(Reading time: 30 - 60 minutes)

நான் எது சொன்னாலும், என்னை அடக்குறியே… இதோ வரான் பாரு, வில்லன்! சரூக்கு வேற பூவை பிடிக்குமே! போச்சு போச்சு.. எல்லா போச்சு.. மனது கிடந்து தவித்தது. 

இத்தனை நேரமிருந்த இதம் மறைந்து உடலெங்கும் கோபம் பரவியது.

அதற்குள் சரயூவின் அருகில் வந்திருந்த கிரண், ஒரு குளிர் புன்னகையோடு அவளிடம் பூங்கொத்தை நீட்டினான்.  

தயக்கமேது இன்றி அதை வாங்கினாள்.  வண்ண வண்ண மலர்களும், அவை சுமந்து வந்த வாசமும் அவளின் சந்தோஷத்தை கூட்டியது.  பூங்கொத்தை முகத்தருகே உயர்த்தி கண்களை மூடி வாசம் பிடித்தவளின் முகமும் மலர்ந்தது.

மறுப்பின்றி பூங்கொத்தை வாங்கியதும், மலர்களின் வாசம் பிடித்து அவள் மலர்ந்ததும், கர்வம் தலைதூக்க ஜெய்யிடம் கேலிப் பார்வையையும், புன்னகையையும் வீசினான்.

நண்பர்கள் எல்லோரும் அதிர்ந்து நின்றிருந்தனர்.  கிரணின் பார்வையை பின் தொடர்ந்தவர்களின் கண்கள் ஜெய்யிடம் நிலைத்தன.

இறுகிய முகமும், சிவந்த கண்களுமாக தன் கோபத்தை சிரமபட்டு கட்டுபடுத்தியபடி கிரணை முறைத்தான்.   

கோபம் ஒரு புறமிருக்க, சரயூவின் செயல் அவனை தவிப்பிக்குள்ளாக்கியது.  தன் காதல் மீதான அபார நம்பிக்கையை, அவளின் மலர்ந்த முகம் அசைத்துப் பார்த்தது.  சற்று முன் அவனை ரசிக்க வைத்த அதே மலர்ந்த முகம், இப்போதோ மனதினுள் அச்சத்தை விதைத்தது அவனது அனுமதியின்றியே. 

காலை, சரயூவை ஜெய் தாங்கியிருந்ததைப் பார்த்து கோபத்தோடு அவர்களை நோக்கி ஓடிய கிரணை பெரும்பாடு பட்டு இழுத்து சென்ற கௌதமின் மூளைதான் இப்போது செயலானது.

ஜெய்யின் மீதிருந்த கோபம், தன்னை இழுத்து சென்ற நண்பனின் மேல் திரும்பியது. 

கௌதமிடமிருந்து விடுபட்டவன், அவன் சட்டையை பிடித்து

“நான், உனக்கு ஃப்ரெண்டா? இல்லை அந்த சஞ்சய் ஃப்ரெண்டா?” என்று உறுமினான்.

“இதுலென்னடா சந்தேகம்! நீதான் என் ஃப்ரெண்டு” என்றான் கௌதம், மிகவும் அமைதியாக.

அவனின் அமைதி கிரணை குழப்பவும் சட்டையிலிருந்து கைகளை இறக்கினான்.

“அப்றம் எதுக்குடா என்னை இங்க இழுத்துட்டு வந்த? அந்த சஞ்சயை உண்டு இல்லைனு செய்திருப்ப” கோபத்தில் அங்குமிங்குமாக நடந்து கொண்டே நண்பனை முறைத்தான்.

“அது நடந்திட கூடாதுனுதான் உன்னை விடாம இழுத்திட்டு வந்ததே”

நண்பனின் செயலின் அக்கறை புரிந்ததும், தன்னுள் கோபம் குறைந்ததை உணர்ந்தான். 

“எனக்கு சரயூ வேணும்!” என்று ஏக்கமாக சொன்னவனை அணைத்து கொண்டான் கௌதம்.

இப்போது, நண்பனின் திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறான் கிரண்.

கண்ணுக்கு தெரியும் தொலைவில் நின்று, இங்கு நடப்பதை பார்த்துக் கொண்டிருந்த கௌதமிடமாக திரும்பி கட்டை விரலை உயர்த்திக் காட்டினான்.

தவிப்போடு நின்றிருந்த ஜெய்யிடம் இன்னொரு ஏளனப் பார்வையை வீசிவிட்டு

“ஐ லவ் யூ, சரயூ!” என்றவனின் கண்களில் இப்போது காதல் வழிந்தது.

இதுதான் என்று முன்பே தெரிந்திருந்த போதும், அந்த வார்த்தைகள் ஜெய்யிற்கு வலியை தந்தன.

‘என்ன சொல்ல போறாளோ?’ பதைபதைப்பும் தவிப்புமாய் ஒரு மனம்.

‘சரினு சொல்லிடாத சரூ! என்னோட நம்பிக்கைய பொய்யாக்கிடாத!’ எதிர்ப்பார்ப்பும் இறைஞ்சலுமாய் மறுமனம்.

கண்கள் அவளை வெறித்தன.

ஜெய்யின் நிலையை உணர்ந்த வேதிக், அவனின் கையை அழுத்தி தைரியமூட்டினான்.

கிரணின் வார்த்தைகளால் அவளின் முகம் முதலில் சிறு அதிர்ச்சியை வெளிபடுத்தி பின் இயல்புக்கு திரும்பியது.

இத்தனை நேரம் வேகமாக துடித்த ஜெய்யின் இதயம் சட்டென அமைதியாகி போனது.  தனது துடிப்பை நிறுத்திவிட்டு அவளின் பதிலுக்காக காத்திருந்தது.

“தாங்க் யூ, கிரண்! பட் நாட் இன்ட்ரெஸ்டெட்” எந்தவித தயக்கமோ தடுமாற்றமோ இல்லாமல் வந்தது அவளது பதில்.

அவளின் முதல் பாதி வாக்கியத்தில் தன் கூட்டை பிரிந்திருந்த ஜெய்யின் உயிர் மீதி பாதியில் மறுபடியும் வந்து ஒட்டிக் கொண்டது.  அமைதி காத்த இதயம் படபடக்க ஆரம்பித்தது.  உள்ளத்தில் பொங்கிய மகிழ்ச்சியில் துள்ளி குதித்து உரக்க கத்த வேண்டும் போலிருந்தது.  கால்கள் ஒரு நிலையில் இல்லாமல் நடனமாடின.

ரூபினையும், வேதிக்கையும் ஆரத் தழுவிக் கொண்டான்.  அதே போல் சரயூவையும் கட்டிக் கொள்ள வேண்டுமென கைகள் பரபரத்தன.  அடக்கிக் கொண்டு அவளைப் பார்க்க மட்டும் செய்தான்.

ஜெய்யின் மனநிலைக்கு முற்றிலும் எதிராக இருந்தது கிரணின் நிலை.

அவள், தன் காதலை ஏற்கவில்லை என்பதை உள்வாங்கவே சிறிது நேரம் தேவைப்பட்டது.  அவள் வேறு யாரையும் காதலிக்கவில்லை என்பதை சரியாக கணித்தவன், தன் காதலை ஏற்பாளா என்று மருந்துக்கும் யோசித்திருக்கவில்லை.  அத்தனை நம்பிக்கை, அவள் மேல், தான் கொண்ட காதலில்; அது கைகூடும் என்பதில்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.