(Reading time: 15 - 30 minutes)

"பொறுமையா இரும்மா!விடலாம்!"-என்றவர் கைத்தட்ட,மறைவிலிருந்து வெளிப்பட்டான் ஆஜானுபாகுவான தோற்றம் கொண்ட ஒருவன்!!

"என்ன பார்க்கிற?இவனை உனக்கு தெரியாது!ஆனா,ருத்ராவுடைய கடந்த காலத்தோட இவனுக்கு முக்கியமான பங்கு இருக்கு!ருத்ராவுக்கு எல்லா உண்மையும் தெரிந்த பிறகு,அவனை எப்படி அழிக்கலாம்னு தேடி போனேன்!அப்போ தான் இவனைப் பற்றி உண்மை தெரிந்தது.மனோகர்....!"-அறிமுகம் செய்தார்.அவள் முகத்தில் எச்சலனமும் இல்லை.

"இவதான் அந்த மாயாவா?நல்லா செதுக்கின சிலை மாதிரி இருக்கா!"-வக்கிரமாக புன்னகைத்தான் அவன்.

"சரி...சாகப்போற நேரத்துல இன்னும் உண்மையை ஏன் மறைக்கணும்?காயத்ரி...மகேந்திரன் மரணத்துக்கு விதை எப்படி விழுந்ததுன்னு இன்னும் உனக்கு தெரியாதுல்ல!விதை நான் தான் போட்டேன்!"-என்றவர் ஆணவ சிரிப்போடு நிகழ்ந்த சூழ்ச்சியினை விவரித்தார்.அவர் கூறிய ஒவ்வொரு சொல்லும் காயத்ரியின் உயிரையே குடித்தன.பேச்சற்று திக்கற்று சிலையாய் நின்றிருந்தார் அவர்.

"இப்போ உன் பொண்ணு சாகுறதையும் நீயே பாரு...!"-என்றவர் சொடுக்கிட முன்னேறினர் சிலர்.மாயாவோ அசையாமல் அப்படியே நின்றிருந்தாள்.

"அக்கா!இங்கிருந்து போயிடுங்க!"

"அம்மா மாயா!போயிடும்மா!"-லட்சுமியும் குரல் கொடுத்தார்.அவள்அசையவே இல்லை.தனது காரின் கதவை திறந்து உள்ளிருந்து கைத்துப்பாக்கியை வெளி எடுத்தாள் மாயா.

வானம் மெல்லிய மின்னல் கீற்றினை முதல் அவகாசமாய் அவளுக்கு அளித்தது!!தாக்க வந்தவரை சிறிதும் இரக்கமின்றி எதிர்த்தாள் மாயா!ஒருவனது இதயத்தினை துளைத்து வெளியேறியது துப்பாக்கிக் குண்டு!மற்றவன் அவன் கொண்டு வந்த கத்தியினாலே குத்தப்பட்டான்.இன்னொருவன் தலையில் பலமாக ஏதோ இரும்பு பொருள் கொண்டு தாக்கினாள் மாயா.அதுநாள் வரை அவளது இந்த குரூர முகத்தைக் காணாத எவரும் சற்றே கதிகலங்கி போயினர்.இரு மேகங்கள் ஒன்றுக் கூடி பேரிடி முழக்கத்தினை பரிசளித்தன.பொறுமையிழந்த மனோகர் விரைந்து வந்து அவளது கழுத்தினைப் பற்றினான்.

"கேவலம் ஒரு பொண்ணுக்கு எவ்வளவு திமிர்!"-என்றவன் தன் பிடியை இறுக்கினான்.ஒரு கட்டத்திற்கு மேல் மாயாவால் சமாளிக்க இயலவில்லை.மூச்சு முட்டியது!!!

