(Reading time: 19 - 37 minutes)

என்னதான் அவருக்கு சமாதானம் கூறி அனுப்பினாலும் தேவிகாவே உள்ளுக்குள் பயந்துதான் போனாள்..சாமிக்கு இதுவரை இதுபோன்று தோன்றியதில்லை என்னவாக இருக்கும் எதுவாயிருந்தாலும் சரி கடவுளே நீதான் துணையிருந்து காப்பாற்ற வேண்டும் என்று மனமாற வேண்டினாள்..

டுத்து வந்த மூன்று தினங்களுமே நரகமாயிருந்தது தேவிகாவிற்கு..சாமி பேசுவதையே விட்டுவிட்டார் கோவிலிலேயே அதிக நேரத்தை செலவிட்டார்..அவளும் எப்படி எப்படியோ சமாதானம் கூறியும் அவர் மனம் எதையும் ஏற்றுக் கொள்வதாயில்லை..சரி அவரே புரிந்து கொள்வார் என அவளும் விட்டுவிட தனிமை கொடுமையாய் இருந்தது..மனம் வெகுவாய் கார்த்திகேயனைத் தேடியது…ஒரு வழியாய் நாளை அவன் வந்து விடுவான் அவன் கூறினாலாவது சாமி மனம் தேறுவார் என்று நம்பினாள்..தன்னவனின் வருகையை எண்ணியே அன்றைய இரவு தூக்கமின்றி கரைய மறுநாள் அதிகாலையிலேயே எழுந்து தயாராகி கோவிலுக்குச் சென்று வந்து சாமிக்கு காலை உணைவு தயார் செய்து கொடுத்துவிட்டு கார்த்திகேயனை பார்க்கத் தயாரானாள்..

சாமி அவுக இன்னைக்கு ஊர்ல இருந்து வராக நா போய் பாத்துட்டு விரசா வந்துரேன் சரியா??

கண்களை ஓரிடத்திலேயே நிறுத்தியிருந்தவர் அவளை ஏறிட்டும் பாராமல் சரிம்மா பாத்து பத்திரமா போய்ட்டு வந்துரு என்றதோடு நிறுத்திக் கொண்டார்..

தங்களின் வழக்கமான சந்திக்கும் இடமான ஆற்றங்கரையில் கீழ் படிகளில் இறங்கி அமர்ந்திருந்தாள்..கார்த்திகேயன் தன்னை பார்க்கும் போது எப்படி உணர்வான் என்பதை எண்ணி எண்ணி நிமிடங்களை கடத்தினாள்..சற்று நேரத்தில் அருகே காலடி சத்தம் கேட்க மனம் கொள்ளா மகிழ்ச்சியோடு வந்துட்டீகளா என சந்தோஷமாய் திரும்பியவளுக்கு கண்ட காட்சியில் ஒரு நொடி இதயம் நின்றேவிட்டிருந்தது..அருணாச்சலம் கண்ணில் கொலைவெறியோடு அவளை வெறித்துக் கொண்டிருந்தான்..பதறிப் போனவளாய் அங்கிருந்து அவள் நகரப் போக வழிமறித்து அருகில் நின்றான்..

எங்கடீ ஓடுற???செயில்ல இருந்து வந்ததும் வராததுமா உன்னத் தேடிதான் ஓடி வந்துருக்கேன் நீ எங்க போற என அவள் கைப்பற்ற வர அவசரமாய் பின் நகர்ந்தவள் கால் இடறி தடுமாறி விழ அருகிலிருந்த பெரிய கல்லில் தலைமுட்டி ரத்தம் வர ஆரம்பித்தது..

