(Reading time: 11 - 21 minutes)

“ நீயும் வயேன் புகழ்.. எங்க ஊரில் உள்ள எல்லாரும் உன்னை பார்த்தால் சந்தோஷப்படுவாங்க.. உம்மியும் (அம்மா) வாப்பாவும் (அப்பா) உன்னை பாக்கணும்னு சொல்லுவாங்க!”

“அவங்க இல்லைன்னா?” இறுகிய குரலில் கேட்டான் புகழ்.

“என்ன?” அதிர்வுடன் அவனைப் பார்த்தாள் சஹீபா. நேற்றுவரை தனக்கு நம்பிக்கையை வாரி வழங்கியவன் உதிர்க்கும் வார்த்தைகளா இவை? அவளின் தவிப்பை அறியாதவனா அவன்? கசப்பென்றாலும் மருந்த புகட்டவேண்டிய நிலையில் இருக்கிறானே அவன்? அதனால் மீண்டும் பொறுமையாய் அதே கேள்வியைக் கேட்டான்.

“ஒரு வேளை அவங்க இப்போ இல்லன்னா நீ என்ன பண்ணலாம்னு இருக்க ஆயிஷா?”..

“ஆ.. நான் ஆயிஷா இல்லை புகழ்!”

“இருக்கலாம்.. ஆனா ஆயிஷாவாக நீதானே இருந்த? அவங்களுக்கு என்ன பதில் சொல்ல போற?”

“இது தேவையில்லாத கேள்வி!”

“எனக்கு தேவைதான்!என்ன நம்பினவங்களுக்கு நான் பதில்சொல்லனும்!” அழுத்தமாய் உரைத்தான் அவன்.

“நானும்தானே புகழ் உன்னை நம்பினேன்?” வலி நிறைந்த குரலில் கேட்டாள் சஹீபா.

“ஆமா. அந்த நம்பிக்கைய காப்பாத்தி தானே உன்னை  இங்க அழைச்சிட்டு வந்தேன்? உன் எல்லா கேள்விக்கும் நான் பதிலாக இருக்கேன்.. என் ஒரே ஒரு கேள்விக்கு நீ ஏன் பதில் சொல்ல கூடாது?” அவளை நெருங்கி விழி நோக்கி உரைத்தான் புகழ்.

“ என் அப்பாவும் அம்மாவும் இருந்தாலும் சரி இல்லன்னாலும் சரி..இதுதான் என் இடம் புகழ்.. நான் வேற எங்கயும் யாருக்காகவும் வரவே மாட்டேன்” ஒவ்வொரு வார்த்தைகளையும் அழுத்தமாக சொல்லி இருந்தாள் சஹீபா. அரைநொடிக்குல் தனது உணர்வுகளை மறைத்து புன்னகைத்திருந்தான் புகழ்.

“கூல்.. வா.. வந்து உன் ஊரை எனக்கு காட்டு” என்று துள்ளலாக கூறி அவன் முன்னேறி நடக்க வாயடைத்து போய் நின்றாள் சஹீபா. அவள் வராத சில மாதங்களிலேயே அங்கு சில மாற்றங்கள் வந்திருப்பதை அவளால் கவனிக்க முடிந்தது. பரிட்சயமான சிலர் அவளை ஆச்சர்யமாய் பார்த்தபடி ஏதோ முணுமுணுக்க அவளின் கால்கள் தன் வீட்டை நோக்கி வேகமாகவே நடைப்போட்டன,

“உம்மி.. மா.. மா” என்று அவள் அழுகையுடன் அழைக்க, கதவை திறந்து கொண்டு வந்தார் ஒரு வயதான பெண்மணி.

“யாரு பாப்பா நீ ? என்னம்மா வேணும்?”

“நீங்க யாரு பாட்டி? என் அப்பா அம்மா எங்க?”

“இது என் வீடும்மா.. “என்றார் பாட்டி. அதிர்ச்சியாகி நின்றாள் சஹீபா. புகழுக்கு கொஞ்சம் குழப்பமாக இருந்தது. ஒருவேளை இவளுக்கு தன் வீட்டின் விவரங்கள் மறந்து போயிருக்குமோ? என்று அவன் தவறாக கணிக்கும்போதே சஹீபா வெகுண்டு பேச ஆரம்பித்திருந்தாள்.

“இல்ல..இல்ல இது எங்கள் வீடு.. எனக்கு தெரியாதா? நான் பொறந்து வளர்ந்த வீடு இது! என் அம்மாவும் அப்பாவும் எங்க?” என்று அவள் குரலை உயர்த்தவும், பாட்டியின் முகத்தில் சிந்தனை படர்ந்தது.

“வயசு பொண்ணு வாசல்லயே நிக்க வேணாம்..உள்ள வாம்மா .. உள்ள வந்து பேசு!” என்று அவர் கூறிடும்போதே “சஹீபா கண்ணு” என்று அன்பொழுகும் குரலொன்று கேட்டது.

அந்த குரலுக்கு சொந்தமானவரை பரிட்சயமாய் அவள் பார்த்திட, புகழோ அமைதியாய் அங்கு நடக்கும்நிகழ்வுகளின் சாட்சியானான்.

“ ரஹீம் மாமா..” என்றவள் அவரின் கைகளை பிடித்துக் கொண்டார். சஹீபாவை ஆசிர்வதுப்பது போலவே தலையில் கைவைத்து ஒரு நொடி நெகிழ்ந்து போனவரின் கண்களிலும் இப்போது லேசாய் கண்ணீர் எட்டிப் பார்த்தது.

“எப்படி கண்ணு இருக்க நீ?” அன்புடன் வினவினார் அவர். சஹீபாவின் தந்தையின் நெருங்கிய நண்பர் ரஹீம். நீண்ட நாட்களுக்குப் பின் அவளைக் கண்ட மகிழ்ச்சி அவரின் முகத்தில் பிரதிபலித்தது.

“ நான் இருக்கேன்.. அப்பா அம்மா எங்க? இந்த பாட்டி யாரு?” சுற்றி வளைக்காமல் கேட்டாள் சஹீபா. அவள் எப்போதுமே அப்படித்தான். நினைத்ததை உடனுக்குடன் பேசியே பழக்கப்பட்டவள். அதை ரஹீமும் அறிந்தவர்தான்! இருப்பினும் அவளின் கேள்விக்கான பதிலை எப்படி எளிதில் சொல்ல முடியும்?

“ சொல்லுறேன் மா.. நீ முதல்ல நம்ம  வீட்டுக்கு வா .. சாப்பிட்டுட்டு பேசலாம்..”

“எனக்கு ஒன்னும் வேணாம்..நீங்க முதலில் எனக்கு பதில் சொல்லுங்க..!” பிடிவாதமான குரலில் சொன்னாள் சஹீபா.

“எப்பவுமே பிடிவாதம் தானா சஹீபா? வாசல்லநின்னு பேசுறது எனக்கு சரியாக படல” தனது ஒரே வசனத்தினால் அவர்களின் மொத்த கவனத்தையும் தன் பக்கமாய் ஈர்த்துக் கொண்டான் புகழ்.

“தம்பி யாரு?”

“வணக்கம் ஐயா..நான் புகழ்.. சஹீபாவை இங்க அழைச்சுட்டு வர்றதுக்கு ஹெல்ப் பண்ணேன்..சென்னையில இருந்து வரேன்!” என்றான். சென்னை என்றதும்தான் ரஹீமின் முகத்தில் கேள்வி பிறந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.