(Reading time: 38 - 75 minutes)
Akal vilakku - Mu. Varataracanar
Akal vilakku - Mu. Varataracanar

"இங்கே உள்ளவர்களுக்கு ஒன்றும் தெரியக்கூடாது. தெரிந்தால் வீணாக ஆரவாரமாய்ப் போய்விடும் அதற்காகச் சொல்கிறேன்."

  

இரண்டு அடி எடுத்து வைத்து மறுபடியும் நின்றேன்.

  

"எங்காவது ஓடிவிடுவேன் என்று எண்ணுகிறாயா? இங்கேயே இருப்பேன். போய் அழைத்து வந்துவிடு. என் மானத்தைக் காப்பாற்று, வேலு" என்றான்.

  

அவனுடைய குரல் நம்பலாம் போல் இருந்தது. நான் ஆலமரத்தை நோக்கி நடந்தேன். அங்கே வேறு யாரோ அவர்களோடு பேசிக்கொண்டிருந்தது கேட்டது. நான் நெருங்கியதும், பார்த்தாயா! இதோ வந்துவிட்டார். இவருக்காகத்தான் இங்கே காத்திருந்தோம்; போகிறோம்" என்று சொல்லி, ஆசிரியர் அந்தப் புதியவரை அனுப்பினார். அந்த ஆள் என்னை உற்றுப் பார்த்து நகர்ந்தார்.

  

அவர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு அந்த மரத்துப் பக்கம் சென்றேன். அங்கே சந்திரன் இல்லை. என் மனம் திடுக்கிட்டது. வீட்டிற்குச் சென்றானோ என்று அங்கே பார்த்தேன். அவன் வீட்டிலிருந்து வெளியே வந்தது கண்டேன். அவள் பின்தொடர்ந்து வந்து நின்றதும், கண்டேன். மனம் தேறியது. ஏதோ அவசர வேலை என்று பொய் சொல்லிவிட்டு வருகிறான் என்று தெரிந்து கொண்டேன். எங்களை நெருங்கி வந்ததும், மேல்துண்டால் வாயைப்பொத்திக் கொண்டு விம்மினான். "சந்திரா! சந்திரா!" என்று சாமண்ணாவும் விம்மினார். ஆசிரியர் அவனுடைய இடக்கையைப் பற்றிக் கொண்டு தேற்றினார். சந்திரன் ஒன்றும் பேசாமல் முன்னே நடந்தான். நானும் சாமண்ணாவும் பின்னே வர ஆசிரியர் அவனுடன் நடந்தார். வழியில் அவன் விம்மி அழுதானே தவிர, வாய் திறந்து பேசவில்லை. எதிரில் யாரேனும் வந்தபோதெல்லாம், அந்த விம்மலையும் அடக்கிக்கொண்டு நடந்தான்.

  

பழைய தேநீர்க் கடைக்குத்தான் எங்களை அழைத்துச் சென்றான். விளக்கொளியில் பார்த்தபோது அவனுடைய கண்கள் சிவந்திருந்தன. "இங்கே இருங்கள். இதோ வருகிறேன்" என்று சொல்லி உள்ளே நுழைந்தான். எங்களுக்கு வழிகாட்டிய அந்த இளைஞனிடம் சிறிது நேரம் ஏதோ பேசிக் கொண்டிருந்தான். பிறகு இருவரும் எங்களை நோக்கி வந்தார்கள். "இவர்களுக்கு எங்காவது இடம் கொடு. இரவு உன்னோடு இருக்கட்டும். ஓட்டலுக்கு அழைத்துக் கொண்டு போய்ச் சாப்பிட்டு வருவோம். நீ எங்கேயாவது போய் விடாதே. இங்கேயே இரு.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.