(Reading time: 30 - 60 minutes)

ராகுல் திருமணத்தில் முழு சுதந்திரம் கொடுத்திருந்தாலும், மகன் எப்போது திருமணம் செய்து கொள்வான் என்பது சாரதாவின் இரண்டு வருட அமைதியான எதிர்பார்ப்பு.  ஆனால், சரயூவோ அடிக்கடி அவனின் திருமணத்தை பற்றி பேசி கொண்டிருப்பாள்.  அப்போதெல்லாம் சரியாக பிடி கொடுக்காதவனிடம் இன்றும் அதையே எதிர்நோக்கியிருக்க, அவனின் இந்த பதில் ஆனந்தத்தை அள்ளித் தெளித்ததங்கு.

விழியோரம் கசிந்த இரு துளி நீரோடு சாரதா கணவனைப் பார்க்க, அவரும் மனம் நிறைந்த புன்னகையை முகத்தில் பூசியிருந்தார்.

துள்ளி குதித்திருந்தாள் சரயூ.

திருமண பேச்சினால், குடும்பத்தாரிடம் சட்டென பெருகிய மகிழ்ச்சி, இவனின் அகம் மற்றும் முகத்தின் பிரகாசிப்பை இன்னும் கூட்டியது.

மகனின் முகத்தையே கூர்ந்திருந்த ரவிகுமாருக்கு புரிந்து போனது! மருமகள் தெரிவு செய்யும் வேலையில்லை என்பது.  யார் அந்த வீட்டு மருமகள் என்று தெரிந்து கொள்ளும் ஆவலிருந்த போதும் மகனே சொல்லட்டும் என்று அமைதி காத்தார்.

ரவிகுமாரின் பொறுமை மகளிடம் எப்போதுமே இருந்ததில்லை.

“அம்மா! உங்களுக்கு அண்ணியை தேடுற வேலைய, ராகுலே பெரிய மனசு பண்ணி எடுத்திருக்கான்” என்று சாரதாவிடம் சொன்னவள், ராகுலிடம், “அண்ணி யாரு? ஃபோட்டோ வச்சிருக்கியா? காட்டு.. பார்ப்போம்” என்றபடி அவனிடமிருந்து ஃபோனை பிடுங்கினாள்.

தங்கை, தன்னை கண்டு கொண்டதில் ‘எப்படி கண்டுபிடிச்சா? ஒரு வேளை நான் மைத்ரீயை பார்க்கும்போது கவனிச்சிருந்தா?!’ அதிர்ந்திருந்தவனின் ஃபோன் சரயூ கைக்கு சென்றிருந்தது.

“நோ சரயூ!” என்றபடி அவளிடமிருந்து ஃபோனை மீட்க முயன்றான்.

அதை எடுத்து கொண்டு ஓடிய தங்கையைப் பார்த்து சிரித்துவிட்டு

“ஃபோனை எப்படி அன்லாக் பண்ணுவ, சரயூ?” புருவங்களை உயர்த்தி குறும்புடன் கேட்டவனிடம், அடுத்த நொடி திரும்பி வந்திருந்தது ஃபோன். 

ராகுலின் வலது தோளில் ஒரு கையையும், அவனுடைய வலது கையை தன்னுடைய மற்றொடு கையால் பற்றியபடி, அந்த ஃபோனை அன்லாக் செய்ய சொல்லி நின்றிருந்தாள் சரயூ.

சாரதாவுக்குள்ளும் மருமகளை காண வேண்டும் என்று பரபரத்தது.  ராகுலை வம்பிழுக்கும் சரயூவை எப்போதும் கண்டிக்கும் அவர், இன்று அவளின் செய்லில் குறுக்கிடாமல் நின்றிருந்தார்.  கண்கள் மட்டும் ராகுலின் ஃபோனை வட்டமிட்டன.

