(Reading time: 11 - 22 minutes)

“என்ன சார்.. பிளாஷ் பாக்கா.. tortoise.. ஏத்தவா இல்லை ஆல் அவுட் coil ஆ ? என்று ஒருவர் வார,

“அட போங்கப்பா.. ஏதோ ஒன்ன சீக்கிரம் ஏத்துங்க.. இல்லாட்டி flow கெட்டுடும் “ என,

எல்லோரும் சிரித்தனர். அவர் விடாமல் சொல்ல ஆரம்பிக்க,,

“லஞ்ச் எல்லாம் தான் கொடுத்து விட்டேனே.. அப்புறம் எதுக்கு போன் பண்றீங்க.. ஏன் டிபன் காரரியர் மறந்து பஸ்லே விட்டுடீங்களா?” ன்னு கேக்கறா.

“அது எல்லாம் இல்லைமா.. நான் லஞ்ச் சாப்பிட்டு விட்டேன்.. இன்னிக்கு லஞ்ச் நல்லா இருந்துது ... அதான் உன்கிட்ட சொல்லிட்டு அப்படியே கொஞ்ச நேரம் பேசலாம்ன்னு கூப்பிட்டேன்..

யோவ்.. புருசா.. நானும் கல்யாணம் ஆனா நாளேர்ந்து இன்னிக்கு வரைக்கும் சமைச்சு போட்ருக்கேன். இன்னிக்கு எங்க சொந்தகாரங்க கல்யாணம்.. அதுனாலே நான் வீட்லே சமைக்கல.. கல்யாண வீட்லேர்ந்து காரியர் கொடுத்து விட்ட, அதா சாப்பிட்டு நல்லா இருக்குன்னு சொல்ல போன் வேற.. வீட்லே dining டேபிள் உட்கார்ந்து காலாட்டிக்கிட்டு சுட சுட செஞ்சு கொண்டு வந்து போடும்போது எப்படி இருக்குன்னு சொல்ல தோனல.. அட்லீஸ்ட் எனக்கு போதும் நு கூட வாய துறந்து சொல்லாம, நீங்க கைய கழுவறத வச்சு கண்டுபிடிச்சு நாங்க சமைக்கிறத நிப்பாட்டனும்... இங்கே எவன் பொங்கி போட்ட சொத்துக்கு போன் பண்ணி வேற சொல்றீங்க.. உனக்கு எல்லாம் மனசாட்சி இருக்கா?” அப்படின்னு ஆரம்பிச்சு சரமாரியாக திட்டு விழுந்தது.

அவர் சொல்லி முடிக்கவும், மற்ற எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

செழியன் விடாது “அப்புறம் என்ன ஆச்சு சார்.? நீங்க கடலை வறுத்தீங்களா இல்லியா?” என் கேட்க,

“அட போப்பா.. அவதான் என்னை பொரிச்சு எடுத்துட்டா.. அன்னிக்கு முடிவு பண்ணினேன்.. இனிமேல் சாப்பாட்டு விஷயத்துக்கு வாயே திறக்க கூடாது.. “ என்றார்.

இப்படியே பேசிக் கொண்டிருந்தனர்... வளர்மதி தங்கள் வீட்டில் நடக்கும் விஷயங்கள சொல்ல, மேலும் சுவாரசியம் கூடியது.. நேரம் போனதே தெரியவில்லை.

கிட்டத்தட்ட அரைமணி நேரம் சென்ற பின் தான் இன்னும் கார் வரவில்லையே என்று பார்க்க , சரியாக டிரைவரிடம் இருந்து போன் வந்தது.

இவள் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பவும், செழியன் வாசல் வரை வந்தான்.

யாருக்கும் கேட்காத தொலைவு வந்ததும்,

“ஹேய்.. மலர் .. திருப்பியும் சொல்றேன். இங்கே வேலை எல்லாம் முடிஞ்சு வீட்டுக்கு போனவுடன் கால் பண்ணுவேன். போன் அட்டென்ட் பண்ணு.. ப்ளீஸ்” என்று பேசி வழி அனுப்பி வைத்தான்.

மலர் ஒருமாதிரி விழித்துக் கொண்டே வண்டியில் ஏறினாள்.

அவளை அனுப்பிவிட்டு உள்ளே வரவும், சிவஞானம் அதை பார்க்கவும் சரியாக இருந்தது.

பார்வதி வெகுளியாக “அடடா அந்த பொண்ணு கிளம்பிருசோ... கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாம்னு பார்த்தேன்” என,

“அவங்க கிட்டே என்னம்மா கேட்க போறீங்க?” என்று செழியன் புரியாமல் வினவ,

“அதுதான் பா.. அந்த பொண்ணு  ஊர், அவங்க அப்பா, அம்மா எப்படி, சொந்த ஊர் இது பத்தி எல்லாம் கேட்கலாம்நு நினைச்சேன்..”

சிவஞானத்திற்கு புரிந்தது.. சொல்ல போனால் கொஞ்ச நாட்களாக பார்வதியின் எண்ணம் எல்லாம் தன் பிள்ளையின் மேல் தான்.. செழியனுக்கும் திருமணம் முடிக்க வேண்டும் என்பது அவரின் எண்ணமாக இருந்தது. அவனும் பிடி கொடுக்கவில்லை.. அவருக்கும் வேறு ஒரு பிரச்சினையால் பார்வதியிடம் வேறு மாதிரி சமாளித்தார்.

இப்போ பார்வதியின் ஆசை தீவிரமாகிருப்பது போல் தெரியுது.. இது வளர்வதற்குள் தான் நினைத்ததை நடத்த வேண்டும் என்று எண்ணினார்.

இதற்குள் மற்றவர்கள் எல்லோரும் கிளம்ப, எல்லோரையும் அனுப்பி வைத்தவன், செந்தில் அவனை அழைத்து சாப்பிட வர சொல்ல, செழியனும் சென்றான்.

செந்தில் உணவு முடிந்ததும், தங்கள் வீட்டிற்கு புது மணமக்களாக செல்ல, செழியன் அங்கே உள்ளவர்களோடு சேர்ந்து மண்டபத்தை காலி செய்து, செட்டில்மென்ட் எல்லாம் முடித்தான்.

மனமக்களோடு , சம்பந்தி வீட்டவர்களும் வருவதால் முறைப்படி வீட்டில் செய்ய வேண்டிய சில சடங்குகளுக்காக செந்தில் பெற்றோரும் சென்று இருந்தனர் பொறுப்பகளை எல்லாம் உறவினர் கையில் ஒப்படைத்து செழியனையும் கூட சேர்ந்து எல்லா வேலைகளையும் முடிக்க சொன்னார்கள்.

எல்லா முடித்து விட்டு ஒருவழியாக வீட்டிற்கு செல்லும்போது மாலை ஆகி விட்டு இருந்தது..

தன் அறைக்கு சென்ற உடன் அவன் செய்த முதல் வேலை, தன் மனம் கவர்ந்தவளுக்கு போன் செய்தது தான்.

சற்று நேரம் ரிங் போய் கொண்டு இருக்க, அவள் எடுப்பாளோ, மாட்டாளோ என்று கலக்கமாக இருந்தது. நீண்ட நேரம் கழித்து இவள் எடுக்க மாட்டாள் திருப்பி அழைப்போம் என்று இவன் கட் செய்ய எத்தனிக்கும் போது மலர் எடுத்து பேசினாள்.

“ஹலோ..” என்ற மெல்லிய குரல் கேட்க,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.