(Reading time: 14 - 28 minutes)

"இதுல என்ன கிறுக்குதனம் பண்ணி வச்சிருக்கியோ" என முணுமுணுத்துக்கொண்டே ஓவியத்தை பிரித்துப் பார்த்தார் டைரக்டர்.  மூளை ஸ்தம்பித்தது போல் ஓர் உணர்வு. ஓவியத்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்தார்.

அமேலியா வரைந்து கொடுத்த ஓவியம் நிச்சயம் டைரக்டரை பாதித்துவிட்டதை வசந்த் புரிந்து கொண்டான். லூயிஸ் வரைந்து கொடுத்த ஓவியத்தையும் அமேலியாவின் ஓவியத்தையும் மாறி மாறி பார்த்தார் டைரக்டர்.

"வசந்த்"

"சொல்லுங்க சார்"

"இந்த ஓவியத்தை யார் வரைஞ்சது?"

"அமேலியா சார்"

"அமேலியாவா?"

வசந்த்திற்கு ஒரு நொடி மூச்சு நின்று விட்டது. அமேலியாவின் பெயரை தன்னையறியாமல் கூறியது தற்செயலாய் இருந்தாலும் தவறு செய்துவிட்டோமென தனக்குத் தானே நொந்துகொண்டான்.

"அவங்க பேரே வித்தியாசமா இருக்கே. இந்த ஓவியத்தை நீ ஏன் முன்னாடியே கொடுக்கல?"

"நீங்க சொன்னது போல அவங்க வரையல சார், அதான்"

"இல்லை இல்லை நான் எதிர்பார்த்ததை விட அட்டகாசமா வரைஞ்சிருக்காங்க. ஓ காட்! இந்த ஓவியம் என்கிட்டே எதையோ சொல்லுறது போல இருக்கு. ப்ளீஸ், என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க. நீங்க போகலாம்"

வசந்தின் முகத்தில் புத்துணர்வு மகிழ்ச்சி. 

"ஜெஸிகா ஷூட்டிங் நடக்கபோற வீட்டை பேசி முடிச்சிட்டியா?" ஓவியத்தை பார்த்தபடியே டைரக்டர் கேட்டார். 

"இன்னும் முடிக்கல சார்"

ஜெஸிகா சொன்னது டைரக்டர் காதில் சரியாக விழவில்லை.

"என்ன?"

"முடிச்சிட்டாங்க சார்" வசந்த் ஜெஸிகாவிற்காக பொய் சொன்னான்.

"சரி சரி நீங்க போங்க. யாரும் என்னை தொந்தரவு செய்யாதீங்க" டைரக்டர் ஓவியத்தை விட்டு கண் அகலாமல்  கூறினார்.

சந்தின் கார் சாலையில் மிதமான வேகத்தில் சென்றுகொண்டிருந்தது. அவன் உள்ளத்தில் பொங்கிய மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அதன் வெளிப்பாடாய் பாட்டு பாடிக்கொண்டும் விசிலடித்துக்கொண்டும் காரை செலுத்திக் கொண்டிருந்தான்.

அவனது செயலை வெறுப்போடு பார்த்துக்கொண்டிருந்த ஜெஸிகா மெல்ல பொறுமையை இழக்கத் தொடங்கினாள்.

"உன் சேட்டையை கொஞ்சம் நிறுத்துறியா வசந்த்"

பாட்டு பாடுவதை நிறுத்திவிட்டு ஜெஸிகாவை நோக்கினான் வசந்த்.

"எதுக்கு டைரக்டர் கிட்ட பொய் சொன்ன?"

"நான் என்ன பொய் சொன்னேன்?"

"சூட்டிங் நடக்க போற வீட்டை பேசி முடிச்சிட்டேன்னு நீ தான சொன்ன. அது பொய் இல்லையா?"

"அந்த பொய் இன்னும் கொஞ்ச நேரத்துல உண்மையா மாற போகுது ஜெஸ்ஸி"

புரியாத பார்வையை வசந்தின் மீது வீசினாள் ஜெஸிகா.

"இப்போ நாம ஜான் வீட்டுக்கு தான் போயிட்டு இருக்கோம்"

"ஐயோ வண்டியை நிறுத்து"

"ஏன்?"

"வண்டியை நிறுத்துடா"

வசந்த் சட்டென காரை சாலையின் ஓரமாக நிறுத்தினான்.

"என்ன ஆச்சு ஜெஸ்ஸி?"

"நான் அந்த லூசு வீட்டுக்கெல்லாம் வரலை"

"ஏன்?"

"அதெல்லாம் அப்படி தான். நீ மட்டும் போயிட்டு வேலையை முடிச்சிட்டு வா"

"நீ ஏன் ஜான் வீட்டுக்கு வர தயங்குற?"

"முன்னால லொகேஷன் பார்க்க போனப்ப இனி உன் வீடு பக்கமே எட்டி பார்க்க மாட்டேன்னு அவன் மூஞ்சில அடிச்சது போல சொல்லிட்டு வந்தேன்"

வசந்த் சிரித்தான்.

"சிரிக்காத. இப்போ மட்டும் நான் அங்க வந்தா என்னை கேலி பண்ணி சிரிப்பான். எனக்கு சுத்தமா பிடிக்காது"

"நான் பாத்துக்குறேன் ஜெஸ்ஸி"

"நீ ஒண்ணும் கிழிக்க தேவையில்லை. நான் கிளம்புறேன்" என காரைவிட்டு இறங்க முற்பட்டாள் ஜெஸிகா.

"ஜெஸ்ஸி நான் சொல்லுறத கேளு"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.