(Reading time: 33 - 65 minutes)

தன் புறம் திரும்பிய வெங்கட்,”இதுதாண்டா நடந்தது..அதான் சடன் ப்ரேக் போட வேண்டியதா போச்சு” என்றவாறே காரை நகர்த்தினான். “அது சரி, நீ இவ்வளவு நேரமா எந்த லோகத்துலடா இருந்த...நானும் கார்ல ஏறுனதுல இருந்து பாக்கறேன்...ஒரே “மூடி”யாவே வந்துகிட்டு இருக்க..என்னடா ஆச்சு”

“ஒண்ணுமில்லடா..ஏதோ ஞாபகம்..ப்ச்..நத்திங் ”

அவனைத் திரும்பிப் பார்த்த வெங்கட், “என்னடா, ஏதோ ஞாபகமா? இல்ல... பழைய ஞாபகமா?

“ரெண்டும் தான் டா...பீச் ல நீ கேட்டப்ப அந்தக் கேள்விக்குப் பதில் நான் சொல்லல..அதப்பத்தியே யோசிச்சப்ப அப்படியே காலேஜ் டேஸ் தொடங்கி ஒரு ரவுண்டு வந்திட்டேன் டா..அவ்வளவு தான்..டேய் டேய்..என்னடா..ஹோட்டல் போகாம உன் வீட்டுக்கு வந்திருக்கற”

“சும்மா கத்தாம கீழ இறங்குடா..ஹோட்டல்ல போய் தூங்கதானே போற..அதை இங்க நம்ம வீட்டுல பண்ணு..அம்மா உன்னைப் பார்த்தா சந்தோஷப்படுவாங்கடா”

“இல்லடா..நான்...”

“வாடா உள்ள...நாம சந்திச்சு எவ்வளவு நாளாச்சு..மிச்சம் மீதி கதையைப் பேசலாம் டா..இனி எப்ப பேசப்போகிறோமோ தெரியல..வாடான்னா..”

“சரி டா சரி...சொல்லியிருந்தா ரூம் காலி பண்ணிட்டு வந்திருப்பேன்..அதாண்டா...வேற ஒண்ணுமில்லை.”

“ஓகே..வா உள்ளே போகலாம்.”

“அம்மா.. அம்மா..இங்க வா..யார் வந்திருக்கான்னு பாரு..டேய் நீ அம்மாட்ட பேசிக்கிட்டு இரு..இதோ வரேன்”

“வாப்பா மதனு...எப்படி இருக்க.”

“நல்லாருக்கேன் மா..நீங்க எப்படி இருக்கீங்க..”

“நல்லாருக்கேன்யா..வீட்டில் எல்லாரும் எப்படி இருக்காங்கப்பா..உன் சம்சாரம்,அப்பா அம்மா எல்லாரும் சுகமா இருக்காங்களாய்யா?

“எல்லாரும் நல்லாருக்காங்கம்மா...நீங்க ஊரு பக்கம் வந்து ரொம்ப நாளாயிடுச்சே...ஒரு தடவை வந்திட்டுப் போங்களேன் மா”

“வரணும்யா..ஆனா இவனுக்காகத்தான் பாக்க வேண்டியிருக்கு..சரிப்பா..கைய கால கழுவிட்டு வாங்க..சூடா தோசை போடறேன்..சாப்பிடலாம்”

வெங்கட் வர இருவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டார்கள். அதற்குள் வெங்கட்டிற்கு போன் வந்து உடனடியாக ஆபீஸ் வந்து ஒரு பிராஜக்ட் விஷயமாக மெயில் அனுப்ப வேண்டும் என்று கூற பயங்கர எரிச்சலோடு கிளம்பினான் வெங்கட்.

“இங்க பாரு மதன்...இந்த ஐ டி பீல்ட் ல வேலை பார்க்கறதும் ஒண்ணுதான்,,,நமக்கு நாமே சூனியம் வச்சுக்கறதும் ஒண்ணு தான் டா”

“ஏண்டா, இப்ப கண்டிப்பா போகணுமாடா?

“பின்ன, பேய்க்கு வாழ்க்கைப்பட்டா மரத்துல தொங்கதான டா வேணும்,,,இதோ போயிட்டு வரேண்டா..நீ அதுவரை ரெஸ்ட் எடுடா..வந்ததும் பேசுவோம்..சாரிடா மச்சான்”

“என்ன வெங்கட்..இதுக்குப்போய்...நீ போயிட்டு சீக்கிரமா வா..பாத்துப் போடா..நைட் நேரம்.”

ம்ம் சரிடா பாய் டா ..அம்மா போயிட்டு வரேன் என்று கிளம்பினான் வெங்கட்.

அம்மா , மதனிடம் வெங்கட்டின் அறையைக் காண்பித்து, நீ இங்கயே படுத்துக்கோப்பா..டம்ளர் ல பால் வைக்கிறேன்.படுக்கும்போது குடிச்சிட்டு படு என்னய்யா..நான் மாத்திரை போடறதால கொஞ்ச நேரத்துல கண்ணை” அசத்திடும். தம்பி சாவி வச்சிருப்பான்..அவன் கதவை திறந்துப்பான்,,சரியா”  என்று சொல்லிவிட்டு அவருடைய அறைக்குச்  சென்று விட்டார்.

உடை மாற்றிக்கொண்டு படுக்கையில் அமர்ந்த மதனுக்கு காரில் முட்டிய இடத்தில் தலை வலிக்கிறாற்போல் இருக்கவே, கையால் அழுத்தி விடத் தொடங்கினான்..அழுத்தத் தொடங்கியதுமே,இந்நேரம் ஊரிலிருந்தால் பஞ்சு போன்ற மெல்லிய கரங்கள் அடி பட்ட இடத்தில் அருமையாக ஒத்தடம் குடுக்கத் தொடங்கியிருக்கும் என்பதை நினைக்காமல் இருக்கமுடியவில்லை. அதுவும் அவன் முகம் பார்த்தே வலி உணர்ந்து மருந்திடுபவள் அவள்..இதை நினைத்த மாத்திரமே, அவன் ஞாபகம் அவனையும் மீறி மதுரையைச் சுற்றி வரத் தொடங்கியது.   

வள் தியா...மாயாவின் காதல் கை கூடா வேளையில், பெற்றோர்கள் முடிவு செய்து பார்க்கச் சென்ற முதல் பெண் அவள். மதனின் சகோதரி அஜிதா வேலை பார்க்கும் கல்லூரியில் படிக்கும் மாணவி.

அஜிதா, ஆங்கிலப் பேராசிரியை..எல்லா மாணவிகளுக்குமே மிக மிகப் பிடித்த ஆசிரியை அவர். தியாவிற்கும் அவரை ரொம்பவே பிடிக்கும்.

அவரின் மென்மையான பேச்சு,எளிமையாக இருந்தாலும் கண்ணியமான அவரின் தோற்றம், அழகான புன்னகை இதெல்லாம் தான் மாணவர்களை அவர்பால் ஈர்க்கக் காரணங்கள்.

அவருக்குக் குழந்தை பிறந்திருந்த வேளை..தியா தன் வீட்டில் அடம்பிடித்து அஜிதா மிஸ்சைப் பார்க்க வந்திருந்தாள். ஏனெனில் தியாவின் வீட்டில் கட்டுப்பாடுகள் அதிகம்..அனாவசியமாக வெளியில் அலைவதோ தோழிகளோடு ஊர் சுற்றுவதோ அனுமதிக்கப் படாத ஒன்று. எனவே தான், அம்மாவை அழைத்துக்கொண்டு அஜிதாவைப் பார்க்க வந்திருந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.