(Reading time: 30 - 60 minutes)

வார்த்தைகளில் மற்றவர்களுக்கு சொல்லிட முடியாத வலி மனதை ஆட்கொண்டது.  அதை விழிகளில் பிரதிபலிக்க அவளை பார்த்த பார்வையில் கொட்டி கிடந்தது ஏக்கமும்.  ‘ஏன் பெண்ணே?’ என்று உள்ளுக்குள் கேள்வி பிறந்தது.

அவள் காதலை மறுத்தது தன் ஆண்மைக்கு ஏற்பட்ட இழுக்காக தோன்றியது.  அப்போது தான் நினைவு வந்தவனாக ஜெய்யை கவனித்தான்.  சற்று முன் இவன் கொடுத்த ஏளனப் புன்னகை இப்போது அவனிடமிருந்து இவனுக்கு திரும்பி வந்தது.  இத்தனை பேர் முன்னிலையில் சொல்லப்பட்ட அவளின் மறுப்பினால் அவமானத்தில் மனம் குன்றியது. 

வலி, வேதனை, தோல்வி, அவமானமென அவனை வாட்டிய உணர்வுகளோடு இயலாமையும் சேர்ந்து கொள்ள அது கோபமாக வெடித்தது.

அவனைக் கடந்து செல்ல அடியெடுத்தவளின் கையை பிடித்து நிறுத்தினான்.

“கையை விடு கிரண்! என்னோட முடிவை சொல்லிட்டனே, இன்னும் என்ன?” என்று கோபமாக கேட்டுவிட்டு தன் கையை விடுவிக்க முயற்சித்தாள்.

அவனின் பிடி மிகவும் இறுக்கமாக இருக்கவும் அவளால் அதை செய்ய முடியாது அவனை முறைத்தாள்.

“என்னை லவ் பண்றன்னு சொல்லு, கையை விட்ற”

கிரணிடமிருந்து இப்படிபட்ட செயலையோ பிடிவாதத்தையோ எதிர்ப்பாராதவள் செய்வதறியாது தடுமாறினாள். 

இது என்ன முட்டாள் தனம்? அவன் என்னை காதலித்தால் நானும் அதை ஏற்றுகொண்டு அவனை காதலிக்க வேண்டுமா?

தன்னுடைய சகஜமான பழக்கத்தை காதலென்று நினைத்ததோடல்லாமல் தன்னை வற்புறுத்துவது கிரணின் கேவலமான செயலாகக் கண்டாள் சரயூ.

ஒரு பிரச்சனை என்றால் தந்தையை தேடும் சரயூவிற்கு அவரருகில் இல்லை என்று தோன்றிய நொடியே ஜெய்யின் நினைப்பு வந்தது.  

சட்டென கண்கள் அவனை தேடின!

கிரண், சரயூவின் கையை பிடித்தவுடன் கோபமாக முன்னேறிய ஜெய்யை தடுத்திருந்தான் ரூபின். 

“சரயூக்கு புரியனும் மச்சா! கொஞ்ச நேர பொறுமையா இரு.  இந்த ஒரு முறையாவது என் பேச்சை கேளு” என்று கெஞ்சினான் ரூபின்.

சற்று முன் நண்பன் தவித்த தவிப்பை பார்த்தவனால் இதற்கு மேலும் ஜெய்யின் காதலை புரிந்து கொள்ளாமாலிருந்து அவனை சரயூ வதைக்க கூடாதென எண்ணினான்.

ஆமா! அவளுக்கு புரியனும்.  அவளோட மனசுல நான் இருக்கறது அவளுக்கு புரியனுமென்று தனக்குள் சொல்லியபடி தன்னை கட்டுபடுத்தினான்.

அவனைத் தேடி அலைந்த அவளது விழிகள் அவனின் முகத்தில் நிலைத்தன.  அந்த விழிகள் சுமந்து வந்த செய்திக்கு வார்த்தைகள் தேவையிருக்கவில்லை.

ரூபினிடமிருந்து தன் கையை உருவி கொண்டவன் கிரணிடம் பாய்ந்தான்.  சரயூவை பிடித்திருந்த அவனது கையை பிடித்து இழுத்து தள்ளிவிட்டு தன் இடது கையால் அவளை தன்னோடு சேர்த்து பிடித்தான்.

திடீர் தாக்குதலில் தடுமாறிய கிரணை தாங்கியிருந்தான் கௌதம்.  நண்பன் சரயூவிடம் ஏதோ கோபமாக பேசுவது தெரிந்து அங்கு வந்திருந்தான் அவன்.

முதலிலிருந்து, ஜெய்யின் மேலிருந்த கோபமும்; இத்தனை பேர் மத்தியில் ஜூனியரான அவன் தன்னை தள்ளி அவமான படுத்தியதும் சேர்ந்து கொள்ள

“சீனியர் மேல கையை வைக்குற! என்ன தைரியம்டா உனக்கு?” என்று உறுமியபடி ஜெய்யின் மீது பாய்ந்தான் கிரண்.

அதற்குள் கூட்டம் கூடியிருக்க, ரூபினும் வேதிக்கும் சேர்ந்து ஜெய்யை தடுக்க கௌதம் மற்றும் வேறு சிலரும் கிரணை தடுத்திழுத்தனர்.

இங்கு நடந்த கலவரம் காட்டுத்தீ போல் பரவி பிரின்ஸிபாலையும் எட்டியது.

நடக்கவிருந்த பிரச்சனையை அப்போதைக்கு எல்லோரும் சேர்ந்து தடுத்திருந்தாலும் ஜெய்யின் மீதான க்ரோதமும் பொறாமையும் கிரணிடம் வளர்ந்து வேர் விட்டது.

கல்லூரியின் வழக்கபடி அடிதடியில் இறங்கிய மாணவர்கள் மேல் வழக்கு பதிவு செய்து, விசாரித்து, கடைசியாக என்ன தண்டனை என்று முடிவு எடுக்க படும்.  இதற்கான தனி குழுவும் கல்லூரியின் நிர்வாகத்தின் கீழிருந்து செயல்பட்டது.

அடுத்த நாளே, ஜெய்யும் கிரணும் விசாரணைக் குழுவை சந்திக்க வேண்டுமென அறிவிப்பு பலகையில் நோட்டீஸ் போடப்பட்டிருந்தது.

Episode 13

Episode 15

முத்து ஒளிரும்…

{kunena_discuss:1038}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.