசைத்துப் பார்த்தான்.

“நான் தூங்கினா கும்பகர்ணன் தங்கச்சி. பக்கத்துல அணுகுண்டே வெடிச்சாலும் நான் பாட்டுக்கு தூங்கிட்டு இருப்பேன்” பயிற்சி நாட்களில் அவனிடம் அவள் சொன்னது அவனுக்கு மறக்கவில்லை.

வார்ட் பெஞ்ச், ஒற்றை நாற்காலி என்று எது கிடைத்தாலும் எவ்வளவு சத்தம் சுற்றுப்புறத்தை நிறைத்தாலும் அவளது ஓய்வு நேரத்தில் அவள் நிம்மதியாக உறங்குவதை வியந்து பார்த்திருக்கிறான் அவன்.

ஆனால் அவள் பணி நேரத்தில் ஒரு விநாடி கூட நித்திரா தேவிக்கு நேரம் ஒதுக்க மாட்டாள்.

“நொடிப்பொழுதே போதும் ஓர் நாடித் துடிப்பு அடங்கும் காலம்” மருத்துவம் கவிதை சொல்லும். அவனுக்குத் தான் பல சமயங்களில் பொருள் புரியாது.

“ஹனி”

அவனது கரத்தின் ஸ்பரிசத்தை அந்த உறக்கத்திலும் அறிந்து கொண்டாள் போலும். ஹ்ம்ம் என்ற ஒரு முணுமுணுப்புடன் மீண்டும் தூக்கத்தில் தொலைந்தாள்.

“உள்ள போய் கொஞ்சம் நேரம் ஸ்ட்ரச் செய்து ரிலாக்ஸ் பண்ணி தூங்கு மா” அவன் சொல்லிக் கொண்டே அவளை மெல்ல கைகளில் ஏந்த முற்பட்டான். 

“ஸ்ஸ்ஸ் இவனோட இது ஒரு தொல்லை” அவள் எழுந்து நிற்க முற்பட அசையாது ஒரே கோணத்தில் படுத்திருந்ததால் அவளது கால்கள் மரத்துப் போயின.

“விடு ஐ வில் கேரி யு” என்றவன் அவள் பதிலுக்குக் காத்திராமல் அவளை மெல்ல தூக்கி உள் அறையில் இருந்த மெத்தையில் படுக்க வைத்தான்.

“கொஞ்ச நேரம் தூங்கு”

“பப்பு” மென்குரலில் அவனை அழைத்தாள்.

“என்னடா” அவன் கேட்க பதில் சொல்லாமல் உறங்கி விட்டிருந்தாள்.

அவள் மீது போர்வை போர்த்தி ஏசியை ஓடவிட்டு அறைக் கதவை மூடிவிட்டு ஐ.சி.யூ விற்கு சென்றான்.

கிட்டத்தட்ட ரவுண்ட்ஸ் முடிந்து அன்றைய நாளுக்கான சர்ஜரி பற்றி டீமிடம் விவாதித்துக் கொண்டிருந்தான்.

“லெட்ஸ் டேக் அப் இன் தி அஃப்டர்நூன். சிஸ்டர் பேஷன்ட்க்கு லைட் ப்ரேக்ஃபாஸ்ட் குடுத்திருங்க. அதுக்கு பிறகு ஃபாஸ்டிங்ன்னு சொல்லிடுங்க” அவன் கடைசி உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டிருக்கவும் மருத்துவமனையின் நிர்வாக அலுவலர் அங்கே வரவும் சரியாக இருந்தது.

“சர். ரவீந்தர் பாண்டே வந்திருக்கார் உங்களை பார்க்கணும்ன்னு சொல்றார்”

“யாரது மிஸ்டர் ஷிண்டே”

“நைட் வந்த எமர்ஜன்சி..... அந்த ஃபாக்டரி ஓனரோட மாமா. எக்ஸ் எம்.எல்.ஏ. கொஞ்சம் அரசியல் செல்வாக்கு உள்ளவர்”

“சரி அவர் எதுக்கு என்னை பார்க்கணும்”

“மேடமை பார்க்கணும்னு தான் சொன்னார். அதான் இங்க கூட்டிட்டு வந்தேன்”

“மேடமை ஏன் பார்க்கணும். எனக்கு இன்னும் புரியல மிஸ்டர் ஷிண்டே”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.