கூறவில்லை. இரண்டாவது மனைவியும் நான்கு குழந்தைகளை விட்டு விட்டுப் போய் விட்டாள்
"ஐயோ பாவம்! ஏழு குழந்தைகளை வைத்துக்கொண்டு அவன் என்ன பண்ணுவான்
என்று விசனித்தாள் விசாலாட்சி, துக்கச் செய்தி வந்தபோது.
"என்ன பண்ணுகிறது? யாரையாவது சமையலுக்கு வைத்துக் கொண்டு குழந்தைகள் பெரியவர்கள் ஆகும் வரை காலத்தைக் கடத்த வேண்டியது தான்" என்றார் ராமபத்திரய்யர்.
"பணங் காசுக்குக் குறைவில்லாமல் இருந்தாலும், வீட்டிலே ஒருத்தி இருக்கிற மாதிரி ஆகுமா இதெல்லாம்?" என்று விசாரப்பட்ட விசாலாட்சி அன்றே துக்கம் விசாரிக்கத் தம்பியின் வீட்டுக்குப் புறப்பட்டு விட்டாள்.
ஊரிலிருந்து திரும்பி வந்த பிறகு பத்து தினங்கள் வரையில் முத்தையாவின் செல்வத்தைப் பற்றியும், அவன் தன் இளைய மனைவிக்குக் கல்லுக் கல்லாக நகைகள் செய்து பூட்டி இருந்ததையும் சொல்லிக் கொண்டிருந்தாள் விசாலாட்சி. "அரைப் பவுன் மாலையும், தங்க ஒட்டியாணமும் கண்ணைப் பறிக்கிறது. பாழும் பெண் இருந்து அனுபவிக்கக் கொடுத்து வைக்கவில்லை" என்று அங்கலாய்த்துக் கொண்டாள். கெட்டிக் கரைப் புடவைகள் பீரோ நிறைய அடுக்கி வைத்திருக்கும் பிரதாபங்களை ஓயாமல் அளந்து கொண்டிருந்தாள். ராமபத்திரய்யருக்கு எரிச்சல் பற்றிக்கொண்டு வந்தது.
"ஏண்டி, நீ துக்கம் விசாரிக்கப் போனாயா அல்லது வீட்டைச் சோதனை போடப் போனாயா? உன்னுடைய சகிக்க என்னால் உளறல் பத்து நாட்களாக முடிய வில்லையே!" என்று அவர் அதட்டிய பிறகுதான் விசாலாட்சி ஓய்ந்தாள்.
நாற்பத்தி மூன்று வயதானாலும் முத்தையாவுக்கு இன்னொரு விவாகம் செய்து கொள்ள வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டது. முதல் தாரத்துக்குப் பெண் இருந்தாள். அவளுக்குக் கல்யாணம் நடந்தால் அதை விமரிசையாக நடத்துவதற்கு என்னதான் பணம் இருந்தாலும் வீட்டில் ஒரு பெண் இருக்கிற மாதிரி ஆகாது என்று நினைத்து முதலில் மூன்றாந் தாரமாகத் தான் கால்யாணம் பண்ணிக் கொண்டு பிறகு மகளின் கல்யாணத்தை நடத்தத் தீர்மானித்தான்.