(Reading time: 30 - 60 minutes)

‘சஞ்சு இந்நேரத்துக்கு வந்திருக்கனுமே.. ஏன் இன்னும் வரல? ஃபோன் கூட எடுக்க மாட்டிங்கிறா? ஒரு வேளை அவனுக்கு ஏதாவது ஆயிருக்குமோ?  ச்சே.. இருக்காது! சஞ்சு நல்லாயிருப்பான்.  நான் இப்படியெல்லாம் நினைக்க கூடாது.  ஆனா ஏன் இன்னும் வரல?! எங்கிட்ட சொன்ன மாதிரி அந்த கம்மலை எதுவும் செய்ய முடியாததால, இங்க வரலயோ?’ என்று யோசித்ததும் சரயூவின் மனமும் முகமும் வாடியது.

அவளின் முகமாற்றத்தை கவனித்த வேதிக், “ரிலாக்ஸ் சரயூ! சஞ்சய்கு நான் ஃபோன் பண்றேன்”

வேதிக் அழைப்பையும் ஜெய் ஏற்காமல் போகவும், “எனக்கு என்ன தோனுதுனா, அந்த கம்மலை எதுவும் செய்ய தெரியாமதா சஞ்சய் ஃபோன் எடுக்கமாட்டிங்கிறானோ?! எதுக்கு சொல்றேனா, நாம எல்லோரும் யோசிச்சு ஒன்னுமே செய்ய முடியாதுனுதானே நினைச்சோம்.  உன்னை சமாதானம் செய்யனும்னு ஏதோ ஒரு வேகத்துல நேத்து அதை வாங்கிட்டு போயிருப்பான்.  இப்போ, எப்படி நம்ம எல்லாரையும் ஃபேஸ் பண்றதுனு தெரியாம தயங்கிட்டிருக்கானோ?”

சரயூவின் முகம் மேலும் வாடிப்போனது.  அவள் கண்களில் சிறு நீரேற்றமும் கூட.

வேதிக்கின் பேச்சைக் கேட்டு கொதித்து கொண்டிருந்த ரூபினுக்கு சரயூவை கவனித்ததும் கோபம் தலைக்கேறியது.  ஆவேசமாக எதிரில் உட்கார்ந்திருந்த வேதிக்கை நெருங்கினான். 

“ஹாய் சஞ்சய்!” என்று யாரோ சொன்னதில் மூவரும் குரல் வந்த திசையை நோக்கினர்.

ஜெய், இவர்களிடமாக வந்துகொண்டிருந்தான். 

என்ன சொல்ல போகிறானோ? என்று பெண்ணின் மனம் படபடத்தது.

ஜெய்யை தாழ்த்திய வேதிக்கின் பேச்சை, ஜெய்யை கொண்டே சரி செய்துவிடும் முடிவோடு ரூபின், அவனை நோக்கி முன்னேறினான்.

“என்ன மச்சா? எத்தனை முறை ஃபோன் பண்றது? ஏன் எடுக்கலை? சரி விடு! அந்த கம்மல் எங்க?” கோபமும் அவசரமும் போட்டி போட கேள்விகளை அடுக்கிய ரூபினை விசித்திரமாகப் பார்த்தாலும் மற்ற இருவரை நோக்கி நடந்தபடி இருந்தான் ஜெய்.

அவன் பார்வையை அசட்டை செய்தவன் மறுபடியும் காரியமே கண்ணாக, “கம்மலை என்ன செய்த?”

“எதுக்குடா வந்ததும் வராததுமா, கேள்வி மேல கேள்வி கேட்டு படுத்துற? நானே டிராஃபிக்ல மாட்டி நொந்து போயி வந்திருக்க”

இவனுடைய அவசரம் புரியாமல் ஜெய் சொன்ன பதிலில், கொஞ்ச நஞ்சம் மீதமிருந்த பொறுமையை இழுந்து பிடித்து, “சரி மச்சா! இப்போ ஒரேயொரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு.. கம்மலை என்ன செய்த?”

பதில் சொல்லாது மற்ற இருவர் உட்கார்ந்திருந்த இடத்தில் உட்கார நினைத்தவனை வழிமறித்தான் ரூபின்.

கம்மலைப் பற்றி ரூபின் கேட்டதற்கு அவன் பதில் சொல்லாதது சரயூவினுள் பல யோசனைகளை விதைத்தது.  வேதிக் சொன்னது போல் இருக்குமோ? இல்லாவிட்டால் இந்நேரத்துக்கு அதை எடுத்து கொடுத்திருப்பான் அல்லது அதை என்ன செய்தானென்றாவது சொல்லியிருப்பான்.  மறுநொடி, டிராஃபிக்ல மாட்டினதால கம்மல் பற்றி சொல்ல மறந்திருப்பான்.  இல்லையே! ரூபினின்தான் அதை நினைவு படுத்தினானே!

தனக்குளிருந்த கேள்விகளோடும் குழப்பங்களோடும் அருகில் நின்றிருந்த ஜெய்யை ஏறிட்டாள் சரயூ.

தன்னை மறித்திருந்த ரூபினின் கையை இறக்கிவிட்டு நடக்க முயன்று கொண்டிருந்தான் ஜெய். 

அவன் காதோரம் பட்டு சிதறிய சூரிய ஒளியில் சரயூவின் உள்ளம் சிலிர்த்தது.   

சட்டென துள்ளி எழுந்தவள் ஜெய்யின் சட்டைக் காலரைப் பிடித்து இழுத்திருந்தாள்.  அனிச்சை செயலாக அவன் சற்று குனியவும், எம்பி தன் கைகளால் அவன் கழுத்தைச் சுற்றி வளைத்து, அவனை அணைத்திருந்தாள்.

சரயூவின் அதிரடியில் எல்லோருக்கும் அதிர்ச்சியே!

“தாங்க் யூ சஞ்சு! தாங்க் யூ! தாங்க் யூ ஸோ மச்!” மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியிருந்தவள், சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருப்பதை அறியவில்லை.

என்ன நடக்கிறதென்று புரியாமல் ரூபினும் வேதிக்கும் ஒருவரையொருவர் சைகையில் கேள்வி கேட்டுக் கொண்டனர்.

அப்போது தான் அங்கு வந்து கொண்டிருந்த சௌம்யா இவர்களை கண்டதும் மகிழ்ந்து போனவளாய் ஓடி வந்தாள்.

“சஞ்சய் ப்ரோபஸலை சரயூ அக்ஸெப்ட் பண்ணிட்டா போலிருக்கு!”

சௌம்யாவின் கேள்வி ரூபின் காதில் விழுந்ததாகவே தெரியவில்லை.  எந்த மாறுதலும் இல்லாமல் அவர்களைப் பார்த்தபடியே நின்றிருந்தான்.

“ரூபின்!” என்றபடி அவனை உலுக்கினாள்.

பழக்கமில்லாத மாலை தூக்கத்திலிருந்து எழுந்தவன் போல் அவன் நிற்க

“எதுக்குடா இப்படி மரம் மாதிரி நிக்கிற? இங்க என்ன நடக்குது? சஞ்சய் ப்ரோபஸலை சரயூ அக்ஸெப்ட் பண்ணிட்டா போலிருக்கு!”

“ம்ஹீம்… அது நடந்திருந்தாதா நல்லாயிருந்திருக்குமே! என்ன நடக்குதுன்னே தெரியலை” சலிப்பாக சொன்னவனின் பார்வை சௌம்யாவை மேலிருந்து கீழாக அளந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.