(Reading time: 16 - 32 minutes)

"ஆ...!"-என்று அலறியப்படி கீழே விழுந்தவரை பதற்றமாக தாங்க முயன்றனர் அவரது தந்தையும்,தமக்கையும்!!

"எதுக்காக என் பொண்ணை சித்திரவதை பண்ற?இதுக்கு பேசாம அவளை கொன்னுடு!"-கதறினார் அவர்.

"இப்போ அதான் நான் செய்ய போறேன்!ஏ..வெளியே போடி!"-என்று காயத்ரியின் கேசத்தைப் பற்றி இழுத்து வெளியே தள்ள,அலறியப்படி நிலம் விழ சென்றவரை தாங்கியது ஒரு கரம்!!

அதிர்ச்சியோடு நிமிர்ந்தவரின் விழிகள் அதே அதிர்ச்சியில் மேலும் விரிந்தன.விழிகள் இரண்டும் கனல் கக்க,ரகுராமை பார்வையால் எரித்து சாம்பலாக்கும்படி பார்த்துக் கொண்டிருந்தாள் மாயா.

"மா..மாயா!"-தாயின் குரலில் சினம் தணிந்தவள்,அவரை நிமிர்த்தினாள்.

"உள்ளே போங்க!"

".........."

"போங்க!"-காயத்ரி கேள்வியாக ரகுராமை பார்க்க,

"ஏ...!"-என்று குரல் எழுப்பினார் அவர்.மாயா தன் இதழ் மீது சுட்டுவிரல் வைத்து அவரை மௌனிக்கும்படி சைகை செய்தாள் ஆக்ரோஷத்துடன்!!தன் தாயின் கரத்தைப் பற்றியவள் அவரை உள்ளே அழைத்துச் சென்றாள்.பல வருடங்களுக்கு முன் அவள் தந்தை பற்றிய பிடியில் இருந்த அதே பாதுகாப்பை காயத்ரியால் உணர முடிந்தது!!முதல்முறையாய் நிகழ்ந்த விஜயத்தில் கூடி இருந்தோர் ஆடிப்போயினர்.

நேராக வந்தவள் பெருமூச்சோடு அங்கிருந்த சோபாவில் அமர்ந்தாள்.

"ஏ...எவ்வளவு தைரியம் உனக்கு?என் வீட்டுக்கே வந்திருக்கே!"

"நான் என்னிக்கு உன்னை பார்த்து பயந்தேன்னு நினைக்கிற ரகுராம்?"-ஏளனமாய் கேட்டாள் அவள்.

"எதுக்கு உங்க அம்மாவை என்கிட்ட இருந்து காப்பாற்றி கூட்டிட்டு போக வந்தியா?அது நடக்காதுடி!"-மாயா சில நொடிகள் சோபாவில் சாய்ந்தப்படி அவரது முகத்தை உற்றுப் பார்த்தாள்.

"நான் விரும்புற ஒருத்தர் மேலே யார் ஒருத்தர் சமமா உரிமை எடுத்தாலும் அதைப்பற்றி நான் கவலைப்பட மாட்டேன்.அதுவே,நான் வெறுக்கிற ஒருத்தரை என்னை தவிர வேற யார் சித்ரவதை பண்ணாலும் பொறுமையா இருக்க மாட்டேன்!இவங்களை அழ வைக்கணும்னா அதை இந்த மாயா மட்டும் தான் செய்யணும்!"-என்றாள் காயத்ரியை சுட்டியப்படி!

"எவ்வளவு தைரியம்?என் வீட்டுக்கே வந்து என்னையே எதிர்த்துப் பேசுற?"-கொந்தளித்தார் ரகுராம்.

"ப்ச்..."-அவளது பார்வை தன் பாட்டனாரிடம் தஞ்சம் அடைந்தது.

"ஐயா பெரியவரே!"-அவர் நிமிர்ந்துப் பார்த்தார்.

"இங்கே வாங்க!"-தயங்கியப்படி தன் மூத்தப் புதல்வியை பார்த்தவர்,மாயாவை நோக்கி முன்னேறினார்.

"இந்த வீடு யார் பெயரில் இருக்கு?"

".............."

"சொல்லுங்க!"-என்றாள் அங்கிருந்த ஒரு புத்தகத்தை புரட்டியப்படி!

"காயத்ரி பெயரில்!"

"காயத்ரி என் அப்பாவுக்கு என்ன வேணும்?"

"..........."

"என்ன?"

"ஆத்துக்காரி!"

"ம்??அப்படின்னா?"

"மனைவிம்மா!"-என்றார் காயத்ரியின் தமக்கை.

"ஓ..பெரியம்மாவா!வணக்கம்!"-என்றாள் புன்னகையுடன்!அவரும் புன்னகைத்தார்.

"நான் என் அப்பாவுக்கு என்ன வேணும்?"

"பொண்ணு!"

"அப்போ எனக்கு இங்கே உரிமை இருக்கா?இல்லையா?"

"இருக்கும்மா!"

"போதுமா ரகுராம்?"-அவர் பலமாக சிரித்தார்.

"அதான் ஒட்டும் இல்லை!உறவும் இல்லைன்னு ஆயிடுச்சே!"

"அப்படியா?"-என்றவள்,

"நிஷாந்த்!கொஞ்சம் வாப்பா தம்பி!"என்றாள்.அவனும் ஏதோ ஒரு பத்திரத்தோடு வந்து,அவளிடம் அதை நீட்டினான்.

"இது 25 வருடத்திற்கு முன்னாடி இவங்களுக்கும்,என் அப்பாவுக்கும் நடந்த கல்யாணத்துக்கு சாட்சியா எழுதப்பட்ட சான்றிதழ்!சட்டப்படி இரண்டுப் பேருக்கும் இன்னும் விவாகரத்து ஆகலை!"-என்று ஒரே போடாய் போட்டாள் மாயா.

"அதான் மகேந்திரன் உயிரோடவே இல்லையே!"

"மரியாதை குறைந்ததுன்னா,மாயா பொறுமையா பேசிட்டு இருக்க மாட்டா!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.