(Reading time: 20 - 39 minutes)

05. அடையாளம்!!! - ப்ரீத்தி

Adaiyalam

வனுக்கு விடை கொடுத்துவிட்டு கிளம்ப திரும்பும் பொழுது தான் பார்த்தாள், யாரோ தூரத்தில் இருந்து பார்ப்பதுப் போல, யார் என்று கண்ணை சுருக்கி பார்த்தவள் அந்த அம்மாளும் அப்படிதான் பார்கிறார் என்று உணர்ந்தாள் நிஜமாகவே அது கீர்த்தி தானோ என்பது போல முகத்தோற்றம் உணர்த்தியது.. உடனே சுதாரித்தது கீர்த்திக்கு அது அந்த அபார்ட்மென்ட்டில் இருக்கும் ஆன்டி தான் என்று.. சட்டென வியர்த்தது அவளுக்கு எப்படி இவ்வளவு தூரம் தனியாக வந்தோம் என்று ஒரு படபடப்பு தோன்றிவிட வேகமாக திரும்பி நடக்க துவங்கினாள். அவள் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்தவர் அடையாளம் கண்டுக்கொண்டது அவளை தானா என்று நினைத்துக்கொண்டே தன் வீட்டை நோக்கி வர துவங்கினார்.

இதுவரை நடந்ததை எல்லாம் மேல் நின்று பார்த்துக்கொண்டிருந்தாள் தங்கை மித்ரா... மனதில் விரேன் மீது இருந்த சலனமோ, அல்லது அக்காவிற்கும் அவனுக்கும் காதல் ஏற்பட்டிருக்குமோ என்ற எண்ணத்திலோ வந்து பார்த்துக்கொண்டிருந்தாள். எதையோ எதிர்பார்த்து வந்தவளுக்கு கீர்த்தி நடுங்கி விலகி செல்வது சந்தேகமாக இருந்தது. யோசனையோடு வீட்டின் உள்ளே சென்றவள் கீர்த்தி வருவதை பார்த்துவிட்டு, “கீர்த்தி...”

“ம்ம்ம்ம்...” கொஞ்சம் திடிக்கிட்டு நின்று கேட்டவளை கவனிக்க மறக்கவில்லை சின்னவள்.

“நான் கேட்டா தப்பா நெனச்சுக்காத...”

ஒரு புருவ சுளிப்போடு... “சொல்லு...”

“உனக்கு எப்படி விரேன்ன தெரியும்.. முன்னாடிக்கூட நான் தானே உனக்கு காட்டினேன்.. எப்போ எப்படி திரும்பி பார்த்த??”

அவளது சிறுபிள்ளை கேள்வியில் லேசாக இறுக்கத்தை தளர்த்திக்கொண்டு.. “எப்படியோ பார்த்தேன்” என்று அன்றைய நினைவில் மீண்டும் முகம் சுருங்கிப் போனாள்.

“நீ... நீ அவர காதலிக்குரியா?”

அவ்வளவு நேரம் ஏதோ யோசனையில் இருந்தவள், மித்ராவின் கேள்வியில் சட்டென சிரித்துவிட்டு கண்களின் ஓரம் கசிந்த துளிகளை துடைத்துக்கொண்டாள். “காதலா... எனக்கா??? ஹய்யோ... ஹய்யோ...” என்று அந்த சிரிப்பிற்கு நடுவே துயரத்தை மறைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டாள். நகர்ந்த நிமிடம் இருந்தே இருவரின் மனமும் கல் எறிந்த குட்டையாய் குழம்பித்தான் போனது.

இனிமேல் அந்த வாழ்க்கை கிட்டபோவதில்லையே என்ற எண்ணத்தில் கீர்த்தியும், அந்த சிரிப்புக்கு பின் இருக்கும் மர்மம் என்ன என்ற எண்ணத்தில் மித்ராவும் இருந்தனர். மெல்ல தொலைபேசியை எடுத்து பார்த்துவிட்டு புதிய எண்ணில் இருந்து வந்திருந்த அழைப்பை விரேன் என்று பதிந்துக்கொண்டாள்.

