(Reading time: 26 - 52 minutes)

வினிதாவை பார்த்து நன்றாக முறைத்தாள் அமுதா.

“உனக்கு மட்டும் வாய் இல்லன்னா நாய் வந்து உன்னை தூக்கிட்டு போயிடும்”

“அக்கா நான் என்ன அவ்வளவு குட்டியாகவா இருக்கேன், நாய் தூக்கிட்டு போகிற அளவுக்கு?” என பற்களை கடித்தபடி செல்ல கோபத்துடன் கேட்டாள் வினிதா.

அமுதா அவளின் கேள்விக்கு பதில் சொல்லமால் “அம்மா தாயே, இது காயுற வரைக்கும் வாயில் ஜிப் போட்டுகிட்டு இரு.. நான் கிளம்பறேன்” என சொல்லி சென்று விட்டாள்.

எவ்வளவு நேரம் இப்படி அமர்ந்து இருப்பது? என்று எண்ணியவள் அதன்பின், அவளின் அறையை சுத்தம் செய்தவள் எதிர்ச்சையாக முகம் பார்க்கும் கண்ணாடியில் அவளின் முகத்தை பார்க்கையில் அவளுக்கு அந்த பேயின் முகமே தெரிந்தது!

திடுக்கிட்டவளின் கால்கள் அவளையும் அறியாமல் பின்னால் நகர்ந்தது. அப்படியே தடுமாறி கட்டிலில் சரிந்தாள் வினிதா. மீண்டும் முன்பு போல கட்டிலில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.

பயத்துடன் கட்டிலில் அமர்ந்தவளுக்கு அந்த பேய் அவளிடம் சொன்னது நினைவில் வந்தது!

அந்த முண்டத்தின் இரு கைகளும் அந்த பேயின் தலை மீது இருக்க, அது அந்த தலையை  தூக்கி தன் கழுத்தில் பொருத்தி கொண்டது.

இப்போது அதன் தலை உடலில் இருக்க, அது அவளை பார்த்து சிரித்தது!!!

வினிதா அவளின் பயத்தை மறைப்பதற்காக அதை பார்த்து முறைக்க முயற்சித்தாள்.

“ஹா ஹா ஹா” அதன் சிரிப்பு சத்தம் வினிதாவிற்கு மேலும் பயத்தை கூட்டியது.

“சிரிக்காத… நீ சொல்வது போல் எதுவும் நடக்காது. உன்னால் என்னை ஒன்னும் செய்யவும் முடியாது.” கோவமாக அவள் கத்தினாள்.

“நான் ஒன்னும் பண்ணமாலே சுந்தரம் தாத்தா இறந்தது போல உன்னையும் என்னால் ஒன்னும் பண்ண முடியாதுன்னு நினைக்கிறியா?” நக்கலுடன் ஒலித்தது அந்த பேயின் குரல். அது சொன்னதை கேட்டு அதிர்ந்து போய் பார்த்தாள் வினிதா.

“என்… என்.. என்ன? ஏன்... நீ... நீ... அவர்... அவரை? நீ.. நீ பொய் சொல்லுற” அதிர்ச்சியில் அவளுக்கு வார்த்தைகள் தடுமாறின.

“என்னை நினைத்து எனக்காக அழுத சுந்தரம் தாத்தாவே இப்போது உயிரோட இல்லை. உன்னையா என்னால் ஒன்னும் பண்ண முடியாதுன்னு நினைக்கிற..?”

“சுந்தரம் தாத்தாவை கொன்றது நீ தானா? ஏன்?”

அந்த பேய் பதில் சொல்லாமல் அவளை பார்த்து சிரித்தது. அது வினிதாவின் முகத்தையே உற்று பார்க்க, வினிதாவின் உடல் பயத்தில் சில்லிட்டது.

“நான் இல்ல..” அந்த பேயின் குரலில் தொனித்த வெறியையும் அதன் கண்களின் இருந்த கொலை வெறியையும் பார்க்கையில் வினிதாவிற்கு குளிர் காய்ச்சல் வந்து விடும் போல இருந்தது.

“இல்ல நீ பொய் சொல்லுற.. நான் நம்ப மாட்டேன்” வினிதா சொல்லும் போதே அந்த பேய் மறைந்து போனது.

நடந்ததை நினைத்து பார்த்த, வினிதாவின் சிந்தனையை கலைப்பது போல் ரூபன் அவளுக்கு அழைக்க, ஃபோனை எடுத்தவளுக்கு உலகத்தில் உள்ள எல்லாம் மொழிகளிலும் திட்டு விழுந்தது.

இறுதியாக,  இந்த வீட்டில் அப்படி என்ன தான் நடக்கிறது என தெரிந்துக் கொள்ள ஆர்வம் மட்டுமே இருக்கிறது எனவும், அதனால் தான் மகேனை அழைத்தாகவும், மேலும் அவளுக்கு அமானுஷ்யத்தில் நம்பிக்கையேயில்லை  என்றவள் சொன்ன பிறகே அவன் சமாதானம் ஆனான்.

அதன் பின்னர், மகேனிடம் இருந்து ஏதும் தகவல் கிடைத்தால், அவளிடம் தெரிவிப்பதாக சொல்லி அழைப்பேசியை வைத்தான் ரூபன்.

அடி வாங்கிய கன்னத்துடன் வீட்டுக்கு போனால், வீட்டிலுள்ளவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவளால் பதில் சொல்ல முடியாது என்பதினால், அவளுக்கு அலுவகத்தில் அவசர வேலை இருப்பதால் மூன்று நாட்கள் கழித்து வருவதாக சொல்லி விட்டாள் வினிதா.

அவள் சொன்ன அந்த மூன்று நாட்களுக்கு பின்  வந்த நாட்களில் வினிதாவிற்கே அவள் யார் என்பதை தெரியாமல் போகும் என்பதை அவள் அறிவாளா?

முதல் மூன்று நாட்கள்

கடந்த இரண்டு நாட்களாக சித்ராவும் அனிதாவும் வினிதாவை கண்காணித்தனர். அவர்களுக்கு அவளிடம் நிறைய மாற்றங்கள் தெரிந்தது. தனிமையில் அவள் மட்டும் தனியாக யாருடனோ பேசுவாள். சத்தம் கேட்டு அவர்கள் பல முறை எட்டிப் பார்க்க அங்கு யாரும் இல்லாமல் வினிதா மட்டும் தனியாக இருப்பாள்.

ஒருமுறை இரவில் வினிதா எதிர் அறையில் இருந்து வெளியே வருவதை பார்த்த சித்ரா அதை பற்றி அவளிடம் கேட்க பூட்டி இருந்த அறைக்குள் தான் எப்படி செல்ல முடியும்ன்னு எதிர் கேள்வி கேட்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.