(Reading time: 10 - 20 minutes)
காகித மாளிகை
காகித மாளிகை

" பானூ! எவ்வளவு பைத்தியக்காரத்தனமா பேசறே ! இப்பொ அவருடைய நடத்தையெ வெச்சி இப்படிச் சமாதானப் படுத்திக்கணும்னு சொல்றேன். இருந்தாலும் நடந்துபோனதுக்காகக் கவலெப்பட்டு என்ன லாபம்? கால் நூற்றாண்டு வளர்ந்த வளர்ப்பிலே ஒரேயடியா மாறுதல் வரணும்னா அது சாத்தியமில்லே பானூ? நீ கொஞ்சம் பொறுமையா இருக்கணும். அவசரப்படாதே."

 

" அண்ணா! பண்டிகெ அன்னிக்கு ஒருநாள் வீட்லே இருக்கணும்னு வேண்டிக்கிட்ட மனெவியெ நிராகரிச் சிட்ட மனுஷனிடத்திலே எத்தனெ ஜன்மத்லே மாறுதல் வரும்னு சொல்றே? என் பொறுமெக்குப் பயன் என்னன்னு சொல்றே?"

 

" அவசரப்படாதே பானூ! நான் மாமா செய்யற்து சரின்னு சொல்லே. நீ சாந்தமா இருக்கற்து தவர வேற வழி இருக்குதா சொல்லு? அவருக்குச் சீட்டாட்டப் பைத்தியம் தவர உன்மேலே ஏதாவது வெறுப்பு இருக்குதுன்னு சொல்றியா? நீ சிந்தித்துப் பார் பானூ!"

 

பானு பெருமூச்சு விட்டாள். " உனக்குத் தெரிஞ்சது ரொம்ப குறெச்சல் அண்ணா! நீ இங்கே படிக்கவர்றேன்னு எழுதினப்பொ எனக்கு பயமா இருந்தது, என் குடுத்த‌ன லட்சணம் உனக்குப் புரிஞ்சி போயிடும்னுதான். ஆனா இன்னிக்கி எனக்கு நானே எல்லாம் வெளியே சொல்லிக்கிட் டிருக்கறேன். நான் என்ன செஞ்சா இந்த வேதனெ உனக்குப் புரியும்? எவ்வளவு திகிலோட குமுங்கிக்கிட் டிரு்க்கிறேங்கறது உனக்கு எப்படிப் புரியப்போவுது? இது உனக்கு நீயே தெரிஞ்சக்கணும். அவ்வளவுதான்!"

 

நான் கேட்டுக்கொண்டே பேசாம லிருந்தேன். என்னவோ கேட்கவேண்டும் போல் இருந்தது. ஆனால் அது சமயமல்ல. பானு இயற்கையாகவே வேகம் நிறைந்தவள். .கணவனின் நடவடிக்கைகள் தவறு என்று பட்டாலும், தன்னுடைய ஆசைகள் அடி பட்டுப் போகும்பொழுதும் வேதனைதான் உண்டாகும். மாமாவை மிஞ்சிய சூதாடிகள் நூற்றுக் கணக்கானவர்களைப் பார்க்கும் நான் அவசரப் படுவதில் பொருளில்லை. அந்த வெறியில் அவர்கள் என்ன செய்தாலும் வியப்படைய வேண்டிய தில்லை. மெதுவாகப் பேச்சை மாற்றினேன். பள்ளி வாழ்க்கையை நினைவுபடுத்தினேன். அந்தக்கால நண்பர்களை எல்லாம் நினைவுக்குக் கொண்டு வந்தேன். பல்லைக் கழகச் செய்திகளைச் சொல்லலானேன்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.