"உன்னை கொன்னு புதைக்கிறேன்!"-என்றவன் மேலும் இறுக்கினான்.ஒரு நொடி தன் விழிகளை அழுந்த மூடித் திறந்தாள் மாயா.திறக்கப்பட்ட விழிகளுக்குள் ரௌத்திரம் தலைவிரித்தாடியது!!தன் முழு பலத்தையும் பயன்படுத்தி,அவன் கழுத்தை இறுக்கினாள் அவள்.எடுத்த எடுப்பிலே இரக்கமின்றி அவள் இறுக்க,அவன் பிடி தளர்ந்தது.சட்டென அவன் கரத்தினை தட்டியவள்,அவனது நெஞ்சில் தன் காலால் உதைக்க,நிலை தடுமாறியவன் கீழே விழுந்தாள்.விழுந்த இடத்தில் இருந்த கூர்மையான பாறை ஒன்று அவன் வலது காலினை ஆழமாய் காயப்படுத்தியது.

"ஆ...!"-என்று அலறினான் அவன்.சற்றும் கோபம் தணியாதவள்,தன் பின்னால் அஷ்டபுஜ தரிசனம் தந்து நின்றிருந்த ஈசனின் ஒரு கரத்திலிருந்த வாளை மட்டும் உருவினாள்.(சிலையில் உள்ள ஆயுதங்கள் யாவும் உண்மையானவையே!)

"ருத்ராக் கூட வாழ ஆசைப்பட்ட வாழ்க்கையை இன்னொருத்தன் கூட பகிர விரும்பாத ஒரே காரணத்துக்காக அந்தப் பொண்ணு இன்னிக்கு நிரந்தரமா இந்த உலகத்தை விட்டுப் போயிட்டா!"-அர்ஜூனின் வார்த்தைகள் நினைவு வந்தன.

"கேவலம் பொண்ணா?பொண்ணுன்னா அவ்வளவு இளக்காராமா உனக்கு?இன்னிக்கு உனக்கு எமனா வந்திருக்கிறது அதே பொண்ணு தான்டா!ஏன்டா,மாயான்னா என்ன சாதாரணப் பொண்ணுன்னு நினைத்துட்டியா?ஒட்டுமொத்த சக்தியையும் எனக்குள்ள அடக்கினவடா நான்!நீ அன்னிக்கு செய்த பாவத்துக்கு பலன் இன்னிக்கு இந்த மாயா தரப் போறாடா உனக்கு!"

"வேணாம்!என்னை விட்டுவிடு!"-கெஞ்சினான் அவன்.

"நான் எந்தப் பாவத்துக்கும் இரக்கப்பட்டு மன்னிக்கிறவள் இல்லை!என் நீதி எல்லாம் மரணம் ஒண்ணு மட்டும் தான்!அன்னிக்கு ஒரு களங்கமில்லாத பொண்ணை கொன்றியே!அவ உயிருடன் இருந்திருந்தா,இன்னிக்கு பல வேதனைகள் எனக்கு வராம போயிருக்கும்!எல்லாத்துக்கு மூலக்காரணம் நீதானே!அன்னிக்கு கங்கா அனுபவித்த அதே  வேதனையை இன்னிக்கு இந்த மாயா உனக்கு தரப் போறா!"-என்றவள் அவனது இடக்கரத்தை இறுகப் பற்றி கரம் கொண்ட வாளால் ஆழமாக சிறு கோட்டினை கிழித்தாள்.

"என்னப் பார்க்கிற?நான் வர்மகலையையும் பழக்கப்பட்டவள்.உன் உயிரோட முக்கியமான நாடியை வெட்டி இருக்கேன்.அவ்வளவு சீக்கிரம் உன் உயிர் பிரியாது!24 நிமிடம் முழுசா 24 நிமிடம் நீ உயிரோட இருப்ப!உன் உடலிலிருந்து ரத்தம் நவ துவாரங்கள் வழியா வெளியேறும்!நரம்புகள் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்து நரக வேதனையை கொடுக்கும்!உச்சியிலிருந்து பாதம் வரை கதாயுதத்தில் தாக்கின வலியை உணர்வ!அனுபவி!!அன்னிக்கு கங்காப்பட்ட அதே வேதனையை நீயும் அனுபவி!நரம்பெல்லாம் அறுந்து நரக வேதனையை அனுபவித்து சாகணும் நீ!"-என்றவள்,அவனை காலால் இடறிவிட்டு முன்னேற திரும்பியவளின் வயிற்றில் ஆழமாக தைத்தது அக்கூர்மையான கத்தி!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.