(Reading time: 9 - 17 minutes)
Muthu Sippi
Muthu Sippi

  

"என்னடா உனக்கு? உடம்பு ஏதாவது சரியில்லையா என்ன?" என்று கேட்டுக் கொண்டே. பவானி அவன் நெற்றியிலும் மார்பிலும் கை வைத்துப் பார்த்தாள். தாயின் முகத்தில் வேதனை வருவதைக் கவனித்த பாலு. கண்களில் நீர் ததும்ப, ”எனக்கு இந்த ஊரில் பொழுதே போகவில்லை அம்மா. நாள் பூராவும் இப்படிக் கொட்டு கொட்டென்று எப்படி உட்கார்ந்திருக்க முடியும்?" என்று கேட்டான்.

  

பவானிக்கு வருத்தமாக இருந்தது. பாலுவின் அப்பா இருந்தால் அவனை அழைத்துக் கொண்டு நாலு இடங்களுக்குப் போய் வருவார். அத்தை என்றும் சித்தப்பா பெரியப்பா என்றும் சீராட்டப் பலர் வருவார்கள். விடுமுறைக்காக அவர்கள் வீட்டுக்குப் போய் வருவான். தகப்பனைச் சேர்ந்த குடும்பத்தினருடன் தொடர்பு அறுந்து போன மாதிரிதான். வாசு இறந்தபோது வந்துபோனவர்கள், பிறகு பாலுவைப் பற்றி விசாரிக்கவே இல்லை .

  

எதிரிலே உட்கார்ந்திருக்கும் மகனின் முகவாயை ஆதுரத்துடன் தடவிக் கொடுத்தாள் பவானி. அவன் கன்னங்கள் இரண்டையும் கையால் வருடிக் கொண்டே ”எண்டா லீவுக்கு உன் மாமா வீட்டுக்குப் போய்விட்டு வாயேன். அங்கே சுமதி கூட இருக்கிறாள் உன்னுடன் விளையாட என்று சொன்னேனே! நீதான் நானும் வர வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தாய்" என்றாள்.

  

பாலு பதிலளிப்பதற்கு முன் கொல்லைப் பக்கம் ஏதோ சத்தம் கேட்டது. கல்யாணராமன் வீட்டில் மாடு கறப்பதற்காக ஆள் வந்திருக்கிறான் என்பது தெரிந்ததும், பவானி கூடத்தை விட்டு எழுந்து கொல்லைப் பக்கம் சென்றாள்.

  

அதே சமயம் வாசற் கதவைத் திறந்து கொண்டு மூர்த்தி உள்ளே வந்தான். சோர்ந்து கிடந்த பாலுவின் உள்ளம் துள்ளி எழுந்தது. ”மூர்த்தி மாமா! வந்து விட்டீர்களா? எனக்கு நீங்கள் இல்லாமல் பொழுதே போகவில்லை. இந்தாருங்கள் சாவி. மாமாவும், மாமியும் கல்யாணத்துக்குப்போய் இருக்கிறார்கள். நாளைக்கு வாருவார்கள்" என்று பொரிந்து தள்ளிக் கொண்டே, கூடத்தில் ஆணியில் மாட்டியிருந்த சாவியை எடுத்து அவனிடம் கொடுத்தான்.

  

கையில் பால் செம்புடன் உள்ளே வந்த பவானி ஒரு கணம் அவனைப் பார்த்துத் தயங்கி நின்றாள்.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.