(Reading time: 30 - 60 minutes)

14. என் சிப்பிக்குள் நீ முத்து - தமிழ் தென்றல்

En sippikkul nee muthu

ஜெய்யிடம் கம்மலை முன்தினம் கொடுத்து விட்டு வந்திருந்தவள், ஒருவித எதிர்பார்ப்போடு காலேஜுக்கு கிளம்பி கொண்டிருந்தாள்.

ஒற்றை கம்மலை வைத்து அவன் என்ன செய்திட முடியும்? என்ற சோர்வு தோன்றவும், மறுகணமே

இல்லை! அவன் செய்யாவிடினும், நான் ஏதாவது செய்ய வேண்டும்!

அப்பா கொடுத்த ஆசை பொக்கிஷம் பெட்டியில் அடைந்து போகக்கூடாது!

தான் கொஞ்சம் கவனமாக இருந்திருந்தால், கம்மல் தொலைந்திருக்காதோ?

அப்படியும் சொல்லிட முடியாது! போட்டிக்கான காஸ்ட்யூம் போட வேண்டி இருந்த போது கம்மலை அவிழ்த்து பத்திரபடுத்திவிட்டு தான் சென்றிருந்தாள்.  ஆனாலும் அதில் ஒன்று எப்படி தொலைந்தது என்று மட்டும் இன்னும் புரியவில்லை.  யாராவது எடுத்திருப்பார்கள் என்பதற்கும் வாய்ப்பு மிகக் குறைவு.  அவர்கள் குழுவைத் தவிர யாரும் அங்கு செல்ல வாய்ப்பில்லை.  அதே சமயம் அவர்கள் குழிவில் யாரேனும் எடுத்திருக்கக் கூடும் என்றும் நினைக்க முடியாதபடி அவர்களின் பழக்க வழக்கங்களும், அவர்களின் மீதான இவளின் நம்பிக்கையும்.

ஒரு பெருமூச்சு எழுந்தது சரயூவிடம்.

சாப்பிட்டு கொண்டிருந்த தங்கை, தீடரென பெருமூச்சு விடுவதும், வழக்கமான இவர்களிடையே வரும் சின்ன சின்ன சண்டைகள் எதுவுமின்றி, நேற்றிலிருந்து அவள் முகம் வாடி கிடந்ததையும் கவனித்திருந்த ராகுல்,

“சரயூ, என்னாச்சு? ஏன் ஒரு மாதிரியிருக்க?”

சாப்பிட்டு கொண்டிருந்தவள் நிமிர்ந்து எதிரிலிருந்தவனை பார்த்து, தலையை இட வலமாக ஆட்டிவிட்டு மறுபடியும் சாப்பாட்டில் கவனத்தை செலுத்தினாள்.

எப்போதும் துரு துருவென சுற்றுவதும், ஓயாமல் எதையாவது பேசுவதும், அவனை வம்பிழுக்காமல் காலை உணவை சாப்பிடாதவளும், இன்று அவனிடம் பேசாமல் அமைதியாக இருப்பது ராகுலுக்கு பெரும் வியப்பையளித்தது. 

ஒரு வேளை அப்படியும் இருக்குமோ? ஏதாவது பிரச்சனையில் மாட்டியிருப்பாளோ? என்று நினைக்கும் முன்னரே நெஞ்சு பதறுகிறது அந்த அன்பு அண்ணனுக்கு.

சாப்பாட்டை அப்படியே விட்டு எழுந்தவன், தங்கையின் அருகில் வந்தமர்ந்தான்.  தன் இடது கையால் அவள் தலையை தடவியவனை திரும்பிப் பார்த்தாள் சரயூ. 

“என்னாச்சுடா சரயூ?”

அந்த கேள்வியிருந்த பரிவும், அவன் மறைக்க நினைத்தும் வெளி வந்திருந்த பதற்றத்தையும் கண்டவள், மறைக்காது நடந்த எல்லாவற்றையும் சொல்லி முடித்தாள்.

“ராகுல்! இது அப்பாக்கு தெரியவேணா.  இல்லைனா அப்பாவும் வருத்த படுவார்.  அதுவுமில்லாம, சஞ்சு ஏதோ செய்றனு அதை வாங்கிட்டு போயிருக்கான்”

வருத்தமாக பேசியிருந்தவள், கடைசி வரியை மிகவும் நம்பிக்கையாக சொன்னதை ராகுல் குறித்து கொண்டான்.

“அதுதா சஞ்சய் அதை சரி செய்வானு நம்புற இல்லை.  அப்புறம் எதுக்கு இந்த கவலை சரயூ.  அப்படியே அவன் ஏதும் செய்ய முடியலைனு வந்து சொன்னாலும் சரி, அதுக்கு நான் ஒரு சொல்யூஷன் ரெடி பண்ணித் தரேன்”

“தாங்க் யூ ராகுல்!” என்றபடி அவனின் தோளில் சாய்ந்து கொண்டாள்.

ரவிகுமாரை காலை உணவுக்காக அழைத்து வந்த, சாரதா தன் பிள்ளைகளின் பாசத்தையும் ஒற்றுமையும் கண்டு நெகிழ்ந்து அருகிலிருந்த கணவனை ஏறிட்டார். 

ரவிகுமாரும் அவர்களை கண்டு பெருமிதம் கொண்டார்.

“எப்பவும் சந்தை கடை மாதிரி இருக்கும் நம்ம வீட்டு சாப்பாட்டு மேசைல, இன்னைக்கு, அகிம்சை பாராட்டி வெள்ளை கொடி நாட்டிருக்காங்களே! என்ன நடக்குது இங்க?” என்று பிள்ளைகளை வம்பிழுத்தார் சாரதா.

பெற்றவர்களை கவனித்த, சரயூ அவசரமாக ராகுலிடம் ‘அப்பாக்கு தெரிய வேணா’ என்ற செய்தியைக் கண்களால் அனுப்பினாள்.  அவனும் அதற்கு தலையசைத்தான்.

“என்ன? ஒரு பதிலையும் காணோம்?”

“மைத்ரீயோட அண்ணாக்கு கல்யாணமாச்சே.. அப்போ அவளோட அண்ணா அவள் கேட்டதெல்லாம் வாங்கி தந்தாங்களாம்.  ராகுலும், அவன் கல்யாணத்துக்க, நான் கேட்டதெல்லாம் வாங்கி தரேன்னு ப்ராமிஸ் பண்ணியிருக்கான்”

அவனிடம் திரும்பி, ‘எப்படி? இப்ப என்ன செய்ய போற?’ கண்களால் கேள்வி கேட்டு, முகமெங்கும் நிரம்பியிருந்த குறும்புடன் நகைத்தாள்.

மைத்ரீயினால் காதல் உலகத்தில், கொஞ்சம் கொஞ்சமாக தன்னை தொலைத்து கொண்டிருந்தவனின் நிலை அறியாத சரயூ, மைத்ரீயைப் பற்றி சொன்னதோடல்லாமல் இவனின் திருமணத்தைப் பற்றியும் சொன்னதில், கற்பனைக் குதிரையில் வேகமாக சஞ்சரித்தான் ராகுல்.

திடீரென பிரகாசம் கூடிய முகமும், அமைதியான புன்முறுவலுமாக,

“ஆஃபிஸ் செட் அப்-ஓட கடைசி ஃபேஸ் போயிட்டிருக்கு.  கூடிய சீக்கிரம், நீ கேட்டதெல்லாம் கிடைக்கும் சரயூ!”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.