(Reading time: 38 - 75 minutes)
Akal vilakku - Mu. Varataracanar
Akal vilakku - Mu. Varataracanar

வந்துவிடுவேன்" என்று அவனிடம் சொல்லிவிட்டு, வேறோர் இடத்துக்கு எங்களை அழைத்துச் சென்றான். அங்கே மட்டமான உணவு கிடைத்தது. வேறுவழி இல்லை என்று மூவரும் உண்டோம். அங்கிருந்து தேநீர்க் கடையை நோக்கி வந்தபோது, ஆசிரியர் சந்திரனைப் பார்த்து, "நாளைக்கு ஊருக்குப் போகலாம் வா" என்றார்.

  

"இனிமேல் நான் ஏன் வரணும்? அம்மாவும் இல்லையே" என்றான் அவன்.

  

சாமண்ணா கனிவான குரலில், "சந்திரா! என்னையும் சாகடிக்காதே. பேசாமல் புறப்பட்டு வாப்பா. அத்தை உன் ஏக்கமாகவே இருக்கிறாள். உன் தங்கை இருக்கிறாள். இப்படிச் சொல்லாமல் விட்டுவிட்டு வந்தாயே. நாங்கள் என்ன பாவம் செய்தோம்? உன்னை ஏதாவது கண்டித்தோமா? வெறுத்து ஒரு சொல் சொன்னோமா? ஊரில் கேட்கிறவர்களுக்குப் பதில் சொல்ல முடியவில்லை அப்பா. இங்கே ஏன் இப்படித் திக்கற்றவன் போல் திரியணும்?" என்றார்.

  

சந்திரன் மறுமொழி கூறவில்லை.

  

சாமண்ணாவையும் ஆசிரியரையும் முன்னே போகச் செய்துவிட்டு, நான் சந்திரனோடு தனியே பேச முயன்றேன். எவ்வளவு முயன்றாலும் சந்திரனுக்கு அறிவுரை கூறுவதற்கு எனக்குத் தயக்கமாக இருந்தது. உண்மையாகவே எனக்குத் தாழ்வு மனப்பான்மை இருந்தது என்பதை அப்போது உணர்ந்தேன். அன்று சந்திரன் என்னைப் புறக்கணிக்கவில்லை. இகழ்ந்து நடக்கவில்லை. ஆனாலும், அவனோடு ஒத்த மனப்பான்மையோடு நட்புரிமையோடு அறிவுரை கூற என்னால் முடியவில்லை. என்ன என்னவோ எண்ணிக் கொண்டு வந்தேன். எண்ணியதை எல்லாம் விட்டு, "நாளைக்கே புறப்பட்டுப்போகலாம். அப்பா மிகவும் நொந்து போயிருக்கிறார்?" என்றேன்.

  

"இனிமேல் அங்கே வந்து வாழ்க்கை நடத்த எனக்கு மனமே இல்லை" என்றான்.

  

"உனக்கு யாராவது தீங்கு செய்தார்களா? யாராவது பகையா? உன்னை அன்போடு வரவேற்க எல்லாரும் காத்திருக்கும் இடத்துக்கு வந்தால் என்ன?"

  

"நான் செய்த குற்றம் தான்."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.