(Reading time: 30 - 60 minutes)

“மைத்ரீக்கு இன்னும் என்னோட மனசு தெரியாது! இப்போ சரயூக்கு விஷயம் தெரிஞ்சா, உடனே அவளுக்கும் தெரிஞ்சிடும்.  இன்னும் கொஞ்சம் நாள் போகட்டும்… என்னோட பிஸினெஸ் செட்டில் ஆகட்டும்.  அவளும் படிச்சிட்டிருக்கா… இதையெல்லாத்தயும் விட மைத்ரீக்கு என்னை பிடிக்கனும்”

“கண்டிப்பா பிடிக்கும்! என் மகனுக்கு என்ன குறை? என் மருமகளுக்கு உன்னை பிடிக்கும் கண்ணா!” என்று அவனுக்கு நம்பிக்கையூட்டினார் சாரதா.

“தாங்க் யூ மா!”

“அம்மா சொன்ன மாதிரி மைத்ரீக்கு உன்னை பிடிக்கும்னு நானும் நம்புற, ராகுல்.  ஆனா அந்த பொண்ணுக்கு வேற ஏதாவது எண்ணமிருந்தால், நீ விலகிக்கனும்.  என்ன, நான் சொல்றது புரியுதா?” கண்டிப்புடன் வந்தது ரவிகுமாரின் வார்த்தைகள்.

மகனுக்கு பிடித்த பெண்ணை மணமுடிக்க தயாராக இருந்த போதும், அந்த பெண்ணின் விருப்பத்தை பொறுத்து தான் அடுத்து எதுவும் செய்ய முடியும்.  வெவ்வேறு திசைகளில் பயணிக்கும் இரு இதயங்கள், திருமண பந்தத்தில் இணைந்தால் அது பூலோக நரகமாகும்.  வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நெருங்கி கொண்டிருந்த மகனுக்கு, ஒரு பொறுப்பான அப்பாவாக அறிவுரை கூறினார்.

“புரியுதுப்பா! உங்க வளர்ப்பு தப்பா போகாதுபா” என்று ராகுல் தந்தைக்கு உறுதியளித்தான். 

காலேஜுக்கு வந்து சேர்ந்த சரயூ, வண்டியை அதன் இடத்தில் நிறுத்தினாள்.

ஜெய் எப்போது வருவான்? கம்மலைப் பற்றி என்ன சொல்ல போகிறானோ? 

மனது யோசித்தாலும் கால்கள், தங்களின் அரட்டை சபை கூடும் இடத்தை நோக்கி நடந்தன.

வேதிக், ரூபினோடு உட்கார்ந்திருந்தான்.  

“ஹாய்!”

கைபேசியை குடைந்து கொண்டிருந்தவன், அவளின் குரலைக் கேட்டு சட்டென நிமிர்ந்து,

“ஹாய் சரயூ! சஞ்சய், உனக்கு ஃபோன் பண்ணானா? நான் ரொம்ப நேரமா ட்ரை பண்ணிட்டிருக்க, எடுக்கவே மாட்டிங்கிறான்” என்று அவசரமாக ஆரம்பித்த ரூபின் சலிப்பாக முடித்தான்.

“ம்ஹீம்.. இல்லை!” என்றாள் உதட்டை பிதுக்கியபடி.

இவளின் கைபேசியை பிடுங்கியவன், “இப்போ பாரு! எப்படி மாட்டுறான்னு” குறுநகையோடு ஜெய்யை அழைத்தான்.

‘நான் ஃபோன் பண்ணினா எடுக்கமாட்ட.. சரயூ கூப்பிட்டா, சும்மா இருக்க முடியுமா? சௌம்யாவை காரணம் காட்டி, என்னை எத்தனை முறை மிரட்டியிருக்க… இன்னைக்கு உன்னை ஒரு வழியாக்காம விடமாட்ட… ஃபோனை எடு மச்சா!’

சஞ்சயை மிரட்டும் திட்டத்தோடு ரூபின் காத்திருக்க, அழைப்போ ஏற்கபடாமல் முடிந்தது. 

நண்பன் தன்னுடைய அழைப்பை ஏற்காதபோது சிறு கோபம் கொண்டான் தான்.  ஆனால் அவன் சற்றும் எதிர்பாராதது இது.  அவன், சரயூவின் அழைப்பை ஏற்காதது பெரும் ஏமாற்றமாக இருந்தது. 

ஜெய், தன்னுடைய காதலை சரயூவிடம் வாய்த் திறந்து சொல்லாதபோதும், அவன் பார்வைகளிலும், அவளை அரவணைக்கும் சிறு சிறு செயல்களிலுமாக வெளிபடும் காதலில், வியப்புக்குள்ளாகியிருந்தான் ரூபின்.  காதலிக்கும் எத்தனையோ பேரை அதே கல்லூரியில் கண்டிருக்கிறான்.  ஏன்? அவனும் சௌம்யாவை காதலிக்கிறான் தான்.  ஆனால் காதலியின் உயிரை நனைக்கும் காதல்த்தீயை ஜெய்யிடம் மட்டுமே கண்டிருந்தான். 

சில சமயங்களில், தான் ஒரு பெண்ணாகப் பிறந்து, ஜெய்யின் காதலை பெற்றிருக்கக் கூடாதா என்றும் ரூபினுக்கு தோன்றியதுண்டு.  இதுவே ரூபினுக்கு, சரயூவின் மேல் பொறாமையும் கோபத்தையும் சேர்த்துத் தூண்டியது.  ஜெய்யின் காதலை பெற்றவளென்று பொறாமையும், அதை புரிந்து கொள்ளாமலிருக்கும் அவளின் மேல் கோபமும் போட்டி போட்டன.  அதே நேரம், தான் பெண்ணாக பிறக்கவில்லை என்று ஆசுவாசமாகவும் இருந்தது.  அவன் பெண்ணாகியிருந்தால் எதை வேண்டுமானாலும் செய்து ஜெய்யின் காதலை வென்றிருப்பான் தான்.  ஆனால் அதுவே தோழியான சரயூவை பாதித்திருக்குமே.  இப்போது அதற்கு வேலையில்லாமல் போனது ரூபினுக்கு நிம்மதியாகவே இருந்தது. 

கம்மல் விஷயத்தில் ஏதாவது செய்து, ஜெய், சரயூவை அசத்துவான் என்று மிகுந்த நம்பிக்கையுடனிருந்தவனுக்கு, இருப்பு கொள்ளாமல் தான் ஜெய்யை அழைப்பதும், மெஸ்ஸெஜ் அனுப்புவதுமாக இருந்தான்.  நண்பன் சரயூவின் அழைப்பையும் ஏற்கவில்லையென்பதை ஒப்புக்கொள்ள முடியவில்லை.

ஏதும் பேசாது கைபேசியை சரயூவிடம் திருப்பி கொடுத்தான்.

அவன் முகத்தை ஆராய்ந்தபடி, “என்னாச்சு ரூபின்? சஞ்சு ஃபோன் எடுக்கலையா?”

தலையை இடம் வலமாக ஆட்டியதோடு அமைதியாக நின்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.