கீர்த்தி வந்த நிமிடம் முதலே நல்ல உபசரிப்பு தான்.. ஆனால் எங்கே இருந்தாய் என்ன நடந்தது என்று வினவினால் உடனே சோர்ந்து போகும் மகளின் முகத்தை கண்டு தாயும் தங்கையும் பேச்சை மாற்றிக்கொண்டனர். தந்தைக்கோ அவள் மீண்டும் வந்ததே பெரிய வரமாக இருந்தது மேலும் இதை தாய் கேட்பது தான் சரியென்று தோன்றியது. உணவு பரிமாறும் போதும் அவள் தங்களிடம் வந்து சேர்ந்ததை உச்சி முகர்ந்து அனுபவித்த போதும் ஏனோ கீர்த்தியின் முகத்தில் இருந்த ஒரு மெல்லிய முறுவலோடு சேர்ந்து ஒரு சோகத்தின் சாயல் இருப்பதை கண்டுக்கொண்டார் அருணா.

அவள் அந்த கேள்வியிலேயே சோர்ந்து போகும் போது, அதுவும் உன்னித்து கவனித்தால் தெரியும் அவளின் உடலின் நடுக்கமும் படபடப்பும் மீண்டும் மீண்டும் கடந்து வந்ததை ஏனோ கேட்க தோன்றவில்லை. மகள் தன்னிடம் வந்து சேர்ந்ததே போதும் என்று இருந்தது அவருக்கு.

அனைவரும் சுற்றி இருக்க, நேரங்கள் கொஞ்சம் விரைந்து தான் சென்றது. ஏதோ சொல்ல துவங்கி பயந்து மறைத்து சுத்திக்கொண்டு இருந்தாள். சொல்லவும் முடியாமல் நிம்மதியும் இல்லாமல் இருந்தாள் கீர்த்தி. அதற்கு ஏற்றார் போல சுற்றி இருக்கும் வீடுகளுக்கும் கீர்த்தி வந்த செய்தி தெரிந்துவிட, சிலர் ஆர்வத்தில் அவளை காண வந்தனர். ஆனால் அவளுக்கு தான் ஏதோ உருத்திக்கொண்டே இருந்தது. அதுவும் சிலர் அவளை மேலும் கீழும் அளவெடுக்கும் பார்வையில் பார்ப்பது அடிமனதில் இருந்த புண்ணினை குத்தியது. போக போக வீட்டிலேயே வெளி வாசல் வருவதை கூட நிறுத்திக்கொண்டாள். என்னதான் உடம்பு சரியில்லை என்று காரணம் சொல்லிக்கொண்டாலும் பெற்றோருக்கும் தங்கைக்கும் அவளிடத்தில் வித்யாசம் புரியாமல் இல்லை. பின்பு அவர்களாகவே வந்து பார்போருக்கு பதில் கூறி அனுப்ப துவங்கிவிட்டனர்.

அவள் வெளியே இருக்க பிடிக்காமல் எப்போதும் போல அறையில் சென்று அவளது டைரியை திறந்து பார்த்துக்கொண்டிருந்தாள்.

“என்னவோ பெரிதாக நடந்திருக்குமோன்னு பயமா இருக்கு மித்ரா... அவளோட கண்களே ஏதோ சரியில்லை.”

அன்னை சொல்வதை மௌனமாய் கேட்டுக்கொண்டு இருந்தவளுக்கும் அதுதான் தோன்றியது. மூன்று நாள் தான் கடந்து இருந்தது.. ஆனால் நிறைய மாற்றங்கள், எப்போதும் இரவில் விரைவாகவே தூங்கி போகும் கீர்த்தி, பலமணி நேரமாக பலகணியில் நடைபயின்றுக்கொண்டு இருக்கிறாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.