(Reading time: 32 - 63 minutes)
Vata malli
Vata malli

புதுப்பணம். மரகதமும், ஆயிரம் கவலைகளிலும் தனக்கு ஒரு அற்புதன் கிடைத்திருக்கிறான் என்று தம்பி சொன்ன சொல்லை நம்பி சிறிது சந்தோஷமாகப் போயிருக்கிறாள். அவள் திரும்பி வர இன்னும் நேரமாகும்.

  

சுயம்பு, துடியாய்த் துடித்தான். படிப்பு போய்விட்ட கவலை, அவனுக்கும் இல்லாமல் இல்லை. எதிர்காலமே அற்றுப்போய், கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்க முடியாமலும், நிகழ்காலத்தில் நிற்க முடியாமலும், சுருண்டு கிடந்தான். எவ்வளவு நேரம் அப்படிக் கிடக்க முடியும். அங்குமிங்குமாய் லாந்தினான். அக்காவின் கல்யாணம் முடிந்ததும், தற்கொலை உட்பட எதையாவது ஒன்றைச் செய்ய வேண்டுமென்றும் நினைத்துக்கொண்டான்.

  

சுயம்பு ‘இருமல்’ சத்தம் கேட்டு உள்ளே இருந்தபடியே வெளியே பார்த்தான். முற்றத்தில் மலர்க்கொடி நிற்கிறாள். அவனைப் பார்த்ததும் பாராதது போல் ‘அண்ணி, அண்ணி’ என்று கனைக்கிறாள். சுயம்பு, உள்ளே இருந்தபடியே குரலிட்டான். தனிமைத் துயர் தானாய் போன மகிழ்ச்சி.

  

உள்ளே வா மலரு. சும்மா வா. நமக்குள்ள என்ன இருக்கு...”

  

மலர்க்கொடிக்கு தலையை யாரோ தட்டிவிடுவது போலிருந்தது. உடம்பு முழுவதும் ஒரு வேக்காடு. அதன் உள்ளேயோ ஒரு வெந்நீர்த்தனமாக இதம் காணத் துடிக்கும் சுகத்தை, அந்த சுகமே சுயமாய் வந்ததுபோல ஒரு நெகிழ்ச்சி. ஆனாலும் அவள் பிகுவோடு வந்தாள். தாழ்வாரத்தில் ஏறி நின்றவளைப் பார்த்து அவன் “சும்மா வாயேண்டி... நீ யாரு... நான் யாரு... வா வா” என்றான். அவன், அப்படிச் சொல்லச் சொல்ல, அந்தச் சொற்களே அன்று பூந்தோட்டத்தில் அவள் இதயத்தில் ஏற்படுத்திய சுருக்கங்களை நிமிர்த்தின. விளையாட்டுக்காகத்தான் ‘அவர்’ அப்படி பூவை வைத்திருப்பார் என்று ஒரு சமாதானம். யாரையோ அக்கம் பக்கம் ஆளைப் பார்த்து விட்டு, இவர் அதைச் சொல்லி தன்னைக் கலவரப் படுத்தாமல் பூவை, திருப்பிக் கொடுக்க நேரமாகும் என்று, அப்படியே போயிருக்க வேண்டும் என்ற சுயவிருப்ப சிந்தனை. ஆசைக்கு இலக்காக இருந்தவன் படிப்பை முறித்து வந்ததில் ஒரு துக்கம். அதுவும் ஒரு பெண் விஷயம் என்பதால், படு துக்கம். இவளும் ஒரு வகையில் துஷ்டி கேட்கவும் வந்திருக்கிறாள் என்று சொல்லலாம். ஆனாலும், அவனைப் பார்த்த உடனே, அதுவும், அவன் அவ்வளவு பேசியபிறகு, துக்கமே, சுகமாக மாறியது. ஆனாலும் மீண்டும் வீறாப்பாய்க் கேட்பதுபோல் கேட்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.