என்ன ஒண்ணும் பண்ணிடாத யாராவது பாத்தாக உன்ன கொல்லாம விடமாட்டாங்க என வலியோடு அவள் அரற்ற,

யாரு பாக்கபோறா யாரும் வரமாட்டாகநு தான நீயே அந்த கார்த்திகேயன இங்க வந்து பாக்குற..எவ்வளவு திமிர் இருந்தா என்னையே போலீஸ்ல பிடிச்சு குடுத்துருப்பான் அவன் இதுல நீ எனக்கு எதிரா சாட்சி சொல்ற???இம்புட்டு தைரியத்த யார் குடுத்தது உனக்கு ம்ம்ம் என கர்ஜித்தான்..எல்லா அந்த கார்த்திகேயன் தான் தெரியும்..செயில்ல இருந்து வந்தவுடனே அவன போட்டுதள்ளனும்ங்கிற வெறியோடதான் வந்தேன்..ஆனா அவனுக்கு முன்னாடி நீ வந்து சிக்கிட்ட இப்போ யோசிச்சா இதுகூட நல்லதுக்குதான் அவன கொன்னா உடனே செத்துருவான் அது எனக்கு வேண்டாம் நா செயிலுக்கு போகும்போது பட்ட வலியும் வேதனையும் அவனுக்கு புரியனும் அதுக்கு நீ சாகனும்..என்றவன் அவள் கழுத்தை இறுக்கிப் பிடித்தான்..நா ஊருக்குள்ள வந்ததே யாருக்கும் இன்னும் தெரியாது அதனால நீ செத்தாகூட அதுக்கு நா தான் காரணம்னு யாரும் சொல்லப் போறதில்ல என்றவனின் பிடி இன்னும் இறுக,இங்கு சஹானாவோ தன் கைகளை கழுத்தில் வைத்தவாறு மூச்சடைத்தபடி திணற கார்த்திக் பதறி அவளை பிடிக்கப் போக காயத்ரி வேகாமாய் அவனைத் தடுத்துவிட்டு சாஹானாவை சமாதானப்படுத்தும் வேலையில் இறங்கினாள்..கார்த்திக்கிற்கோ கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டேயிருக்க சட்டென உள்ளே வந்த ஷரவன் அவனை தாங்கிக் கொண்டான்..அவனுக்குமே கண்கள் கலங்கியிருக்க ஒரு வழியாய் அண்ணனை சமாதானப்படுத்தி அமர வைத்தான்..

அதற்குள் அங்கு கார்த்திகேயன் தேவிகாவை பார்ப்பதற்காக அவள் வீட்டிற்குச் செல்ல அவனைக் கண்ட சாமியோ பதறியவறாய் மாப்ள தேவிய எங்க உங்கள பாக்க போறேன்னு தான சொல்லுட்டு போனாஇப்போ நீச்க மட்டும் வரீங்க??

என்ன சொல்றீங்க நான் ஊர்லயிருந்து வந்து இங்கதான் நேரா வரேன் எப்போ போனா அவ???

அய்யோ அவ போய் ஒரு மணி நேரம் இருக்குமே கடவுளே சிவ சிவா இதென்ன சோதானை கடவுளே என் பொண்ணு?????

பதட்டபடாதீங்க அவ ஆத்தங்கரைக்குத் தான் போய்ருப்பா வாங்க போலாம் என்று இருவரும் கிளம்பினர்..அங்கு தேவிகா அவனிடம் போராடி தன் முழு பலம் கொண்டு அவனை தள்ளிவிட்டு நகர முற்பட்ட அவனோ அவளின் முடியை கொத்தாய் பிடித்திருந்தான்..கழுத என்னையே தள்ளி விடுறியா என்றவன் வெறியின் உச்சத்தில் அவளை முன்னோக்கித் தள்ள அங்கிருந்த பாறையில் மறுடியும் பலமாய் இடித்து அதிகமாய் ரத்தம் வெளியேற தொடங்கியிருந்தது..அருகிலிருந்த மண்ணை கையில் எடுத்திருந்தவள் மறுபடியும் அவன் அவளை பற்றுவதற்குள் அவன் கண்களில் மண்ணை எறிந்தாள்..தட்டுதடுமாறி படிக்கரையைத் தாண்டி மேலே வர தண்டவாளத்தின் அருகில் வரும் போது மறுபுறத்தில் கார்த்திகேயனையும் சாமியையும் பார்த்துவிட்டாள்..மாமா என்றவள் அடுத்த அடி வைப்பதற்குள் மின்னலாய் அவளை கடந்தது ரயில்வண்டி..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.