(Reading time: 21 - 42 minutes)
Thulasi maadam - Naa.Parthasarathy
Thulasi maadam - Naa.Parthasarathy

வாசலில் பார்த்ததும் பெரிய ஆச்சரியமாயிருந்தது. ஆரத்தி சுற்றிக் கொட்டும் போது பாடும் பாட்டுக்காக மேளமும் நாதஸ்வரமும் சகல வாத்தியங்களும் சில நிமிஷங்கள் ஒலிப்பது தவிர்த்து நின்றன. காமாட்சியம்மாளும் வசந்தியும் தான் ஆரத்தி சுற்றிக் கொட்டினார்கள். காமாட்சியம்மாளே பாட்டும் பாடினாள். "பத்திரம்! வலது காலை எடுத்து முன்னே வச்சு உள்ளே வா..." என்று காமாட்சியம்மாளே கமலிக்குச் சொல்லி அழைத்துக் கொண்டு போனது இன்னும் நம்ப முடியாததாக இருந்தது. யாரும் கவனிக்காமல் பேசாமல் கொள்ளாமல் விட்டுவிட்ட தனிமையில் தனக்குத் தானே நினைத்து நினைத்து காமு மெல்ல மனம் மாறியிருக்க வேண்டும் என்று நினைத்தார் சர்மா. காமாட்சியம்மாளே, "ரெண்டு பேரும் சித்தே இப்பிடி என் பின்னாடி வாங்கோ..." என்று மணமக்களைத் தன் படுக்கையருகே அழைத்துச் சென்றாள். அதுதான் நல்ல சமயமென்று வேணு மாமா, "இந்தாடா ரவி! அம்மாவை ஆசீர்வாதம் பண்ணச் சொல்லு!..." என்று அட்சதை நிரம்பிய வெள்ளிக் கிண்ணத்தை அவனிடம் நீட்டினார்.

   

ரவி அட்சதையை அம்மா கையில் கொடுத்துவிட்டுக் கமலியோடு அவளை நமஸ்காரம் செய்தான். "தீர்க்காயுஸா இருக்கணும்" - என்று அம்மாவின் மெல்லிய குரல் சாதகமாக ஒலித்ததுமே அவர்கள் மனத்தில் பாலை வார்த்தாற்போல இருந்தது.

   

தான் கறந்து வைத்திருந்த பாலில் தன் படுக்கையருகே வைத்திருந்த மலைப்பழங்களில் இரண்டு மூன்றை உரித்து விண்டு போட்டுக் கொஞ்சம் சர்க்கரையும் சேர்த்தபின், "கல்யாணத்திலே பொண்ணுக்கும், மாப்பிள்ளைக்கும் பாலும் பழமும் கொடுக்கணும்னு சாஸ்திரம்டா! நான் அங்கே தான் வரமுடியலே... இந்தா! முதல்லே இரண்டு பேருமா இதைக் கொஞ்சம் சாப்பிடுங்கோ சொல்றேன்" - என்று கமலிக்கும், ரவிக்கும் பாலும் பழமும் கொடுத்தாள் காமாட்சியம்மாள். அந்தப் பரிவு - ஒன்றுமே வித்தியாசமாக நடந்து விடாதது போன்ற காமாட்சியம்மாளின் அந்த அன்பு எல்லாம் ரவியையும் கமலியையும் மற்றவர்களையும் திணற அடித்தன.

   

திடீரென்று நின்று கொண்டிருக்கும்போதே தலை சுற்றி மயங்கி விழுவது போல தள்ளாடும் அம்மாவை ரவி பாய்ந்து தாங்கிக் கொண்டான்.

   

"நீ சித்தே புருஷா பக்கம் போய் இருடாப்பா. இப்போ எனக்கு என் மாட்டுப் பொண்ணோட தனியா ரெண்டு வார்த்தை பேசணும்..."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.