(Reading time: 30 - 60 minutes)

தன் இதழ்களை குவித்து, அவன் காதோரம் மென்மையாக ஊதி விடவும், அது அவனுள் புயலைக் கிளப்பியது.   

மனதுக்கு அவனிட்ட கட்டுபாடுகளையெல்லாம் அந்த சூறாவளி அடித்து தூக்கியிருந்தது.  தன்னுளிருந்த காதல்த்தீயை அவளுக்கும் பற்ற வைத்து விட அவசரமாக புறப்பட்ட கைகளுக்கு தடையானது வேதிக்கின் செயல்.

“ஃபோன் அடிச்சிட்டே இருக்கு... அதை எடுத்து பேசாம, நான் சொல்றது கூட தெரியாம, எந்த லோகத்துல இருக்க நீ?” என்று கூறி, அவன் கையில் ஃபோனை திணித்திருந்தான்.

உணர்வுகளின் பிடியில் சிக்கிக் கொண்டிருந்தவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

திருவிழாக் கூட்டத்தில் தொலைந்து போன குழந்தையை போல ஒரு நிமிடம் திரு திருவென முழித்தான்.  தன்னை சுற்றி யார் யார் இருக்கிறார்கள்? என்ன நடக்கிறது? தான் செய்யவிருந்தது என்ன? என ஒவ்வொன்றாக புரியவும் அதிர்ச்சியாக இருந்தது.

அய்யோ! என்ன செய்யவிருந்த? ஒரு நிமிஷத்துல எல்லாமே தப்பாயிருக்குமே! என்னை பற்றி, சரூ என்ன நினைச்சிருப்பா?

ஆமா! அவள் நினைச்சுட்டாலும், அப்படியே நீ அவளை நினைக்கவிட்டுட்டாலும்.  எவ்வளவு அருமையான சந்தர்ப்பம் கிடைச்சது… காதலை இப்பவும் சொல்லாம… ம்ஹீம், நீயெல்லா தேர மாட்ட! உன்னோட மனசா, நான் பிறந்தது ரொம்ப பெரிய தப்பு.  கடவுளே, எனக்கு வேறேங்காவது நல்ல ஆப்பர்ச்சுனிடி இருந்தா சொல்லுங்களே என்று தலையில் அடித்து கொண்டு புலம்பியது ஜெய்யின் மனது.

ஜெய், மனதுக்கு பதிலேதும் சொல்லாமல் அமைதி காத்தான்.

இப்பவும் ஒன்னும் கெட்டுபோகல.  பக்கத்தில தானே இருக்கா, அவளோட கையை பிடிச்சு ஒரு முத்தம் கொடுத்து, அப்…. என்று ஏதோ மனது சொல்லிக்கொண்டிருக்கும் போதே ஜெய் அங்கிருந்து அவசரமாக எழுந்து நடந்தான்.

‘வலி அதிகமா இருக்கு போலும், அதான் எழுந்து போயிட்டான்.  அம்மாட்ட கேட்டு இவனுக்கு ஹெல்ப் செய்யனும்’ என்று நினைத்தபடி சாராதாவை அழைத்தாள்.

இப்போ எதுக்கு நீ, பேய பார்த்த மாதிரி இப்படி, அடிச்சு பிடிச்சு வாஷ் ரூமுக்கு ஓடி வந்த?

மனதின் கேள்விக்கு ஜெய்யிடமிருந்து எந்த பதிலுமில்லை.

கண்ணாடியில் தன்னைப் பார்த்து பெருமூச்சுகளை வெளியேற்றியவன், பின்னங்கழுத்தில் கைகளைக் கட்டிக்கொண்டு கண்களை மூடி கொண்டான்.  அப்போதும் சரயூவின் நினைவுகள், அவளின் பெண்மை, அந்த நெருக்கம், அவன் கைகள் உணர்ந்த மென்மை, இடது காதோரம் இன்னமும் ஒட்டியிருந்த அவள் வாயிலிருந்த வந்த ஈரக்காற்று.  இவைகளால் அவனுள் எக்கு தப்பாக ஏறியிருந்த மோகமென எல்லாம் அவனை விடாது விரட்டியது.

எதை பார்த்து இவ்வளவு பயமும், யோசனையும்? சரூவை காதலிக்கிறதால உனக்குள்ள வர இயற்கையான எண்ணங்களும் உணர்வுகளும் தப்பு கிடையாது.  அவள், உன்னை தப்பாவும் நினைக்க முடியாது என்று மனது சொல்லவும்

உனக்கு இது புரியாது! நான் அவளை காதலிக்கிறது உண்மை; ஆனா அதை அவளுக்கு சொல்லவுமில்லை, அவள் என்னோட காதல ஏத்துக்கவுமில்லை.  நீ சொல்ற மாதிரியெல்லாம் செய்தா, அவன்னு இல்லை எந்த பொண்ணா இருந்தாலும் அதை காதல்னு சொல்லமாட்டா என்று சீறினான் ஜெய்.

சரி, உன்னோட வழிக்கே வரேன்! அப்போ எப்போதா அவட்ட காதல சொல்றத உத்தேசம்?

அன்னைக்கு சொன்னதுதா இன்னைக்கும் சொல்ற! அவள் என்னை பார்த்து வெட்கபடுவா, அப்போ என்னோட காதல சொல்லுவ.

நீயெல்லா திருந்தாத கேசு! எப்படியோ போ! என்று சொல்லி அலுத்து கொண்டது மனது.

சிறிது நேரத்தில் மனதையும் உணர்வுகளையும் கட்டுக்குள் கொண்டுவந்தான்.  கைகடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தபோது நாராயண் சர் நினைவுக்கு வரவும், வகுப்பறைக்கு விரைந்தான்.

தன்னோடு தானே போராடிய போதும் சரயூவின் சந்தோஷம் அவனுள் இனிமையான இதத்தை பரப்பியிருந்தது.  ஆனால் அந்த இனிமைக்கு ஆயுள் குறைவென அன்று மதியமே, கிரணின் செயல் நிரூபித்திருந்தது.

உணவு இடைவெளியின் போது காலேஜ் காண்டினை நோக்கி படையெடுத்திருந்தனர் நண்பர்கள்.

சரயூ மற்றும் சௌம்யா ஏதோ பேசியபடி முன்னே நடக்க, அவர்களின் பின்னால் மற்ற மூவருமாக நடந்து கொண்டிருந்தனர்.

ரூபின், வேதிக் பேச்சில் பெயருக்கு ஏதோ சொல்லியவனாக தனக்கு முன்னால் சென்றவளை ரசித்து கொண்டிருந்தான்.  சந்தோஷத்தில் பூரித்திருந்த அவளின் முகம், சைஹாத்ரி மலைத் தொடர்ச்சியின் உயர்ந்த மரங்களிலிருந்தபடி தன்னை ஈர்த்த பயினியை நினைவு படுத்தியது. 

ஒரு முறை அவளையும் அங்கு கூட்டிச்சென்று பயினியைக் காட்டி, ‘உன் முகம் போல் அது’ என்று சொல்ல நினைத்தவனின் பார்வையில் வெவ்வேறு வண்ண வண்ண பூக்கள் நிறைந்த பூங்கொத்து.  அதை கைகளில் ஏந்தி அவர்களுக்கு எதிரில் வந்து கொண்டிருந்தான் கிரண்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.