ஃபோனை பிடித்திருந்த அவன் கரத்திலியே பார்வையை பதித்திருந்த சரயூ, அது இயக்க படாமல் இருக்கவும், ராகுலை நிமிர்ந்து பார்த்தாள்.  அவன் குறும்புடன் இவளை நோக்க.. இவளுக்கு புரிந்துவிட்டது! சிறிது நேரத்துக்கு முன் அவனின் திருமணத்தைப் பற்றி பேசி பெற்றோரிடம் மாட்டிவிட்டதற்காக இப்போது அந்த பெண்ணின் படத்தை பார்க்கவிடமாட்டான்.  வேறு விஷயமாக இருந்திருந்தால் இவளும் வீம்புடன் முறுக்கியிருப்பாள்.. ஆனால் இது? உடனே கெஞ்சலில் குதித்தாள்.

“ப்ளீஸ் ராகுல்! ஒரே ஒரு முறை பார்த்துக்குறேன்… ப்ளீஸ்”

சற்றும் குறையாத குறும்பு முகத்தோடு, தலையை இடம் வலமாக ஆட்டினான்.

சாம, பேத, தான, தண்ட முறைகளை கையாண்ட முருகனுக்கு நிலவு கிடைத்துவிட்டது.  அதே முறைகளை மேற்கொண்ட போதும் தன் வருங்கால அண்ணியின் புகைபடத்தை சரயூவால் காண முடியாமல் போனது.

“என்னை இப்படி படுத்தினதுக்கு, நீ அனுபவிப்ப ராகுல்.. அண்ணிட்ட உன்னை பற்றி போட்டு தரலை, நான் சரயூ இல்லை” என்று சபதமெடுத்தவள் காலேஜுக்கு நேரமாவதை உணர்ந்து கிளம்பிவிட்டாள்.

“ஏன் ராகுல் இப்படி பண்ண? சரயூக்கு அந்த ஃபோட்டவை காட்டியிருக்கலாமே.. பாரு! எப்படி வாடி போச்சு என் பொண்ணு முகம்” என்றார் ரவிகுமார் மனத்தாங்கலுடன்.

“காரணத்தோடதா ஃபோட்டவை காட்டல” சொன்னவன் பெற்றவர்களை நெருங்கி ஃபோனை அவர்களிடம் நீட்டினான்.

ஆசையாக அதை வாங்கி மைத்ரீயின் படத்தை பார்த்தவரின் முகத்தில் ஆச்சரியம் குடியேறியது.

இப்போது ரவிகுமார் படத்தை பார்த்து கொண்டிருந்தார்.

“ராகுல்! இந்த பொ…ண்ணு..” சில் நொடிகள் யோசித்து, ஞாபகம் வந்தவராக “அன்னைக்கு வீட்டுக்கு வந்தவதான?” என்று மலர்ந்த முகத்தோடு கேட்டார் சாரதா.

தன்னருகில் நின்று மகனிடம் கேள்வி கேட்ட மனைவியை நிமிர்ந்து பார்த்தார் ரவிகுமார்.

“இது எப்போ சாரதா? நீ எனக்கு சொல்லலையே” அன்றாட நடப்புகளை தன்னுடன் பகிரும் மனைவி இதை சொல்லாமல் விட்டிருப்பது மனதை குழப்பியது.

“அப்பா! அந்த பொண்ணு வீட்டுக்கு வந்த போது அவள் யாருனு அம்மாக்கு தெரியாது”

மகனிடமிருந்து வந்த பதிலில், இன்னும் குழம்பி போனார்.

“பேரு மைத்ரீ! எம்.பி.பி.எஸ் படிச்சிட்டிருக்கா.  சரயூவோட ஃப்ரெண்ட்” என்று வாய் சொல்லும் போதே கை வேகமாக ஃபோனை நோண்டி, சரயூ மற்றும் மைத்ரீ சேர்ந்து சிரித்துக் கொண்டிருந்த படத்தை தந்தையிடம் காண்பித்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.